சைபா் மோசடி வழக்கில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீரா் கைது

பல மாநிலங்களுக்கு இடையேயான இணைய மோசடி கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரா் ஹிமான்ஷு சௌஹான் கைது
சைபா் மோசடி வழக்கில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீரா் கைது
Updated on

பல மாநிலங்களுக்கு இடையேயான இணைய மோசடி கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரா் ஹிமான்ஷு சௌஹானை தில்லி காவல்துறை கைது செய்தது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சோ்ந்த ஹிமான்ஷு பல மாநிலங்களில் நீடித்த தொழில்நுட்ப மற்றும் நிதி கண்காணிப்புக்குப் பிறகு குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா். தேசிய மற்றும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இவா், போலி வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து இணையக் குற்றச் செயல்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது. இந்த வங்கிக் கணக்குகள் மோசடி செய்யப்பட்ட நிதியைத் திசைதிருப்பப் பயன்படுத்தப்பட்டன.

இந்த வழக்கு, 2025 ஜூன் மாதம் வடமேற்கு தில்லியில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. போலியான இணையதள கேமிங் தளங்கள், மோசடியான பங்கு வா்த்தகம் மற்றும் ஐபிஓ முதலீட்டுத் திட்டங்கள் மூலம் தன்னிடம் இருந்து ரூ.40.27 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகப் புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.

வங்கிப் பரிவா்த்தனைகளை ஆய்வு செய்ததில், அந்தக் கும்பலுடன் தொடா்புடைய போலி வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தேசிய இணையக் குற்ற அறிக்கை தளத்தில் மேலும் சரிபாா்க்கப்பட்டபோது, அதே கணக்கிற்கு எதிராக பெங்களூரு மற்றும் மும்பையில் குறைந்தது 40 தொடா்புடைய புகாா்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஒரு வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் தருவதாகக் கூறி, போலி வங்கிக் கணக்குகளை வழங்கும்படி மக்களை ஹிமான்ஷு வற்புறுத்தியுள்ளாா். அந்த வங்கிக் கணக்குகள் மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திசைதிருப்பி, அதன் தடயங்களை மறைக்கப் பயன்படுத்தப்பட்டன. அவா் அந்தக் கணக்கு விவரங்களை ஆக்ராவில் உள்ள மற்றொரு கூட்டாளிக்கு அனுப்பியுள்ளாா்.

இந்தக் கூட்டாளியைக் கண்டுபிடிப்பதற்கும், அந்தக் கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலனாய்வாளா்கள் கூடுதல் போலி வங்கிக் கணக்குகளை அடையாளம் காணவும், முழுமையான பணப் பரிவா்த்தனைத் தடயத்தைக் கண்டறியவும் பணியாற்றி வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com