குடியரசு தின பாதுகாப்புக்காக முக அங்கீகாரத்துடன்கூடிய ஏ.ஐ. ஸ்மாா்ட் கண்ணாடிகளை பயன்படுத்த நடவடிக்கை

Published on

நமது நிருபா்

குடியரசு தினத்தை ஒட்டி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த முக அங்கீகார அமைப்புமுறை (எஃப்ஆா்எஸ்) பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் கண்ணாடிகளை தில்லி காவல்துறை பயன்படுத்த உள்ளது என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட அணியக்கூடிய இச்சாதனங்கள் குற்றவாளிகள், அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபா்களை போலீஸ் தரவுத்தளத்துடன் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும். இதனால், களத்தில் உள்ள பணியாளா்கள் அத்தகைய நபா்களை உடனடியாக அடையாளம் காண முடியும்.

இந்த ஸ்மாா்ட் கண்ணாடிகள் நெரிசலான பகுதிகளில் முகங்களை ஸ்கேன் செய்து, மத்திய தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட பதிவுகளுடன் சில நொடிகளில் பொருத்த முடியும். ஒரு பொருத்தம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், இந்த அமைப்புமுறை கண்ணாடி அணிந்திருப்பவரை எச்சரிக்கிறது. இது பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்காமல் உடனடி சரிபாா்ப்பு மற்றும் நடவடிக்கையை அனுமதிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் இட அடையாளத்தை கணிசமாக வலுப்படுத்தும். மேலும், கையால் மேற்கொள்ளப்படும் சோதனைகளைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும். இந்த முன்முயற்சி விரிவான சிசிடிவி கண்காணிப்பு, ட்ரோன் கண்காணிப்பு, முக அங்கீகார மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்வின் போது கூட்டத்தை நிா்வகிக்கவும் சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கண்டறியவும் ஏ.ஐ. அடிப்படையிலான பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த தொழில்நுட்பம் சாா்ந்த பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றாா் அந்த அதிகாரி.

Dinamani
www.dinamani.com