மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்!

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் என்ற கேள்விக்கு பதிலாக இதனை அனைவரும் படித்திருப்போம்.

News image
Updated On :20 மே 2019, 12:42 pm IST


உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் என்ற கேள்விக்கு பதிலாக இதனை அனைவரும் படித்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் மதிப்பெண்ணுக்கானவை அல்ல. வாழ்க்கைக்கான சூத்திரம் என்று இப்போது தான் உணர்ந்தும் வருகின்றோம்.சிலப்பதிகாரம் என்றதும் கண்ணகித் தாய் நமக்கு நினைவிற்கு வருவார்கள். கண்ணகியை தெய்வமாக வழிபடும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.கண்ணகி கோயில் பற்றி நாம் தேடிய போது தமிழ் நாட்டில் கூடலூர் வனத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது . நாம் சென்று வந்த அனுபவத்தை இங்கே சொல்ல விழைகின்றோம்.

மங்கலதேவி கோவில் (மங்களா தேவி கண்ணகி கோயில்) கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்.

கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது. இது சுருக்கமாக சொன்ன செய்தி. இனி கொஞ்சம் விரிவாக காண்போம்.

 சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில், கோவலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் கண்ணகி. கோவலனுக்கு யாழ் இசைப்பதில் அதீத ஆர்வம் உண்டு. அதே போல் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவனாக இருந்து வந்தான். இந்த நிலையில் பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மகிழ்ந்தான். அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான். அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதால், கண்ணகியை மறந்து, மாதவியின் வீட்டிற்கு சென்று அவளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.

தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.

நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண் மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.

அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மனைவியும் மன்னன் மார்பு மீது சாய்ந்து அழுதபடி தன் உயிர் நீத்தாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. கற்பில் சிறந்த 7 பெண்களின் பெயரை உச்சரித்து, ‘அவர் களைப் போல் நானும் கற்பில் சிறந்தவளாக வாழ்ந்தது உண்மையானால், இந்த மதுரை தீக்கிரையாகட்டும்’ என்று சாபமிட்டாள். அவளது கற்பின் வலிமையால் மதுரை மாநகரமே நெருப்புக்கு இரையானது. அதில் தீயவர்கள் இறந்தனர்; நல்லவர்கள் உயிர் தப்பினர்.

Story image

பின்னர் கண்ணகி அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு, கண்ணகி தெய்வ விமானமேறி தேவலோகம் சென்றாள். இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கண்ணகியை, அம்மனாக நினைத்து ‘இவளே நமது காவல் தெய்வம்’ என்று கூறி வழிபடத் தொடங்கினர்.

 இந்த நிலையில் சேர மன்னனான சேரன் செங்குட்டுவன் அந்தப் பகுதிக்கு நகர்வலமாக வந்தான். அப்போது அந்தப் பகுதி மக்கள் மன்னனைச் சந்தித்து, கண்ணகி என்ற பெண்ணைப் பற்றியும், அவள் மனித உடலோடு, தேவ விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றதையும் தெரிவித்தனர். இதையறிந்த மன்னன் ஆச்சரியம் கொண்டான். 

அப்போது மன்னனுடன் இருந்த புலவர் சீத்தலை சாத்தனாரும், ‘அரசே! அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் பற்றிய செய்தியை நானும் பாண்டிய நாட்டில் இருந்து வந்த தகவலால் அறிந்தேன். அந்தப் பெண்ணின் கணவன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நியாயம் கேட்கச் சென்ற அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிர் இழந்தான். மன்னன் இறந்ததும் அவனது மனைவியும் உயிர் துறந்தாள். பின்னர் மதுரையை தன் கற்பு நெறியால் எரித்து விட்டு, இவ்விடம் வந்து சேர்ந்திருக்கிறாள்’ என்றார்.

நாட்டு மன்னனுக்கு மேலும் ஆச்சரியம் சேர்ந்தது. கற்பில் சிறந்தவளாகவும், மனித உடலுடன் தேவலோகம் செல்லும் அளவுக்கு உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகவும் இருக்கும் கண்ணகிக்கு ஆலயம் கட்டுவது என்று மன்னன் முடிவு செய்தான். அவள் தேவலோகம் சென்ற அதே இடத்தில் கண்ணகிக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு, கேரளா மாநில எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது வண்ணாத்திப் பாறை என்னும் இடத்தில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் இருக்கிறது.

Story image

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் கோவில் திறந்தாலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாக காண முடிகின்றது.

மலை யாத்திரையில் விருப்பம் உள்ள அன்பர்கள் இங்கே சென்று தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.