நூல் அரங்கம்
சங்ககாலத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. திருமுருகாற்றுப்படை(நக்கீரர்), பொருநராற்றுப்படை(முடத்தாமக்கண்ணியார்),


பத்துப்பாட்டு - மூலம் - விளக்க உரையுடன் - ஞா.மாணிக்கவாசகன்; பக்.448; ரூ.100; உமா பதிப்பகம், சென்னை-1; )044-2521 5363.
சங்ககாலத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. திருமுருகாற்றுப்படை(நக்கீரர்), பொருநராற்றுப்படை(முடத்தாமக்கண்ணியார்), சிறுபாணாற்றுப்படை(நல்லூர் நத்தத்தனார்), பெரும்பாணாற்றுப்படை(கடியலூர் உருத்திரங்கண்ணனார்), முல்லைப் பாட்டு(நப்பூதனார்), மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்), நெடுநல்வாடை (நக்கீரர்), குறிஞ்சிப்பாட்டு (கபிலர்), பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்), மலைபடுகடாம் (பெரும் கெüசிகனார்) ஆகிய பத்தும் இப்பத்துப்பாட்டினுள் அடங்கும்.
அன்பு, காதல், இல்லறநெறி, பிரிவு, வீரம், போர், ஈகை, கொடைப்பண்பு, இசைக்கருவிகள், இசையின் சிறப்பு, கடவுள் நம்பிக்கை, கோயில்கள், மரபுவழிப்பட்ட நம்பிக்கைகள், அரசுமுறை, வள்ளல்கள், ஆற்றுப்படுத்துதல், இயற்கை வளம், செல்வச்செழிப்பு, கற்பனைத் திறம், மலை வளம், அருவிகளின் சிறப்பு, நிலையாமை, தமிழின் மேன்மை, விருந்தோம்பல், அக இலக்கியத்தின் சிறப்பு, வறுமையின் கொடுமை, பிள்ளைச் செல்வத்தின் முக்கியத்துவம், முன்னோரைப் போற்றுதல், மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, பழமொழி, அறத்தின் சிறப்பு, ஒழுக்கத்தின் மேன்மை, மரபு, பண்பாடு, ஓவியக் கலை, கட்டடக்கலை, நுண்கலை முதலிய பலவற்றையும் அறிய உதவும் தங்கப் புதையலாக, இச்சங்கப் புதையலான பத்துப்பாட்டில் உள்ள பத்து இலக்கியங்களும் அமைந்துள்ளன.
மனிதனின் சிறப்பான, மேன்மையான வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தும் இத்தொகை நூலில் உள்ள பத்து இலக்கியங்களிலும் உள்ளன. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவாறு எளிய விளக்கவுரையுடனும் சொற்பொருள் விளக்கங்களுடனும் வெளிவந்துள்ளது.
சக்கை - கலைச்செல்வி; பக்.236; ரூ. 180; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044-2624 1288.
கிராமத்தில் ஏற்பட்ட வறட்சியால் விவசாயத்தையும், கோரைப்பாய் நெசவுத் தொழிலையும் கைவிட்டு விட்டு, ராசமங்கலம் கிராமத்திலிருந்து சில குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லுடைக்கும் குவாரிகளுக்குச் சென்றதையும், கல் குவாரியில் அவர்களின் பாடுகளையும் வட்டார மொழியில் சித்திரித்துள்ள நாவல்.
கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபடுவோரின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவது, பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் கல்லுடைக்கும் பெண்களின் நிலை, கல்லுடைக்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் கல்விக்கு ஏங்குவது, தொழிலாளர்கள் முறையான மருத்துவமின்றி தவிப்பது, குழந்தைகளையும் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது ஆகியவை இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கல்லுடைக்கும் தொழிலில் அறிமுகப்படுத்தப்படும் புதிய இயந்திரங்களால் அத்தொழிலிருந்து துரத்தப்படும் தொழிலாளர்கள், மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதை உருக்கமாகச் சித்திரித்துள்ளார்.
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போன சொந்தக் கிராமத்தில் அவர்கள் குடியிருந்த வீடுகள் பாழாகிவிட்டதால் இடிக்கப்பட்டு, புறம்போக்கு நிலமும் வளைக்கப்பட்டு, "விடியல் நகர்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிகம் நடைபெறும் யதார்த்தச் சூழல் நம்மை அதிர வைக்கிறது. கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அதே கிராமத்தில் உள்ள சப்பாத்திக் கள்ளிக் காட்டில் புதுவாழ்வைத் தொடங்குகின்றனர்.
உலகமயச் சூழலில் கிராமத்தை விட்டு வெளியேறும் மக்களின் வாழ்நிலையையும், கிராமத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும் மிகவும் எதார்த்தமாகச் சித்திரிக்கும் சிறப்பான நாவல்.
எரியும் பூந்தோட்டம் - சலீம்; தமிழில்: சாந்தா தத்; பக்.256; ரூ.145; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, சென்னை-18.
குணப்படுத்த முடியாத எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, மனநிலை, சமூகத்திலிருந்து அந்நியமாகி அவர்கள் படும் துயர் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
வங்கிப் பணி செய்யும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குமார் எய்ட்ஸ் தொற்று உள்ள பெண்ணுடன் உறவு கொண்டு, அச்சத்தால் நடுங்கி வாழ்க்கையை முடித்துக் கொள்ள தற்கொலைக்கு முயல்கிறான்.
ஏழை லாரி டிரைவர் கோடய்யா எய்ட்ஸ் நோயாளி. அவனால் அவனுடைய மனைவியும், மகனும் எய்ட்ஸ் நோயாளிகளாகிறார்கள். கோடய்யாவுக்கு மருத்துவம் பார்க்க முனைந்து அவனுடைய மனைவி நாகமணி படும்பாடுகள், இறந்துவிட்ட கோடய்யாவைப் புதைக்க யாரும் ஒத்துழைக்காத நிலையில் தானே அவனைச் சுமந்து சென்று புதைத்துவிட்டு, தன் சிறுவயது மகனுடன் நாகமணி பிச்சைக்காரியாவது, மகனும் இறந்து போவது, இறுதியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியில் நாகமணி ஈடுபடுவது என நாவல் விரிகிறது. இருவேறுவிதமான வாழ்நிலை உடையவர்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு எப்படியெல்லாம் துயரமடைகிறார்கள் என்பது துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தால் எய்ட்ஸ் நோயாளிகள் எப்படி செத்த நாயினும் கீழாக அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் படிக்கும்போது, கொஞ்ச நஞ்சம் ஒழுக்க மீறல்கள் உள்ளவர்களும் கூட நடுநடுங்கி ஒழுங்கான வாழ்க்கை வாழ முனைவார்கள் என்பது உறுதி. மொழிபெயர்ப்பு நூல் என்ற எந்த அடையாளமும் இல்லாமல், மிகவும் உணர்வுப்பூர்வமான வாசிப்பனுபவத்தை இந்நாவல் தருவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அர்த்தசாஸ்திரம் - உலகின் முதல் பொருளாதார நூல் - தாமஸ் ஆர்.டிரவுட்மன்; தமிழில்: எஸ்.கிருஷ்ணன்; பக்.152; ரூ.125; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.
ஒரு நாட்டின் அரசியலும் பொருளாதாரமும் பிரிக்க முடியாதவை. பொருளாதாரம் அரசை விட்டுத் தனித்து இயங்க முடியாது. இந்தக் கருத்தின் அடிப்படையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட படைப்பு அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரத்தின் உள்ளடக்கம் பற்றி விவரிப்பதாகவும், ஆய்வு செய்வதாகவும் அமைந்துள்ளது இந்நூல்.
அக்காலத்திலேயே ஊழல் இருந்திருக்கிறது. "நீரில் நீந்துகிற மீன் தண்ணீரைக் குடிக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிய முடியாதோ அதுபோல பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணமோசடி செய்வதை அறிய இயலாது' என்கிறது அர்த்தசாஸ்திரம்.
"ஓர் அரசன் போரில் வெற்றியடைவது முக்கியமாக யானைகளையே சார்ந்துள்ளது. யானைகள் படைகளையும் படை வரிசைகளையும் அரண்களையும் எதிரிகளின் முகாம்களையும் தூளாக்கும் வலிமை படைத்தது' என்பதன் மூலம் அக்காலப் போர்களில் யானைகளின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அரசன் எந்நேரமும் கொல்லப்படலாம் என்பதால், "மூத்த செவிலியினால் அரசி சோதிக்கப்பட்ட பின்னரே அரசியைச் சந்திக்க அரசர் அந்தப்புரத்துக்குச் செல்ல வேண்டும்' என்ற நிலை இருந்திருக்கிறது. வரிவிதிப்பு, அரசனின் கடமைகள், குடிமக்களின் கடமைகள் பற்றிய வரையறைகளும் அர்த்தசாஸ்திரத்தில் இருக்கின்றன. அர்த்தசாஸ்திரத்தைப் பற்றிய நல்ல அறிமுகம் இந்நூல்.
கடவுள் தொடங்கிய இடம் - அ.முத்து லிங்கம்; பக்.270; ரூ.155; விகடன் பிரசுரம், சென்னை- 2; )044 - 4263 4283.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் நிஷாந்த், கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். உயிர் வாழ எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர்நாடி. நாவலாசிரியரின் எழுத்தாற்றல் ஒவ்வொரு வாக்கியத்திலும் மிளிர்கிறது. ""கனடாவில் ஓடும் ஓர் ஆறு தேலோன். தேலோன் பள்ளத்தாக்கு கனடாவின் யுக்கோன் பிரதேசம், வடமேற்கு பிரதேசம், வடதுருவ வட்டம் எல்லாவற்றையும் இணைத்துக் கிடக்கிறது. ஆதியிலிருந்து மாற்றம் அடையாமல் இன்றும் பூமி அன்றிருந்த மாதிரியே இருக்கிறது. அந்த இடத்தைப் பார்க்கும் யாரும் கண்ணை திருப்பி எடுக்க முடியாது. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அந்த இடத்துக்கு பெயர் 'where god began'. கடவுள் அங்கேயிருந்துதான் ஆரம்பித்தார் என்று சொல்வார்கள்'' என்று பெண் கதாபாத்திரம் ஒன்று கதைநாயகனிடம் சொல்வதாக வருகிறது. நாவலின் தலைப்பாகியுள்ள அந்த இடத்தைப் பார்க்கும் ஏக்கம் கட்டாயம் வாசகர்களிடம் எழும். அகதி கோரிக்கை ஏற்கப்பட்டு நல்ல வேலையும் கிடைத்து கையிலே சாவியுடன் புறப்பட்ட நிஷாந்த் கதவைத் திறக்க முடிந்ததா? என்ற கேள்விக்குப் பதிலின்றி முடிகிறது நாவல்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பயணம் பற்றியும் அலைதல் பற்றியும் பதிவுகள் குறைவு. அவர்கள் பட்ட அவமானங்கள், வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள் போதிய அளவு எழுத்தாகவில்லை என்று ஒரு விமர்சனம் உள்ளது. அந்தக் குறையை இந்த நாவல் போக்கியுள்ளது எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...