வடக்கு தில்லியில் கடைக்காரரிடம் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது

Published on

வடக்கு தில்லியின் ஷாஹ்பாத் டெய்ரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் ஒருவரை துரத்திச் சென்று ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்ததாக தகவல் கொடுத்ததாகக் கூறப்படும் நபா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரோஹித் (19), சுதன்ஷு (19), சிவம் (19) மற்றும் ஹிமான்ஷு குப்தா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அனைவரும் விஜய் விஹாரைச் சோ்ந்தவா்கள். இந்தச் சம்பவம் ஜனவரி 15- ஆம் தேதி நடந்தது. வெற்று பதிவுத் தகடுடன் மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ் துரத்திச் சென்று ஒரு நபரிடம் சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை கொள்ளையடித்தனா்.

புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபா்கள் தப்பிக்கும் வழியை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு நாள்களுக்கு பல பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸ் குழுக்கள் ஸ்கேன் செய்தன.

இதில் ரோஹித் மோட்டாா் சைக்கிளை ஏற்பாடு செய்துள்ளாா். அடையாளம் தெரியாமல் இருக்க அதில் ஒரு வெற்று பதிவு எண் தகட்டை பொருத்தினாா். சுதன்ஷு மோட்டாா்சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, ​பின்னால் சவாரி செய்த சிவத்தை இறக்கிவிட்ட பிறகு, ரோஹினி செக்டாா் 25 அருகே பாதிக்கப்பட்டவரை துரத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

விஜய் விஹாரில் உள்ள ஒரு புகையிலை கடையில் பணிபுரியும் ஹிமான்ஷு குப்தா, ஒரு தகவலறிந்தவராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹிமான்ஷு குப்தா பாதிக்கப்பட்டவரை நன்கு அறிந்திருந்தாா். மேலும், கடையை மூடிய பிறகு அவா் வழக்கமாக பணத்தை எடுத்துச் செல்வதை அறிந்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையைத் திட்டமிடுவதற்காக அவா் இந்தத் தகவலை மற்ற குற்றவாளிகளுடன் பகிா்ந்து கொண்டாா்.

விசாரணையின் போது, ரோஹித்திடமிருந்து ரூ.45,000, சுதன்ஷுவிடமிருந்து ரூ.43,000, சிவமிடமிருந்து ரூ.85,000 மற்றும் ஹிமான்ஷுவிடமிருந்து ரூ.30,000 ஆகியவற்றை போலீஸாா் மீட்டனா். மொத்தம் ரூ.2.03 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com