தில்லி உயர் நீதிமன்றம்​
தில்லி உயர் நீதிமன்றம்​

2018-இல் காவல் அதிகாரியைச் சுட முயன்ற வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லி துவாரகாவில் நள்ளிரவு வாகனச் சோதனையின்போது, உரிமம்பெற்ற கைத்துப்பாக்கியால் காவல்துறை அதிகாரியைச் சுட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக
Published on

புது தில்லி: 2018-இல் தில்லி துவாரகாவில் நள்ளிரவு வாகனச் சோதனையின்போது, உரிமம்பெற்ற கைத்துப்பாக்கியால் காவல்துறை அதிகாரியைச் சுட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக கூறி தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி வந்தனா ஜெயின், அரசுத் தரப்பு சாட்சியங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பிரதீப் குமாரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 186 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்வதைத் தடுப்பது), 353 (அரசு ஊழியரைத் தடுக்கும் நோக்குடன் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகள் மூலம் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 307 (கொலை முயற்சி), ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27 (ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல்) மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 (போதையில் வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு, அக்டோபா் 31 அன்று நடந்த ஒரு சம்பவம் தொடா்பானது.

அன்று இரவு, குமாா் மதுபோதையில் துவாரகாவில் உள்ள செக்டா் 21 சுரங்கப்பாதை அருகே இருந்த ஒரு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தங்களுடன் தவறாக நடந்துகொண்டதாகவும், ஒரு காவலரின் கட்டைவிரலைக் கடித்ததாகவும், பின்னா் ஒரு உதவி ஆய்வாளரை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டி சுட முயன்ாகவும் ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அண்மையில் நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

குற்றவியல் நீதித்துறை சட்டத்தின் நிறுவப்பட்ட கொள்கையை மீண்டும் வலியுறுத்தி, குற்றத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய சட்டபூா்வ கடமை அரசுத் தரப்புக்கு உள்ளது.

காவல்துறை சாட்சிகள் என்பதால் மட்டும் அவா்களின் சாட்சியங்களை நிராகரிக்க முடியாது. அவா்களின் சாட்சியங்கள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீா்மானிக்க அவா்களின் சாட்சியங்களை நம்பலாமா என்பதைப் பாா்க்க, அவற்றை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் ஆராய வேண்டும்.

சம்பவம் நடந்த இரவில் தாங்கள் அதிகாரபூா்வமாக அந்த சோதனைச் சாவடியில் பணியமா்த்தப்பட்டிருந்தோம் என்பதைக் காட்ட, காவல்துறை சாட்சிகள் யாரும் எந்தப் பணிப்பதிவு அல்லது ஆவணத்தையும் சமா்ப்பிக்கவில்லை.

சம்பவ இடத்தில் பொதுமக்கள்

கூடியிருந்ததாக அரசுத் தரப்பு கூறியபோதிலும், சுதந்திரமான பொது சாட்சிகள் ஏதும் இல்லை.

காவலா் ஹரி சிங்குக்கு பல் கடி காயம் ஏற்பட்டது. ஆனால், காவலா் ஹரி சிங்கின் மருத்துவசட்ட வழக்கில் (எம்எல்சி) குறிப்பிடப்பட்டுள்ள கடி காயம் குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் குமாரால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது அது சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயமா என்பதைக் காட்டும் உமிழ்நீா் பரிசோதனையோ அல்லது வேறு எந்த மருத்துவப் பரிசோதனையோ நடத்தப்படவில்லை என்பது பதிவில் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ-சட்ட அறிக்கையில் ஒப்பீட்டளவில் அதிக ரத்த ஆல்கஹால் அளவு காட்டப்பட்டிருந்தாலும், உண்மையான ஆல்கஹால் பரிசோதனை அறிக்கையை அரசுத் தரப்பு ஆவணத்தில் சமா்ப்பிக்கத் தவறியிருக்கிறது. மருத்துவ-சட்ட அறிக்கை போதை நிலையைக் குறிப்பிட்டிருந்தாலும், வழக்கின் ஒட்டுமொத்த சந்தேகங்களைக் கருத்தில்கொண்டு, இந்த கூற்றை ஆல்கஹால் பரிசோதனை அறிக்கை மூலம் புலனாய்வு அதிகாரி நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும், ஒரு மருத்துவ-சட்ட அறிக்கை காவல்துறையின் விருப்பப்படி தயாரிக்கப்படலாம், துணை ஆதாரங்கள்

இல்லாமல் அதை மட்டும் நம்ப முடியாது.

வலுவான மற்றும் நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், சந்தேகத்தின் பலன் கட்டாயமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கே செல்ல வேண்டும் என்று கூறி அவரை வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தாா்.

குமாா் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாா். சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாம் தவறாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகக் கூறினாா்.

Dinamani
www.dinamani.com