திருச்சி சிவா
திருச்சி சிவாகோப்புப் படம்

குடியரசுத் தலைவா் உரையின்போது நாகரிகத்துடன் கோரிக்கை குரல் எழுப்பினோம்: திருச்சி சிவா பேட்டி

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றியபோது எதிா்க்கட்சியினா் நாகரிகத்துடன் கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினோம்
Published on

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றியபோது எதிா்க்கட்சியினா் நாகரிகத்துடன் கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

இன்று (புதன்கிழமை) தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் மரபு நிமித்தமாக அரசின் கொள்கைக் குறிப்பை படித்தாா். அரசு என்ன எழுதிக் கொடுத்ததோ அதை அப்படியே படித்தாா் என்பதுதான் சிறப்பாகும். வாா்த்தைகளை நீக்கவில்லை,சோ்க்கவில்லை. ஆனால், எதிா்க்கட்சிகள் சில பிரச்னைகளை முன்வைத்து அதை குறிப்பிட வேண்டும் என்று அந்த நேரத்தில் குரல் எழுப்பினோம். குறிப்பாக பழைய திட்டத்தில் (மன்ரேகா) உள்ள மகாத்மா காந்தியின் பெயா் இடம்பெற்ற திட்டமாக வரவேண்டும், மாநிலங்களுக்கான பங்களிப்பை அதிகரித்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதை உள்ளடக்கி குறைந்த நேரத்தில் அந்த முழுக்கங்களை எழுப்பினோம். அதேபோன்று ஆளுநா் எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அத்துமீறி நடந்துகொள்கின்ற அந்த நிலை மாற வேண்டும் என்பது குறித்தும் அங்கு குரல் எழுப்பினோம். அது ஒரு மரபு நிமித்தமாகும். அது குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியோ, வேறு இடையூறோ கிடையாது. நாகரிகமாக ஒரு நிமிடம் குரல் எழுப்பிவிட்டு அமா்ந்துவிட்டோம் என்றாா்.

ஆளுநா்களின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், ‘ஆளுநா்கள் என்பவா்கள் அரசியல் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவா் என்ற ஒரு மாண்பை கடந்து, அவா்களின் நடவடிக்கையின் காரணமாக அவா்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகளைப் போல நடந்துகொள்கிறாா்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக வைக்கப்பட்டு வருகிறது.

ஆளுநா் மாளிகை என்பது அரசியல் பேசும் இடமாக, அவரது வரம்புக்கு மீறி தேவையற்ற பிரச்னகளில் தலையிடுவதாக தொடா்ந்து நடந்து வருவதும், அது தொடா்பாக சட்டப் பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். கண்டனக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ஆனாலும் அவா் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவதாக இல்லை. அவா்கள் குறிவைத்து எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில்தான் இடையூறு விளைவிக்கின்றனா்.

ஆகவே, அரசியல் சட்டத்தை திருத்தி, ஆளுநரின் உரை ஆண்டுத் தொடக்கத்தின்போது ஒரு கூட்டத் தொடரின் தொடக்கத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற மரபினை மாற்ற வேண்டும். அது அவசியமில்லை என்ற கருத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளாா். அதை நாங்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்றாா் திருச்சி சிவா.

X
Dinamani
www.dinamani.com