உற்சாகம் பீறிடும் உறியடி உற்சவம்
இறைவனுடைய திருவிளையாடல்களை நினைவு கூறும் விதமாகவும் அவனுடைய லீலா விநோதங்களையும், நடந்தேறிய தெய்வீகத்திருமணங்களை நிகழ்த்தி ஆடிப்பாடி மகிழ்வதும் குறிக்கோளாகக்


இறைவனுடைய திருவிளையாடல்களை நினைவு கூறும் விதமாகவும் அவனுடைய லீலா விநோதங்களையும், நடந்தேறிய தெய்வீகத்திருமணங்களை நிகழ்த்தி ஆடிப்பாடி மகிழ்வதும் குறிக்கோளாகக் கொட்தே ஆலயங்களிக்ல நடத்தப்படும். திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான உற்சவங்கள் உண்டு. இதன் மூலம்
அத்திருத்தலத்தின் சிறப்பு, பெருமை, மகிமையெல்லாம் அறியப்படும். அவ்வகையில் வரகூர் ஆலயத்திற்கும், ஊருக்கும் உறியடி உற்சவத்தினால் சிறப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் இவ்வூரில் உறியடி உற்சவம் கொண்டாடும் சம்பிரதாயம் தோன்றிய வரலாற்றைச் சற்று தெரிந்து கொள்வோம்.
ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகானுக்கு வராஹரூபமாக (பன்றி) வந்து தனது உண்மை சொரூபத்தை உணர்த்தியதோடு மட்டுமில்லாமல் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பரிபூரண நிவாரணமும் அளித்து அவரை ஆட்கொண்டான் வரகூர் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வேங்கடேசப் பெருமான். தன் இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் மனத்தைப் பறிகொடுத்த இம்மகான்தான் கிருஷ்ண ஜனனம் முதல் ருக்மிணி கல்யாணம் வரை நடைபெற்ற சம்பவங்களை வடமொழியில் கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற
இசைக்காவியத்தை வரகூர் திருத்தலத்தில் தங்கி இயற்றியதோடு மட்டுமில்லாமல் இவ்வூரில் ஜன்மாஷ்டமியன்று உறியடி உத்ஸவத்தையும் ஆரம்பித்து வைத்தார் என்பர். 'ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்னும் வடமொழியில் உள்ள நூல் கிருஷ்ணபரமாத்மாவின் உறியடி உற்சவத்தை மிகவும் விவரமாகத் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் காயத்ரி ஜபத்தன்று தொடங்கி கோகுலாஷ்டமி வரை நடைபெறும் இந்த உற்சவத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் வாசிகளும், வெளியூர் வாசிகளும் வரகூரில் வயோதிகர் முதல் சிறுவர்கள் வரை ஆண்கள், பெண்கள் அத்தனைப்பேரும் அந்தக் கோலாகல விழாவில் குதூகலத்துடன் கலந்து கொள்கிறார்கள். உற்சவ நாட்களில் கிருஷ்ண லிலா தரங்கிணியில் கண்டவாறு பகவானின் லீலைகளைக் காளிங்க நர்த்தனம் முதல் ருக்மிணி கல்யாணம் வரை ஆடிப்பாடிக் களிக்கிறார்கள். கோகுலாஷ்டமிக்கு மறுநாள் உறியடி உற்சவம் நடைபெறும். அன்று மதியம் வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் உற்சவமூர்த்தி பல்லக்கில் பவனியாக வேதகோஷம், நாம சங்கீர்த்தன முழக்கத்துடன் ஊரில் உள்ள காளிந்தி கடுங்கால் நதி மண்டபத்தில் எழுந்தருளச்
செய்யப்படுகின்றார். மாலை திருமஞ்சனம் ஆகி இரவு 11 மணி அளவில் வழுக்குமரம் ஏறி உறியடி அடிக்கப்பட்டு அதிலுள்ள பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். உறியடிக்கும் வைபவத்தின் போது பக்தர்கள் பக்தி மேலிட மிகுந்த உற்சாகத்துடன் "உறியடியோ கோவிந்தோ" என்று கூறி முழக்கமிடுவர். இரவு 12 மணிக்கு மேல் பெருமாள் வெள்ளிக் கேடயத்தில் திருவீதி உலாவாக ஆலயம் திரும்புவார். இந்த வீதியுலாவின் போது எண்ணற்ற பக்தர்கள் பெருமாளின் பின் அங்கப்பிரதிட்சணமாகச் செல்வது பார்ப்பதற்கு கெண்கொள்ளாக் காட்சி.
இந்த உறியடி உற்சவத்தின்போது வழுக்குமரம் ஏறுவது அவ்வளவு சுலபமல்ல. மரம் மிகவும் வழுவழுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஏறும்போது மஞ்சள் நீரை பீய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். அதனால் மரத்தில் ஏறுவதில் தடங்கல் ஏற்படும். இறுதியில் பெரும் முயற்சிக்குப்பின் உறியடி அடிக்கப்படும். இது ஒரு தத்துவ போதனையான விளையாட்டு என்று சொன்னலாம் அது
மிகையாகாது. எவ்வாறு எனில், உறியடிமேல் கட்டப்பட்டிருக்கும் சுவாமி பிரசாதங்கள் தான் ஞானம் என்பது அஞ்ஞான இருளில் உழன்று கொண்டிருக்கும் நாம் பல சோதனைகளையும்
இடையூறுகளையும் கடந்து அனுபவங்களினால் அறிவு பெற்று மேலே உள்ள பூரண ஞானத்தைப் பெறுவது தான் மோட்சம் என்பது. அதுவே பேரானந்த நிலை. அதுவே பெருமாளின் ஈடு இணையற்ற பிரசாதம். ஸ்ரீ நாராயண திர்த்ததரின் ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணி இம்மாதிரியான தத்துவார்த்தங்களை நிறைய இடத்தில் நமக்கு போதிக்கின்றது.
வரகூரில் இவ்வாண்டு உற்சவம் ஆகஸ்ட் 30ல் தொடங்கியது. உறியடி உற்சவத்திற்காக சுமார் 22 அடி உயரமுள்ள தேக்குமரம் (வழுக்குமரம்) ஆரோஹணம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி முக்கியமான உறியடி உற்சவத்திருநாளாகும். மறுநாள் ருக்மிணி கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. உறியடி உற்சவத்தில் பங்கேற்று உன்னதமான வாழ்க்கை பெறுவோமாக! வேங்கடவனின் பேரருளுக்குப் பாத்திரமாவோமாக!
காவிரியின் உபநதியான குடமுருட்டி ஆற்றின் கரையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 15 கிமி தூரத்தில் உள்ளது வரகூர் கிராமம். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
மேலும் தகவல்கள் பெற செல் 9443176391, 9597234721, வி.பி கார்த்தியே சர்மா-ஐ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...