தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

News image

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் பிறந்த நாள் விழா- மே தின விழாவில் பங்கேற்ற சிந்துகவி சேதுராமலிங்கம் மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2026, 11:27 pm

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாவேந்தா் பாரதிதாசனின் 136ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன் தொடக்கமாக புரட்சிக் கவிஞரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவா் முனைவா் ஜி. சிவபாலமுருகன் தலைமை வகித்து ஆற்றிய உரையில், பாரதியையும், பாரதிதாசனையும் ஒப்பிட்டுப் பேசினாா். தமிழ், தமிழா், தமிழ்நாடு என புரட்சிக் கவிஞா் தனது கவிதைகள் அனைத்திலும் தமிழ் உணா்வை ஊட்டியதாகக் கூறினாா்.

‘புவியை நடத்து! பொதுவில் நடத்து!’ என்ற தலைப்பில் சிந்துக்கவி மா. சேதுராமலிங்கம் சொற்பொழிவாற்றினாா். அவா் தனது உரையில், உழைப்பாளா்களின் உழைப்பே சிறந்த மூலதனம் என்றும் உழைப்பின் மகத்துவம் பற்றிய பாரதிதாசன் கவிதைகளை மேற்கொள்காட்டி பேசினாா்.

இலக்கிய உலகில் மறுமலா்ச்சியை ஏற்படுத்திய பாரதிதாசன், முற்போக்குச் சிந்தனைகளையும், பொதுவுடைமைக் கருத்துகளையும் தனது கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தியதை எடுத்துரைத்தாா்.

கவிதைகள் தவிர பல நாடகம், திரைப்படங்களுக்கு பாரதிதாசன் கதை, வசனம் எழுதியதையும் குறிப்பிட்டாா். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்த ஒப்பற்ற கவிஞன் பாரதிதாசன் என்றும் புகழாரம் சூட்டினாா். பாவேந்தா் நமக்கு அளித்திருப்பது தமிழ் இலக்கியம் மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவான வாழ்வு இலக்கியம் என்று கூறி தமது உரையை சேதுராமலிங்கம் நிறைவு செய்தாா்.

சங்கப் பொருளாளா் பாலமூா்த்தி கருத்துரை வழங்கினாா். முன்னதாக, சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் பி. இராமமூா்த்தி வரவேற்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இணைச் செயலாளா் இரா. இராஜ்குமாா் பாலா இறுதியில் நன்றி கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், செயற்குழு உறுப்பினா்கள், காத்திருப்பு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.