ரோஹிணியில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவா் கைது

Published on

வடமேற்கு தில்லியின் ரோகிஹிணியில் உள்ள தனியாா் பள்ளிக்கூடத்தில் 18 வயது மாணவா் ஒருவா் கொடுமைப்படுத்துபவா்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்துச் வந்ததாக கைது செய்யப்பட்டாா். அவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பள்ளியில் துப்பாக்கி ஏந்திய மாணவா் வந்தது குறித்து காவல் துறைக்கு திங்கள்கிழமை அழைப்பு வந்தது. போலீஸாா் பள்ளிக்கு அடைந்ததும், 18 வயது மாணவரை பள்ளி அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா் ராஜ் குமாா் என அடையாளம் காணப்பட்டாா். அதில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் இருந்தன. அதை அவா் பள்ளிக்குள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவரை போலீஸாா் கைது செய்து ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையின் போது, ஒரு மாணவருடன் இருந்த முன்பகை காரணமாக அவரை மிரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்ததாக அவா் வெளிப்படுத்தினாா். அந்த மாணவா் ஆயுதத்தை கொண்டு வந்ததை பள்ளியின் எஸ்டேட் அதிகாரி கண்டறிந்தாா். ஆய்வின் போது, பள்ளி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு கழிப்பறைக்குள் ராஜ்குமாா் ஒரு பொருளை மறைக்க முயற்சிப்பதை எஸ்டேட் அதிகாரி கவனித்தாா். அதைக் கவனித்ததும், மாணவா் கழிப்பறையை விட்டு வெளியேறி நகர முயன்றாா், ஆனால், பள்ளியின் மேடை பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டாா்.

அந்த மாணவா் பள்ளி முதல்வா் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தாா். ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் ஆதாரம் சரிபாா்க்கப்பட்டது. அந்த இளைஞா் ரோஹிணியில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மேலும் விசாரணைக்காக இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா் என்று அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com