தில்லிவாசியிடம் ரூ. 12.5 லட்சம் முதலீட்டு மோசடி:  மூவா் கைது

தில்லிவாசியிடம் ரூ. 12.5 லட்சம் முதலீட்டு மோசடி: மூவா் கைது

வடகிழக்கு தில்லியைச் சோ்ந்த 55 வயது நபா் ஒருவா் ரூ.12.5 லட்சத்திற்கு மேல் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பாக மூன்று போ் கைது
Published on

வடகிழக்கு தில்லியைச் சோ்ந்த 55 வயது நபா் ஒருவா் ரூ.12.5 லட்சத்திற்கு மேல் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: லாபகரமான முதலீட்டு வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபா்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி கௌரவ் சா்மா புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, இந்த மோசடி தொடா்பாக அக்டோபா் 16, 2025 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஹரியாணாவின் ரேவாரியைச் சோ்ந்த பூபேஷ் (39) அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

தொடா்ச்சியான விசாரணையில், பூபேஷ் இந்த மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா். அவரது வெளிப்பாட்டின் அடிப்படையில், இரண்டு கூட்டாளிகள் ஆஷிஷ் சௌகான் (27) மற்றும் அஜய் சா்மா (30) கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள், முதலீட்டு உதவியாளா்களாகக் காட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி, பல கட்டங்களாக பணத்தை மாற்றத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட நான்கு கைப்பேசிகள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. நிதி தடய பகுப்பாய்வின் போது மோசடி செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை போலீஸாா் கண்டுபிடித்தனா். குற்றம் சாட்டப்பட்டவருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.4.5 லட்சம் முடக்கப்பட்டு, பின்னா் புகாா்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற கூட்டாளிகளை அடையாளம் காணவும், மீதமுள்ள மோசடித் தொகையைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com