அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2026

அம்மன் தரிசனம் தீபாவளி மலர், ஆன்மிக தரிசன மலர் என்று போற்றப்படும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

Updated On :

அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2026 - ஜெ.எஸ்.பத்மநாபன்; பக். 234; ரூ. 200; சென்னை - 600 002. 044-24341674.

பிருந்தாவன நந்தவனத்தில் கண்ணன் புல்லாங்குழல் இசைப்பது போன்ற அட்டைப்படம் அம்மன் தரிசனம் தீபாவளி மலருக்கு அழகு சேர்க்கிறது.

ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளைப் போற்றும் வகையில் அவரது சீடர் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ''ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த அஷ்டோத் தரசத நாமாவளி'' எனும் 108 திருநாமங்களை இயற்றியுள்ளார். அவற்றிலிருந்து 20 நாமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விளக்க உரையுடன் நூல் முழுவதும் ஆங்காங்கே ''பொருள்மிகு நாமங்கள்'' எனும் தலைப்பில் சேர்க்கப்பட்டிருப்பது இம் மலருக்கு அடிநாதமாக விளங்குகிறது.

நடிகை பண்டரிபாய் வடபழனியில் வாழ்ந்த வீடு ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலாக மாற்றப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டுக்காக இயங்கி வருகிறது என்ற தகவலும், கோயில் குறித்த விரிவான பார்வையும் வியப்பூட்டுகிறது.

ஹிந்து புராணங்களின் கணக்குப்படி பிரபஞ்சத்தின் கால அளவு நான்கு யுகங்களாகப் பிரிக்கப்படுகிறது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய நான்கு யுகங்களின் ஆண்டு வரம்புகள் குறித்தும், ஒவ்வொரு யுகத்திலும் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்கள் குறித்தும் விளக்கப்பட்டிருப்பது சிறப்பு.

காசியில் வீற்றிருக்கும் அன்னபூரணேஸ்வரி ஆலயம் தோற்றுவிக்கப்பட்ட வரலாறும், கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ஹொரநாட்டில் அமைந்துள்ள அன்னபூரணி தேவி ஆலயம் குறித்த வரலாறும் மலரின் தனித்துவமாக ஜொலிக்கிறது.

பதஞ்சலி முனிவரால் அருளப்பட்ட யோகசூத்திரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் 'ஈசுவர பிரணிதானம்' குறித்து மிக விரிவாகவும், வேதங்கள், புராணங்கள், தலைசிறந்த அறிஞர்களின் மேற்கோள்களுடன் மிக விரிவாக அலசியிருப்பது ஆழ்ந்த ஞானப் பொருளை வெளிப்படுத்துகிறது.

தீபாவளி பண்டிகையின் அடிநாதமாக விளங்கும் பகவான் கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்த கதை; பகாசுரனை பீமன் வீழ்த்திய கதை; கிருஷ்ணரின் கோவர்த்தன லீலை, இந்திரன் தனது அகந்தையை துறந்து கோவிந்த பட்டாபிஷேகத்துக்கு தனது வாகனமான ஐராவதத்தின் மூலம் கங்கை நீரால் அபிஷேகம் செய்தது, ராவணனுக்கு எதிரான போரில் ராமருக்கு வெற்றியை அருளவும், அவரை ஆசீர்வதிக்கவும் அகத்தியர் அருளிய 'ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்', பீஷ்மரின் புகழைப் போற்றும் கட்டுரை, திரௌபதியின் முற்பிறவி உள்ளிட்ட புராண, ஆன்மிக, ஆலயங்கள் குறித்த தகவல்கள் தோண்டத் தோண்ட வெளிப்பட்டுக்கொண்ட இருக்கும் புதையலைப் போல இம்மலர் விளங்குகிறது.

அம்மன் தரிசனம் தீபாவளி மலர், ஆன்மிக தரிசன மலர் என்று போற்றப்படும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.