கண்ணன் எங்கள் காதலன்!

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள். மன்னுயிர்களான நாமெல்லோருமே ஜீவாத்மாக்கள். ஜீவாத்மாவானது அந்தப் பரமாத்மாவை சென்று சேர்ந்திட வேண்டும். ஜீவாத்மாவுக்கு ஆண், பெண் என்கிற அடையாளங்க
கண்ணன் எங்கள் காதலன்!

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள். மன்னுயிர்களான நாமெல்லோருமே ஜீவாத்மாக்கள். ஜீவாத்மாவானது அந்தப் பரமாத்மாவை சென்று சேர்ந்திட வேண்டும். ஜீவாத்மாவுக்கு ஆண், பெண் என்கிற அடையாளங்கள் எல்லாம் பூமியில் வாழ்கிற நாளில் மட்டும்தான்! அவனை அடைய முயல்கிறபோது அவன் ஆணாகத் தோற்றம் சாதிப்பதால் நாமெல்லோருமே பெண்கள்தான். அம்மட்டில் பக்தியால் அவன் மேலே காதல் கொண்டால் நாம் அவனோடு கலந்து உய்வு பெற முடியும்.

  நமக்கெல்லாம் கண் என்ற ஒரு உறுப்பிருப்பது எதற்கு? ஒளியைக் காண்பதற்கு மட்டும்தானா? உலகில் ஒளி என்கிற ஒன்றே இல்லை என்றால் இந்தக் கண்கள் இரண்டும் இருந்தால்தான் என்ன... இல்லாமல் போனால்தான் என்ன?

  இந்த ஒளி இருக்கிறதே இது நிரந்தரமானதா? இல்லை இருட்டுதான் நிரந்தரமானதா? கேள்விக்குள் நுழைந்து பார்க்கும் போது இருட்டு என்பது நிரந்தரமானதாகவும் ஒளி என்பது அதனுள் வந்து செல்வதாகவும் இருப்பதை உணரலாம். கொஞ்சம் மாற்றி எங்கெல்லாம் ஒளி இல்லையோ அங்கெல்லாம் இருட்டு எனலாம். இன்னும் ஒருபடி மேலே போய் இருட்டில்லாத நிலையில் ஒளி எப்படி தேவைப்படுகிறது? இது ஒரு கட்டாயம். இந்த இரண்டாகவும் ஒன்று இருக்க முடியுமா? விஞ்ஞான புத்தியோடு பார்த்தால் சாத்யமே இல்லை என்கிற பதில்தான் வரும். "அது எப்படி ஒரு ஒளி சிந்தும் விளக்கே ஒரே சமயத்தில் இருளாகவும் இருக்க முடியும். இது வேறு... அது வேறுதான்...'  -இப்படிப் பதில்கள் வரும்.

  இந்தப் பதிலைக் கேட்டால் நம் கண்ணன் சிரிப்பான். அந்தச் சிரிப்பே, "நான் யாராம்? இருளாய் இருந்து விளக்காய் ஒளிர்பவன்தானே...?' என்று சொல்கிறார் போல் இருக்கிறது. அது எப்படி என்று பார்க்கத் தொடங்கினால் வியப்பூட்டும் விடைகளும் அணி வகுக்க ஆரம்பிக்கின்றன.

  நமக்கான வருடங்கள் தட்சிணாயணமாய், உத்தராயணமாய் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்கான வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்றால் அந்த ஒரு நாளில் தட்சிணாயணம் என்பது அவர்களின் இரவுக் காலம். இருளின் காலம்தானே இரவுக்காலம்? இந்த இரவுக் காலத்தில் ஆவணி மாத அஷ்டமி என்பது கிட்டத்தட்ட நள்ளிரவுப் பொழுது. அந்த அஷ்டமி நாளின் நள்ளிரவில் நடுநிசியில் இருண்ட ஒரு பிரபஞ்சச் சிறைக்குள் வசிக்கும் ஒரு தாயின் கர்பச்சிறைக்குள் இருந்து (எல்லாமே இருள்) ஒரு உயிர் வெளிவரத் தொடங்குகிறது. தோற்றமும் கூரிய தோற்றம்! பிறந்த உடனேயே அது தாய்ப்பால்கூட அருந்தாதபடி இடம் மாற்றப்படுகிறது. (அப்போது அந்தப் பாலை தவிர்த்த காரணத்தாலேயே பின்னாளில் அது பாலின் பரிணாம வெண்ணெயை தேடித் தேடி மட்டுமா, திருடித் திருடியும் விழுங்கியது!)

  அந்தக் கருப்பனை கூடையில் சுமந்தார் வசுதேவர். உயிரற்றது பாடையிலும், உயிரானதெல்லாம் கூடையிலும் என்பது என்ன கணக்கோ? அந்தக் கருப்பனை முதலில் நானே முற்றாய் அணைப்பேன் என்று பெய்யத் தொடங்கியது மழை! நாரமாகிய நீரை அணைந்து கிடப்பதால் நாரணன் ஆனவனை ஒரு காரணம் கருதியே கிருஷ்ண (கரிய) பிறப்பெடுத்தவனை நாரமாகிய நீரே முதலில் அணைய வந்ததில் ஆச்சரியமென்ன? எங்கே அந்த நீரே அந்த தெய்வப் பிஞ்சை முற்றாய் எடுத்துக் கொண்டுவிடுமோ என அஞ்சி எனக்குப் பங்குண்டு என்பதுபோல வாசுகிப் பாம்பு தன் சிரக்குடையை விரித்துப் பிடித்து சிறிது தூரம் அதுவும் துணை வந்தது. சின்னஞ்சிறு துளிகள் எல்லாம் பெருகிச் சேர்ந்திட துள்ளி ஓடுவதே ஆறு. கடலைத் தேடி ஓடுவதுதான் அதன் நோக்கு... கடலே ஒரு கூடைக்குள் சயனித்து வரும்போது அதுவும் பூரித்துப்போய் வழி விடுகிறது.

  இதை எல்லாம் புறக்கண்கள், மாயா ஜாலங்களாகத்தான் பார்க்கும். அகக்கண்களுக்கே அவ்வளவிற்கு பின்னாலும் ஒன்றைத் தொட்டு ஒன்று, அதைத் தொட்டு இன்னொன்று என்கிற அரிய தொடர்புகள் தெரியும்.

  இப்படி நாளிருள், நள்ளிருள், சிறையிருள், உருவிருள் என மொத்த இருளுக்குள்ளுமிருந்து எட்டாவதாய் எட்டிப் பார்த்த அந்த கிருஷ்ணனின் எட்டாம் பேறுக்குக் கூட ஒரு பொருள் இருக்கிறது. நாம் எட்ட வேண்டியவன் அவனே... அவனை எட்டு.. அவனே எட்டு... ஆஹா! என்ன ஒரு உட்பொதி!

  இப்படி இருளில் இருந்து இருள் வடிவாகவே வந்தவன் அள்ளித் தந்ததெல்லாம் ஒளி.. ஒளி.. ஒளி... ஒளி!  ஒளியன்றி வேறில்லை. அவன் தந்த ஒளியை உணர்வது தேகத்தில் ஊனக் கண்; யோகத்தில் ஞானக் கண்!

  இந்த இரண்டு கண்ணைத் தந்தவன் என்பதால் கண் அவன் கண்ணன் ஆனான்!

  இருளில் இருந்து வந்த இந்த ஒளி, ஆகாய சூரியனாக கிரணங்களை அனுப்பிவிட்டு அங்கேயே நின்றுவிடவில்லை. ஜீவாத்மாக்களைக் கடைத்தேற்ற அந்த பரமாத்மா தன்னையே ஒரு ஜீவாத்மாவாக ஆக்கிக் கொள்கிறான். ஆக பரமாத்மா ஜீவாத்மாவாகிவிட்டான். திரும்ப பரமாத்மாவாகப் போகிறான். எப்படி? அவன் வழி நடந்தால் நாமும் பரமாத்வாகிவிடலாம் என்பதை வேறு எப்படி உணர்த்த முடியும்? காஞ்சிப் பெரியவரின் கண்களின் வழியாகவும் கருத்தின் வழியாகவுமே அதை நாம் பார்க்கலாமே!

  "ஸ்ரீகிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அனேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அனுபவிக்கும் ரசிகன்! சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களை ஜெயித்ததால் மகாமல்லன்! ஸத்யையை மணம் புரிவதற்காக ஏழு காளைகளை அடக்கியதாலே மாடு பிடித்தவன், தூது போனவன், ராஜதந்திரன், அர்ஜுனன் தேருக்கு சாரதி, கோபியர்களின் உடைகளைக் களவாடியபோது கள்ளன், திரௌபதிக்கு வஸ்திராபரணம் பொழிந்தபோது ஆபத்பாந்தவன், குசேலனுக்கு அவல் கொடுத்து ஆஸ்தி கொடுத்தபோது வள்ளல், பீஷ்மருக்கு முக்தி அளித்தபோது கடவுள், துரியோதனன் முன் விசுவரூபம் எடுத்தபோது மாயாவி.

  அடேயப்பா...! உலகில் உள்ள கோடானு கோடி ஜீவாத்மாக்களின் எல்லாவித குணநலங்களையும் பிரதிபலிக்கிறான் கண்ணன்.'

  மகா பெரியவரின் கருத்துப்படியே பார்த்தால், ""பலவிதமான மனநிலையை உடையவர்கள் உலகில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமல் போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரசமாயிருக்கும். ஒரு உல்லாச புருஷனுக்கு இன்னொரு உல்லாச புருஷரின் கேளிக்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும்.

  கண்ணனோ எல்லாமுமாகக் காட்சி தருகிறான். பற்பல போக்குகொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகைவகையான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துக் கொண்டு, முதலில் தன் கருணைக்கும் பின்னர் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற்ற வைத்த கிருஷ்ணாவதாரமே பரிபூர்ண அவதாரம்!'' என்கிறார் மகா பெரியவர். அவரே தொடர்கிறார்.

  ""சிவராத்திரிக்கும் கிருஷ்ணன் அவதரித்த அஷ்டமி ராத்திரிக்கும் நடுவிலே நூல் பிடித்த மாதிரி 180 நாள் என்று ஒரு கணக்கு வருகிறது. சிவராத்திரியில் ஜோதியான லிங்கம் உதித்தது. கிருஷ்ண ராத்திரியில் கருப்பான அங்கம் உதித்தது. அது உள்ளடக்கம், கிருஷ்ணன் அதன் செயலடக்கம்!'' என்கிறார்.

  கிருஷ்ணனே பரிபூர்ண அவதாரி என்கிற பெரியவர் வார்த்தைகளை அனுபவித்து நோக்க வேண்டும். ராமாவதாரமும் மனித அவதாரம்தான். ஆனால் அதில் ராமன் சில கோடுகளைத் தாண்டவே மாட்டேன் என்று உறுதியோடு இருந்தான். கண்ணன்போல் இடைச்சிகளிடம் அடிபடவில்லை. ராஜசூய யாகம் புரிய வந்த வேத விற்பன்னர்களின் கால்களைத் தொட்டு கழுவி விடவில்லை. ராமன், மனிதரில் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் காட்டினான் என்றால் கிருஷ்ணன் தெய்வத்தில் மனித குணங்களை இறக்கிக் காட்டினான்.

  மண்ணில் விழும் மழைத்துளி விழுகிற இடத்தின் நிறம், மணத்தை அப்படியே தனக்குள் வாங்கிக் கொள்வதைப்போல கண்ணன் யாரை எல்லாம் கண்டானோ அவர்களை எல்லாம் அப்படியே பிரதிபலித்தான். இறுதியில் கீதையை எல்லோருக்கும் பொதுவாக அளித்தான். யாராக இருப்பினும் எம்மதத்தவராக இருப்பினும் கண்களை மூடிக் கொண்டு காதைக் கொடுப்போம். ஒரு சத்யமான உண்மை முன் கரையப் போகிறது பாருங்கள் நம் உள்ளம்.

""நீ என்ன கொண்டு வந்தாய்?

எதைத்தான் உன்னால் கொண்டு போக முடியும்?

  இன்று உன்னுடையது... நாளை வேறு ஒருவருடையது...!'' என்கிறான். வாழ்வின் நிலையாமையை இதைவிடச் சிறப்பாகவும் எளிமையாகவும் யாரால் கூற முடியும்?

  அதனால்தானோ பரம அத்வைதியான சங்கர பகவத்பாதரே, "பஜ கோவிந்தம்... பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் மூடமதே' என்றாரோ?

  காசி...

  அங்கே ஒரு பண்டிதர். காடு "வா வா' என்றழைக்கும் முதுமையில் வியாகரண சூத்திரம் ஒன்றை முக்கல் முனங்கலோடு படித்தபடி இருக்கிறார். ஆதிசங்கரரின் கண்கள் அவரை காண்கின்றன. உதடிரண்டும் பிளந்து சிரிக்கத் தொடங்கிவிடுகின்றன. அந்தப் பண்டிதருக்கு சிரிப்பின் ரகசியம் புரியவில்லை. காரணம் கேட்கிறார். ஆதிசங்கரரும் கூறுகிறார்.

  "இன்றோ நாளையோ என்று வாழ்நாள் முடிவுக்குக் காத்திருக்கும் உங்களுக்கு எதற்கு வியாகரண சூத்திரம்? இதுவா உங்களோடு வரப் போகிறது? ஆட்டுக்கும் மாட்டுக்கும் கூட ஸ்னேக சகாயம் புரிந்த, கோவாகிய பசுக்களோடு கூடித் திரிந்த அந்த கோவிந்தனின் நாமத்தை ஜெபியுங்கள். கோவிந்த நாமமும் கோபால நாமமும்தான் சுகமான ஆத்ம அதிர்வு. சொல்லச் சொல்ல உதிருமே பாவப்பதிவு!' என்கிறார்.

  அன்று அவர் அப்படிச் சொல்லப் போய் வந்ததுதான் நமது சத்சபைகளிலே எழுப்பப்படும் "கோபிகா ஜீவன ஸ்மரணம்' எனும் கோஷத்திற்கு உபகோஷமான "கோவிந்தா... கோவிந்தா' என்கிற கோஷம்!

  நாமும் சொல்வோம். இந்த கோகுலாஷ்டமியன்று மட்டுமல்ல. நம் ஒவ்வொரு நாளுமே ஜெயமாக "கோவிந்தா.. கோபாலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா... கோவிந்தா... கோபாலா... கோபாலா... கோவிந்தா...!' என்று கண்ணனாகிய காதலனைப் போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com