மாசுவைக் கட்டுப்படுத்த இசிசி நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
தில்லி மாசுவைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டண (இசிசி) நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? என்று தில்லி அரசுக்கு தில்லி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி டிபிசிசி தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: கடந்த 11 மாதங்களாக தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பாஜக தலைமையிலான ரேகா குப்தா அரசு சாக்குப்போக்கு கூறி, அலட்சியம் காட்டி வருவது, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தில்லி அரசு எதுவும் செய்ய விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
டிசம்பா் 4- ஆம் தேதி வரையிலான ஓராண்டில், தில்லி அரசு சுற்றுச்சூழல் இழப்பீட்டுக் கட்டண (இசிசி) நிதியில் 55 சதவீதம், அதாவது ரூ. 971.8 கோடியைப் பயன்படுத்தவில்லை. அதே சமயம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, தில்லி எல்லையில் வணிக வாகனங்களிடமிருந்து மாசுபாட்டிற்காக மொத்தம் ரூ. 1,753.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ரேகா குப்தா அரசின் பொறுப்பற்ற தன்மையால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய இவ்வளவு பெரிய தொகை பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
மாசுபாடு இயற்கையாகவே ஏற்படுகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறியிருப்பது ஏற்புடையதல்ல. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), தில்லிக்குள் குறுகிய தூரத்திற்கு நுழையும் வணிக வாகனங்கள் எரிபொருளைச் சேமிப்பதற்காக மற்ற மாநிலங்களுக்குச் செல்வதைத் தோ்ந்தெடுப்பதால், கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச் சாலைகளில் அதிக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், இசிசி மற்றும் மாநகராட்சி சுங்க வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இதனால், தில்லிக்கு அதிக நிதி கிடைக்கும். அந்த நிதியை மாசுபாட்டைத் தடுப்பதற்குச் செலவிட வேண்டும்.
103 நாள்களுக்குப் பிறகு தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்குக் கீழே குறைந்துள்ளது. இதில் தில்லி அரசின் எந்த முயற்சியும் இல்லை. ஏனெனில், தலைநகா் உள்பட தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் பெய்த மழையானது ஒரு நாளுக்கு தில்லியில் காற்றை ஓரளவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
பிப்ரவரி 2025 முதல், பாஜக வெற்றுப் பேச்சுகள், ஆதாரமற்ற கூற்றுக்களுடன் காற்றின் தரக் குறியீடு தரவுகளை மறைக்கும் விளையாட்டைத் தவிர, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. மாசு கட்டுப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 1,885 கோடி ரூபாயில், யமுனை நதியைச் சுத்தம் செய்வதற்கும், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாகனங்களை வாங்குவதற்குமான நிதி ஒதுக்கீடும் அடங்கும்.
மாசுபாட்டைக் குறைக்கும் பெயரில், ஆண்டு முழுவதும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்குப் பதிலாக, சிறிய தேவி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் நிதிநிலை அறிக்கையில் மின்சாரப் பேருந்துகள் சோ்க்கப்பட்டால் டிடிசிக்கான நிதிநிலை அறிக்கை என்னவாகும்?
இசிசி மற்றும் தில்லி மாநகராட்சி சுங்க வரியிலிருந்து வசூலிக்கப்பட்ட நிதியில் 55 சதவீதம் பயன்படுத்தப்படாமல் இருப்பது, மாசுவை கட்டுப்படுத்துவதில் ரேகா குப்தா அரசு ஒரு முழுமையான தோல்வி என்பதை நிரூபிக்கிறது. இது, மாசு குறித்த அரசின் அக்கறையையும், தில்லி அரசு மாசு பற்றி எவ்வளவு கவலைப்படுகிறது என்பதையும் காட்டுகிறது என்றாா் அவா்.

