ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவாசி எனப்படும் திருப்பாச்சிலாசிராமம்

மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

News image
Updated On :1 ஜனவரி 2018, 7:01 am

கடம்பூர் விஜயன்

திருச்சி டோல்கேட் - முசிறி சாலையில் பத்து கிமி தூரத்தில் உள்ளது திருவாசி எனும் சிற்றூர்.

மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவத்தலமாகவும் உள்ளது. இத்தல இறைவனை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது.

இந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்றுவழங்கப்பெற்றது". திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது

இது தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது.

Story image

இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானதுதானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது.

Story image

அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அன்னமா பொய்கையை உருவாக்க கிளி தனது அலகால் தோண்டி உருவாக்கிய குளம் பாலாம்பிகை சன்னிதானத்தின் முன் உள்ளது. இத்தலத்தில் அம்மன் சன்னதி மேற்கு நோக்கி சிவபெருமானை நோக்கி உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இவ்வம்மையாரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வரன் சிறப்பாக அமையும் என்பது பக்தர்கள் கருத்து.

Story image

இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயிருந்தது. அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழநாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகன் நோயை நீக்கியருள வேண்டினான்.,

கோயிலுக்கு வந்து அவரிடம் தன் மகளின் நிலையைக் கூறினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டித் "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க.." எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின்கீழ் அதற்குப்பதில் சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும்.

Story image

ராஜ கோபுரத்தின் கீழே அதிகார நந்தி மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்கு நவகிரகத்தில் சூரியன் தன் மனைவி உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தப்படி இருக்கிறது.

திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவ்வம்மைக்கே முதல் பூஜை நடக்கும்.

அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

Story image

பிரகாரத்தின் முதல் சுற்றில் நால்வர் அறுபத்துமூவர், ஏழுதேவியர், உள்ளனர். பிரகாரத்தின் பின் பரம் நவகண்ட வீரர்கள், பல்லவர்கால முருகன் திருமால், விஷ்ணு துர்க்கை, சூரியன் இன்னும் சில லிங்க பாணங்கள் உள்ளன. விநாயகர் முருகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னதிகள் உள்ளன. கஜலட்சுமி சன்னதியும் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், அர்த்தநாரி, பிரமன் துர்க்கை உள்ளனர்.

இறைவன் கருவறை வாயில் அருகில் தெற்கு நோக்கி முயலகன் இல்லாமல் பாம்பினை காலில் அணிந்தவாறு நடராஜர் உள்ளார். மேலும் இவர் தனது விரித்த சடையினைகொண்டையாக முடிந்துள்ளார். அருகில் கற்சிலையாக தெற்கு நோக்கி பைரவர் உள்ளார். தென்கிழக்கு மூலையில் சூரியன் சந்திரன் உள்ளனர். மேலும் சிற்ப நுணுக்க வேலைப்பாடுகளுக்கு பெயர் போன கருங்கல் பந்து தூண் உள்ளது. இச்சிவாலயத்தின் மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில் இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றினால் பொருளாதார மேன்மை அடைவர்.

பாலதோஷம் அல்லது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான தோஷம் பற்றியவர்கள் தொடர்ந்து மூன்று ஞாயிறுகளில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அத்துடன் அபிசேக தீர்த்தத்தை பருகினால் மூன்று நாளில் இந்த பாலதோசம் குழந்தைகளிடமிருந்து விலகும்.

திருமணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி அம்பிகைக்கு அர்ச்சனை அபிசேகம் செய்தால் திருமணம் விரைவில் நிச்சயமாகும். வலிப்பு, வயிற்றுவலி, வாதம் முதலிய நோய்கள் பாதித்தவர்கள் தொடர்ந்து ஒரு மண்டலத்திற்கு நடராஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்தால் நோயில் கடுமை குறைந்து பூரண குணமாகும்.

முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் 'ஆவுடையாப்பிள்ளை மண்டபம்' எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சம்மந்தர் கொல்லி மழவன் புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் உள்ளன.

சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கின்றது.

இங்குள்ள சுந்தரர் சிலையில் இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது.

கல்வெட்டுக்கள்

இத்தல கல்வெட்டில் "பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள்" என்று இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.

கி.பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.

மேலும் திருவாவடுதுறை ஆதீனம் பற்றிய கல்வெட்டு ஒன்றும் இக்கோயில் மண்டபத்தில் உள்ளது

கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை ஆதரித்தவன் இவன் காலத்தில் பாச்சில் வேள் நம்பன் என்பவர் வாழ்ந்தார், இவர் மழநாட்டுத் திருப்பாச்சில் (ஆச்சிரமம்) என்னும் ஊரினர் என்பதும், வேளிர் குலத்தவர் என்பதும் இவர் தம் பெயரால் அறியப்படும். இதனால் எட்டாம் நூற்றாண்டில் இத்தலம் அறியப்படுகிறது

திருவாசி திருத்தலத்தில்தான் இப்பூவுலகில் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் தோன்றியது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். சகஸ்ர லிங்கம் என்றால் ஆயிரம் லிங்க மூர்த்திகள் ஒரு சேர, ஒன்றாக இணைந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தி என்று பொருள். உண்மையில் முதன் முதலில் தோன்றிய சகஸ்ர லிங்க மூர்த்தி என்பதால் இங்குள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியின் ஒவ்வொரு முகமுமே ஒரு சகஸ்ர லிங்கத்தைத் தோற்றுவிக்க வல்லது என்றால் இந்த இறை மூர்த்தியின் மகத்துவத்தை மனித வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா? வாருங்கள் அவரை குடும்பத்துடன் வணங்கி பெறுதற்கரிய பேறினை அடைவோம்.

இத்தலம் குறித்து, திருஞான சம்பந்தமூர்த்தியின் திருப்பாச்சிலாச்சிராமத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாச்சிலாச்சிரமத் திருப்பதிகம் (12 பாடல்கள்), ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் சேத்திர திருவெண்பா (1 பாடல்) மற்றும் தனிப்பாடல்கள் 3-ம் உள்ளன.

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் கரூர் ஸ்வாமிநாதன்

கடம்பூர் விஜயன் (தொடர்புக்கு - 7639606050)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.