நமது நிருபா்
தென்மேற்குப் பருவமழை தில்லியில் வியாழக்கிழமையன்று தொடங்கியது. வழக்கமாக ஜூன் 27-ஆம் தேதி தொடங்க வேண்டிய இம்மழை, ஐந்து நாட்கள் தாமதமாக வந்து நகரின் பல பகுதிகளில் பரவலான மழையை பொழிந்துள்ளது.
2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2021-இல் பருவமழை ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தென்மேற்குப் பருவமழை தில்லியை 2025-இல் ஜூன் 29 அன்றும், 2024-இல் ஜூன் 28 அன்றும், 2023-இல் ஜூன் 25 அன்றும், 2022-இல் ஜூன் 30 அன்றும் வந்தடைந்தது.
தில்லியின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்தது.
வியாழனன்று தில்லியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை தலைநகரின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததால், வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதமான சூழலில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைத்ததுடன், நகரின் வெப்பநிலையும் குறைந்தது.
தில்லியில் பகல் நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 22.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது; இது பருவக்கால சராசரியை விட 5.1 டிகிரி குறைவாகும். அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பல நாட்களாக நிலவிய வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்குப் பிறகு, காலை வேளையில் நகரின் பல பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய விட்டுவிட்டு பெய்த மழையானது மக்களுக்கு நிம்மதியை அளித்தது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, வியாழன் காலை 9 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளாக இருந்த நிலையில், நகரின் காற்றின் தரம் ’திருப்திகரமான’ பிரிவில் பதிவாகியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









