விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல் - இச்சிரோ கிஷிமி & ஃபூமிடாகா கோகா (தமிழில் குமாரசாமி); பக்: 350: ரூ. 450; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2-வது தளம், உஷா ப்ரீத் வளாகம், 42, மால்வியா நகர், போபால் - 462 003.
உளவியல் மாமேதைகளான சிக்மன்ட் ஃபிராய்டு, கார்ல் யுங் ஆகியோருக்கு இணையாக விளங்கிய ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகள், தத்துவார்த்தக் கருத்துகளின் சாராம்சத்தை விவாதங்கள் வாயிலாக இந்நூல் எடுத்துரைக்கிறது. பரபரப்பான வாழ்வின் மீதும், உலகின் மீதும் பெரும் அவநம்பிக்கை கொண்ட இளைஞனின் அடிமனதிலிருந்து எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஆணித்தரமான பதில்களை தத்துவஞானி முன்வைக்கிறார்.
நம்முடைய கடந்தகாலத் தளைகளிலிருந்தும், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது.
தீவிர மன அதிர்ச்சியை மறுத்தல், அனைத்து பிரச்னைகளும் தனிமனித உறவுப் பிரச்னைகளே, பிறருடைய வேலைகளை ஒதுக்கித் தள்ளுங்கள், உலகின் மையம் இருக்குமிடம், இங்கே இக்கணத்தில் உறுதிப்பாட்டுடன் வாழ்தல் ஆகிய ஐந்து முக்கியத் தலைப்புகளில் உளவியல் சார்ந்த அத்தனை சிக்கல்களையும் மாறுபட்ட கோணத்தில் இந்நூல் விளக்குகிறது.
சுற்றுப்புறமும், நாமும் நம் மீது திணிக்கின்ற வரம்பு எல்லைகளை மீறுவதற்கான துணிச்சலை இப்புத்தகம் வரவழைப்பதோடு மட்டுமல்லாது அதற்கான கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாகவும் இருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
லட்சக்கணக்கான வாசகர்களால் இந்நூல் விரும்பப்பட்டுள்ளது. வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.