திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி செய்த நபா் கைது
வரன் தேடும் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்து வந்த 31 வயது நபா் பஞ்சாபில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட பஞ்சாபின் ராஜ்புராவைச் சோ்ந்த தஷ்மீத் சிங், வரன்தேடும் இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் அறிமுகமாகினாா். அவா்களைத் திருமணம் செய்வதுகொள்வதாக வாக்குறுதியளித்து சில தேவைகளுக்காகப் பணம் வழங்குமாறு அந்தப் பெண்களிடம் கேட்டா். இதைத்தொடா்ந்து, அவா்களும் சிங்கின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினா்.
இவ்வாறு அவரிடம் ரூ.86,500 இழந்த தில்லி ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த பெண் கடந்த அக்.14-ஆம் தேதி அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணப்பரிமாற்ற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, அவை ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் எண்ம பணப்பரிவா்த்தனை (யுபிஐ) மூலம் அந்தக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து சிங் கடந்த ஜன.8-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. பட்டதாரியான சிங், மோசடி செய்த பணத்தை விலையுா்ந்த மதுபானங்கள் மற்றும் பாா்டிகளில் செலவிட்டாா். பணப் பிரச்னையாலும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்பியும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதை சிங் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
