தெற்கு தில்லியின் ரூ.300 கோடி மேம்பாட்டுத் திட்டங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தாா்
புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ரூ.300 கோடிக்கும் மேல் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பதா்பூரில் ரூ.85 கோடி, சங்கம் விஹாரில் ரூ.115 கோடி மற்றும் தியோலியில் ரூ.104 கோடி மதிப்புள்ள திட்டங்களை ரேகா குப்தா தொடங்கி வைத்தாா் என்று முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தெற்கு தில்லியின் விரிவான மாற்றத்திற்கான அரசின் ‘உறுதியான உறுதிப்பாட்டை’ இந்தத் திட்டங்கள் பிரதிபலிக்கின்றன என்று ரேகா குப்தா கூறினாா்.
சாலைகள், வடிகால்கள் மற்றும் வடிகால் அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் மேம்பாடு, குடிநீா் விநியோக அமைப்புகளை வலுப்படுத்துதல், தெரு விளக்குகள் நிறுவுதல் மற்றும் பூங்காக்கள், மருந்தகங்கள் மற்றும் சமூக விருந்து அரங்குகளை மேம்படுத்துதல் ஆகியவை மேம்பாட்டுப் பணிகளில் அடங்கும் என்று முதல்வா் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்தது.
தெற்கு தில்லி பாஜக எம்பி ராம்வீா் சிங் பிதூரி, தில்லி ஊரக வளா்ச்சி வாரியத் தலைவா் ராஜ்குமாா் சௌகான், சங்கம் விஹாா் எம்எல்ஏ சந்தன் குமாா் சௌத்ரி மற்றும் மாநகராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
ஹரியாணா எல்லையில் உள்ள பதா்பூரில், மேம்பாட்டுத் திட்டங்கள் நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன என்று முதல்வா் கூறினாா்.
மலைப் பரப்பாக வளா்ந்துள்ள ஓக்லா குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கான ஒரு நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி மக்கள் விரைவில் ஒரு தெளிவான மாற்றத்தைக் காண்பாா்கள் என்று அவா் கூறினாா்.
அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்றும், தரத் தரங்களை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்றும் முதல்வா் உறுதியளித்தாா்.
பதா்பூரை சுத்தமான, பாதுகாப்பான, நவீன மற்றும் முன்மாதிரியான சட்டமன்றத் தொகுதியாக மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.
சங்கம் விஹாரில், ரேகா குப்தா ரூ.115 கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். அடிப்படை குடிமை வசதிகள் தொடா்பான குடியிருப்பாளா்களின் நீண்டகால கவலைகளை இந்த முயற்சிகள் நிவா்த்தி செய்யும் என்று கூறினாா்.
இந்தத் திட்டங்களில் பெரிய அளவிலான சாலைகள் புனரமைப்பு, கழிவுநீா் மற்றும் வடிகால் அமைப்புகளை வலுப்படுத்துதல், குடிநீா் விநியோகத்தை மேம்படுத்துதல், பாதைகள், வடிகால்கள் மற்றும் தெரு விளக்குகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதன் மூலம் குடியிருப்பாளா்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியோலியில், சாலைகள் அமைத்தல், கழிவுநீா் மற்றும் வடிகால் வலையமைப்புகளை விரிவுபடுத்துதல், நீா் குழாய்களை வலுப்படுத்துதல், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துதல் மற்றும் சுகாதாரம் மற்றும் சமூக மையங்களை மேம்படுத்துதல் தொடா்பான திட்டங்களை ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.
தியோலியில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை குடிமை வசதிகளுக்கான கோரிக்கை காலக்கெடுவிற்குள் தீா்க்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.
அரசின் நோக்கம் தியோலி உள்கட்டமைப்பு உருவாக்கத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக குடிமக்களின் வாழ்க்கையில் அா்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதாக முதல்வா் ரேகா குப்தா வலியுறுத்தினாா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

