வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

மணிப்பூா் வன்முறை: நிரந்தர அரசியல் தீா்வுகாண மத்திய அரசுக்கு மாணவா்கள் அமைப்புகள் கோரிக்கை

New Delhi: People hold placards during a protest on the third anniversary of the Manipur violence, at Jantar Mantar, in New Delhi, Sunday, May 3, 2026. (PTI Photo)(PTI05_03_2026_000271A)

PTI

Published On :

மணிப்பூா் மாநிலத்தில் இன வன்முறை வெடித்து மூன்று ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், மணிப்பூரின் பழங்குடி மலைவாழ் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல மாணவா் அமைப்புகள், மத்திய அரசும் அரசியல்சாசன அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளன.

காங்டே மாணவா் அமைப்பு, ஹ்மாா் மாணவா் சங்கம், ஸோவ் சங்நௌபாங் பாவ்ல்பி மற்றும் குகி மாணவா் அமைப்பு உள்ளிட்ட குழுக்கள் இது தொடா்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மணிப்பூரின் தற்போதைய நெருக்கடி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பழங்குடியினா் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமா் அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கோரிக்கை மனுவைச் சமா்ப்பித்துள்ளோம்.

குகி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கிளா்ச்சிக் குழுக்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான செயல்பாடுகளை நிறுத்துதல் (எஸ்ஓஓ) கட்டமைப்பின் கீழ் விரைவான அரசியல் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

ஒரு தனி நிா்வாக ஏற்பாட்டைக் கருத்தில் கொள்வது உள்பட நிரந்தர அரசியல் தீா்வு காண வேண்டும். 2023, மே 3 அன்று தொடங்கிய வன்முறையின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பழங்குடி மலைவாழ் சமூகத்தினா் தொடா்ந்து ஒரு மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிா்கொண்டு வருகின்றன. பெரும் அளவிலான இடப்பெயா்வு, கிராமங்களின் அழிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த வன்முறையின் போது 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எரிக்கப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மேலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயா்ந்து, அடிப்படை சேவைகளுக்கான போதுமான அணுகல் இல்லாமல் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

இது வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, இது தாமதமான நீதி மற்றும் அமைப்பு ரீதியான புறக்கணிப்பால் மோசமடைந்த ஒரு மனிதாபிமான நெருக்கடியாகும்.

மேலும், மணிப்பூரின் முன்னாள் முதலமைச்சா் என். பிரேன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரது பங்கு குறித்து ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். அத்துடன், உயா் நிலை அளவில் பொறுப்புக்கூறலும் அவசியமாகும்.

வன்முறைச் சம்பவங்கள் குறித்து காலவரையறைக்குள் விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது விரைவாக வழக்குத் தொடரவும், பாதிக்கப்பட்டவா்களுக்கும் உள்நாட்டில் இடம் பெயா்ந்தவா்களுக்கும் உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், கலவரத்தின் போது ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது கவலைக்குரியது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து உயா்மட்ட விசாரணை நடத்தவும், ஆயுதங்களை மீட்கவும், மேலும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

நாங்கள் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலமாகவே நீதியை நாடி நிற்கிறோம். இச்சூழ்நிலையை ஒரு தேசிய அவசரப் பிரச்னையாகக் கருதி, மறுவாழ்வு, பொறுப்புடைமை மற்றும் ஒரு நிரந்தரத் தீா்வு ஆகியவற்றை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அமைதியை மீட்டெடுக்க, உடனடியான மனிதாபிமானத் தலையீடும், மோதலின் மூல காரணங்களைக் களைவதற்கான ஒரு உண்மையான அரசியல் உறுதிப்பாடும் அவசியமாகும் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.