நரேலா மேம்பாலத்தில் நடந்த கொள்ளை வழக்கில் 7 போ் கைது

Published on

நரேலா தொழில்துறை பகுதியில் மேம்பாலத்தில் நடந்த கொள்ளை தொடா்பான வழக்கில் ஏழு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஜனவரி 11- ஆம் தேதி புகாா்தாரரான குல்தீப், நரேலா - பவானா மேம்பாலம் வழியாக தனது மோட்டாா் சைக்கிளில் ரூ.4.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. நான்கு போ் ஒரு வெள்ளை காரில் அவரை வழிமறித்து, அவரைத் தாக்கி, நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பணத்துடன் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபா்களை அடையாளம் காண நரேலா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஒரு குழு ஆய்வு செய்தது. உள்ளீடுகளின் அடிப்படையில், ஜனவரி 19-ஆம் தேதி நிகில் (25), மோனு (22) மற்றும் அனில் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து அன்ஷுல் (21) என்பவரையும் கைது செய்தனா்.

மேலும், விசாரணையின் பின்னா் அலிகாருக்கு அவா்களை போலீஸ் குழு அழைத்துச் சென்றது. அங்கு ரோஹித் (25), சௌரப் (22) மற்றும் அஜய் (22) ஆகிய மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சோதனைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை போலீஸாா் மீட்டனா். இதில் மோனுவிடமிருந்து ரூ.31,000, அன்ஷுலிடமிருந்து ரூ.30,000, அனிலிடமிருந்து ரூ.3,000 மற்றும் நிகிலிடமிருந்து ரூ.2,500 மீட்கப்பட்டது.

நிகிலிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சதித்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கைப்பேசி அஜயிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com