Enable Javscript for better performance
what are the benefits of waking up in brahma muhurta?| பிரம்ம முகூர்த்தம்- Dinamani

சுடச்சுட

  
  nature

   

  உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டுமா? நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக வேண்டுமா? அதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆம், லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு திதி வார நட்சத்திர யோகம் என எந்த ஒரு தோஷமும் கிடையாது.

  பிரம்ம முகூர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நேரக் கணக்கிற்கேற்ப மாறுபடும். நம் நாட்டை பொறுத்தவரை அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி  வரையிலான நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

  இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் காலையில் எழுந்திருப்பதே கிட்டதட்ட மறுபிறவி போன்றுதான். எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதைச் சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதைப் பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். இந்நேரம் ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட நேரமாகக் கருதப்படுகிறது. 

  பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள்  கிடைத்தால், நல்ல நேரம் கிடைக்காது, இதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்கள், குறித்த காலத்திற்குள் செய்யமுடியாமல் தள்ளிப்போகும். இவற்றைத் தவிர்க்க நாம் பிரம்ம முகூர்த்தத்தைத் தேர்வு செய்யலாம்.

  வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. இதனால் தான் அதிகாலை துயில் எழுவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லதென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதிகாலை பொழுது மூளையில் செயல்படும் நரம்புகளை ஒருவித புத்துணர்ச்சியோடு வைத்திருப்பதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.

  கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. இதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள்  கூறியுள்ளனர். சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது  மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓசோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓசோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

  உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம்  உஷத் காலம் என்றழைக்கப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரகணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி  நீராடுவது விஷேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாகக் காணப்படுகிறது. 

  உஷத் காலத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் தியானம், வழிபாடு போன்ற  பயனுள்ள பணிகளைச் செய்யலாம். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தைத் தரும். மேலும், தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம்,  கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுபகாரியங்களைப் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம்.

  இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாகப் பூமியில் சஞ்சரிப்பதாகவும்,  அந்நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க, நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். 

  கிரக தோஷம், ராகு - கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் இவர்களுக்கு  திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே எந்தவொரு தோஷமும் அண்டாது. பிரிவினை ஏற்படாது அவர்களின் வாழ்க்கை சிறக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai