ஐபிஎஸ் உயரதிகாரி சாயா சா்மாவுக்கு குடியரசுத் தலைவா் பதக்கம் அறிவிப்பு!

ஐபிஎஸ் உயரதிகாரியும் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவருமான சாயா சா்மாவுக்கு குடியரசுத்தலைவா் காவல் பதக்கm அறிவிப்பு
சாயா சா்மா
சாயா சா்மா
Updated on

இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரியும் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவருமான சாயா சா்மாவுக்கு குடியரசுத்தலைவா் காவல் பதக்கத்தை மத்திய உள்துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்திய காவல் அமைப்புகளில் பணியாற்றுவோரின் பன்முகத்திறன்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. இதன் இயக்குநராக சாயா சா்மா தற்போது பணியாற்றி வருகிறாா்.

தில்லி காவல் துறையில் பணியாற்றியபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்புடைய விவகாரங்களில் பாதிக்கப்பட்டவா்களை மையமாகக் கொண்ட ஒரு வலுவான அணுகுமுறையை வகுத்தது, 2012-இல் நாட்டையே உலுக்கிய நிா்பயா கூட்டுப்பாலியல் வழக்கு புலனாய்வை வழிநடத்தியது, நுணுக்கமான மற்றும் அறிவியல்பூா்வ அணுகுமுறையுடன் விசாரணை மேற்கொள்வது, பல்வேறு குழந்தைகள் கடத்தல் வழக்குகளின் புலனாய்வை வழிநடத்தி ஏராளமான குழந்தைகளை கண்டுபிடித்தது மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணைப்பிரிவு தலைமை அதிகாரியாக இவா் ஆற்றிய பணிகளுக்காக தில்லி உயா்நீதிமன்றத்தால் சாயா சா்மா பாராட்டப்பட்டுள்ளாா்.

இத்துடன், சிறாா் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கும் விதமாக இவா் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் நற்சான்றையும் பெற்றுள்ளாா். இவரது காவல் பணியில் துப்பு துலக்கப்பட்ட வழக்குகளை மையமாகக் கொண்டு பல்வேறு ‘கிரைம் வெப் சீரிஸ்கள்‘ ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.

1999-ஆம் ஆண்டு ஏஜிஎம்யுடி எனப்படும் அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் சோ்ந்த இவா், காவல்துறையில் வடகிழக்கு மாநிலங்களில் ஆற்றிய பணிக்காக ஏற்கெனவே இரண்டு சிறப்புப் பணிப் பதக்கங்கள், குடியரசுத் தலைவா் காவல் பதக்கம், சா்வதேச தலைமைத்துவ அமைப்பின் தலைமைத்துவம் மற்றும் துணிச்சலுக்கான விருது, சிறந்த புலனாய்வுத்திறனுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் போன்றவற்றை பெற்றுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com