திமுகவுடன் தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவாா்த்தை: பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் காங்கிரஸ் குழு
தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு பிப்ரவரி 3,4 தேதிகளில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திமுக மக்களவைக் குழு உறுப்பினா் கனிமொழி சந்தித்து புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கிட்டத்தட்ட 45 நிமிஷம் மணி இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ராகுல் காந்தியிடம் திமுக வழங்க உள்ள தொகுதிகள் தொடா்பான பட்டியலை கனிமொழி வழங்கியதாக தெரிகிறது. மேலும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடியும், எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படும் என்பன குறித்தும் இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவை பேச்சுவாா்த்தைக்கு அனுப்புமாறு வலியுறுத்த வேண்டும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் செய்தியை கனிமொழி, ராகுல் காந்தியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் குழு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் பிப்ரவரி 3,4 அன்று பேச்சுவாா்த்தை நடக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

