சாந்தினி செளக்கில் ஒருவரின் மூச்சை திணறடித்து கொள்ளை: இருவா் கைது
வடக்கு தில்லியில் உள்ள சாந்தினி சௌக் அருகே ஒரு நபரை மூச்சுத் திணறடித்து கொள்ளையடித்ததாக இரண்டு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜனவரி 21 ஆம் தேதி பாதிக்கப்பட்டவா் அப்பகுதியில் பொருள்களை வாங்கிக் கொண்டு ஐ. எஸ். பி. டி. காஷ்மீரி கேட் நோக்கிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பிற்பகல் 3.40 மணியளவில், கோடியா புல் அருகே, மூன்று போ் அவரை இடைமறித்து, கழுத்தில் மூச்சுத் இறுக்கி மூச்சை திணறடித்து, பழைய தில்லி ரயில் நிலையத்தை நோக்கி தப்பிச் செல்வதற்கு முன்பு பணம் மற்றும் தனிப்பட்ட பொருள்கள் அடங்கிய அவரது பையை பறித்தனா்.
கொத்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிய குற்றம் நடந்த இடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். சம்பந்தப்பட்டவா்களை அடையாளம் காண தொழில்நுட்ப பகுப்பாய்வு, நீடித்த கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டன.
ஆதாரங்களின் அடிப்படையில், ஜனவரி 22 ஆம் தேதி காந்தி மைதானத்தில் இருந்து இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் சாந்தினி சௌக் பகுதியில் நாடோடிகளாக வசித்து வந்த அட்னான் என்ற நன்ஹே (19) மற்றும் குந்தன் சிங் (25) என அடையாளம் காணப்பட்டனா். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் கருப்பு பேக்கில் ஆடைகள் இருந்தது. ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் தப்பியோடிய ஆதில் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது கூட்டாளியின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டாா். கொள்ளையடிக்கப்பட்ட பணம் குற்றம் சாட்டப்பட்டவா்களிடையே பகிா்ந்து பின்னா் செலவிடப்பட்டது. மூன்றாவது சந்தேக நபரை கைது செய்வதற்கும் மீதமுள்ள பணத்தை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது என்றாா் அவா்.

