தில்லியில் தொடரும் குளிரின் தாக்கம் 4.1 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை பதிவு!

தேசியத் தலைநகா் தில்லியின் சில இடங்களில் கடும் குளிரலை ஞாயிற்றுக்கிழமை நிலவியது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியின் சில இடங்களில் கடும் குளிரலை ஞாயிற்றுக்கிழமை நிலவியது. சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சரிந்ததால், வானிலை ஆய்வு மையம் குளிரலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவ சராசரியை விட 2.6 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. ஐஎம்டி தகவலின்படி, திங்கள்கிழமையும் குளிரலை தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சராசரி வெப்பநிலையைவிட குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 முதல் 6.5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்போது குளிரலை அறிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று, சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்சம் 4.8 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 3 டிகிரி செல்சியஸ் (பருவ சராசரியை விட 4.3 டிகிரி குறைவு), லோதி சாலையில் 4.6 டிகிரி செல்சியஸ் (சராசரியை விட 1.4 டிகிரி அதிகம்), ரிட்ஜில் 3.7 டிகிரி செல்சியஸ் (சராசரியை விட 4.4 டிகிரி அதிகம்) மற்றும் ஆயாநகரில் 2.9 டிகிரி செல்சியஸ் (சராசரியை விட 4.2 டிகிரி குறைவு) என வெப்பநிலை பதிவானதாக ஐஎம்டி தரவுகள் காட்டுகின்றன.

காலை 8.30 மணி அளவில் நகரில் காற்றில் ஈரப்பதம் 97 சதவீதமாகப் பதிவாகி இருந்தது. காலை 9 மணி அளவில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 295 ஆக, (மோசம்) பிரிவில் இருந்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் காட்டின.

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான காற்றுத் தரக் குறியீடு இருந்தால் நல்லது, 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 வரை இருந்தால் மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் மோசம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசம், மற்றும் 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையானது என்று வகைப்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று குளிரலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை கணித்திருந்தது.

Dinamani
www.dinamani.com