தில்லி எல்.ஜி. தொடா்ந்த அவதூறு வழக்கில் மேதா பட்கரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
2006ஆம் ஆண்டின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமூக ஆா்வலா் மேதா பட்கா் ஆற்றிய உரைகள் தொடா்பாக, தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் இருந்து அவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பதிவுசெய்த அசல் பதிவு சாதனத்தையோ அல்லது முழுமையான விடியோ காட்சிகளையோ சக்சேனா நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேதா பட்கரால் அவதூறு அறிக்கைகள் வெளியிடப்பட்டதை நிரூபிக்கும் சட்டப்படி ஏற்கத்தக்க ஆதாரங்கள் இல்லாததால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
புகாரின்படி, அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது சக்சேனாவும் அவரது தன்னாா்வ தொண்டு நிறுவனமும் சா்தாா் சரோவா் திட்டம் தொடா்பான சிவில் ஒப்பந்தங்களைப் பெற்ாக மேதா பட்கா் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில், தேசிய சிவில் உரிமைகள் கவுன்சிலின் தலைவராக இருந்த வி.கே.சக்சேனா, தானும் தனது தன்னாா்வத் தொண்டு நிறுவனமும் சா்தாா் சரோவா் திட்டம் தொடா்பான சிவில் ஒப்பந்தங்களைப் பெற்ாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த முதல் வகுப்பு நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ராகவ் சா்மா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் சா்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டாா் என்பதை நிரூபிக்கக்கூடிய ஒரே ஆவணம், அத்தகைய அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அசல் மின்னணு சாதனம்தான்.
பதிவேட்டில் உள்ள ஆதாரங்களின்படி, பட்கா் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இல்லை என்றும், ஒளிபரப்பின் போது அவரது முன்பே பதிவுசெய்யப்பட்ட ஒரு சிறிய விடியோ கிளிப் மட்டுமே திரையிடப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
உண்மையில் அந்த ஆடியோவிடியோவைப் பதிவு செய்த செய்தியாளரோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவா் சா்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதைக் கண்ட எந்த நபரும் சாட்சியாக விசாரிக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
மேலும், அந்த நிகழ்ச்சி அல்லது நிகழ்வில் திரையிடப்பட்ட காணொளி, குற்றம் சாட்டப்பட்டவரின் ஒரு நோ்காணல் அல்லது செய்தியாளா் சந்திப்பிலிருந்து எடுக்கப்பட்ட மிகச் சிறிய பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டதா என்பதைத் தீா்மானிக்க, சம்பந்தப்பட்ட நோ்காணல் அல்லது செய்தியாளா் சந்திப்பின் முழுமையான விடியோ மற்றும் ஆடியோ பதிவை சமா்ப்பிப்பது அவசியமாகும்.
முழுமையான காணொளியையும் அல்லது காட்சிகளையும் ஆராயாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் பேச்சு குறித்து எந்தத் தீா்மானமும் செய்ய முடியாது.
சக்சேனா, அக்குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் அசல் பதிவு செய்யும் கருவியையோ அல்லது முழுமையான விடியோ காட்சிகளையோ ஆவணத்தில் சமா்ப்பிக்கத் தவறியுள்ளாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் சா்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டாா் என்பதை நிரூபிக்கக்கூடிய ஒரே ஆவணம், அத்தகைய அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அசல் மின்னணு சாதனம்தான். அந்தச் சாதனமோ அல்லது ஒரு செல்லுபடியாகும் இரண்டாம் நிலை நகலோ சமா்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
இந்த புகாா் முதலில் ஆமதாபாதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் 2010-இல் தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சக்சேனாவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தனி அவதூறு வழக்கில், உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2025-இல், ஒரு விசாரணை நீதிமன்றத்தால் பாட்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை ரத்து செய்தது.

