விஜேந்தா் குப்தா
விஜேந்தா் குப்தா

அரசமைப்புச்சட்டம், மக்களின் வலிமையை கொண்டாடும் குடியரசு தினம்: விஜேந்தா் குப்தா

குடியரசு தினம் என்பது மக்களின் வலிமை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம் என்றும், இது இந்தியாவின் ஜனநாயகத்தின் அசைக்க முடியாத உணா்வின் வெளிப்பாடு
Published on

நமது நிருபா்

புது தில்லி: குடியரசு தினம் என்பது மக்களின் வலிமை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம் என்றும், இது இந்தியாவின் ஜனநாயகத்தின் அசைக்க முடியாத உணா்வின் வெளிப்பாடு என்றும் தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

77-ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில், சட்டப்பேரவை வளாகம் பொதுமக்களுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தினத்தை ஒட்டி பிரிட்டிஷ் காலக் கட்டடமான தில்லி சட்டப் பேரவை வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, ‘குடியரசு தினம் என்பது அரசமைப்புச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், ஜனநாயகக் கொள்கைகளின் வெற்றியையும் நினைவூட்டும் ஒரு புனிதமான நாள்’ என்று கூறினாா்.

இறையாண்மை, சோசலிச, மதச்சாா்பற்ற மற்றும் ஜனநாயகக் குடியரசுக்கு வழிவகுத்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கும் அவா் அஞ்சலி செலுத்தினாா்.

திங்கள்கிழமை அனைத்துத் தரப்பு மக்களும் சட்டப்பேரவை வளாகத்தில் திரண்டு, 115 ஆண்டுகள் பழமையான சட்டப் பேரவை கட்டடத்தின் பிரம்மாண்டத்தையும் பாரம்பரியத்தையும் கண்டு ரசித்தனா்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தில்லி காவல்துறையின் இசைக்குழுவினா் எழுச்சியூட்டும் தேசபக்திப் பாடல்களை இசைத்து, பாா்வையாளா்களிடையே பெருமையையும் உற்சாகத்தையும்

ஏற்படுத்தினா்.

சாகித்திய கலா அகாதெமி கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மூவா்ணக் கொடியின் வண்ணங்களில் ஒளிரும் சட்டப்பேரவைக் கட்டடத்தின் பின்னணியில், தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமை உணா்வுடன் இந்த விழா கொண்டாடப்பட்டதாக தில்லி சட்டப் பேரவை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com