மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 9

புறத்தே நின்று நோக்க, உள்ளே உறங்குபவளின் மாளிகையும் அதன் அழகுகளும் புலப்படுகின்றன.
ஆண்டாள்
ஆண்டாள்
Updated on
2 min read

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்

புறத்தே நின்று நோக்க, உள்ளே உறங்குபவளின் மாளிகையும் அதன் அழகுகளும் புலப்படுகின்றன. தூய்மையான மாணிக்கங்கள் பதித்துக் கட்டப்பெற்ற மாடம்; இந்த மாடத்தில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, தீப ஒளியும் வாசனாதி திரவிய தூபங்களின் மணமும் சூழ, உள்ளே ஒரு தோழி உறங்குகிறாள். அவளை உறவு சொல்லி "மாமான் மகளே, கதவைத் திற' என்று அழைக்கிறார்கள்.  அவள் எழவில்லை என்னும் நிலையில் மாமன் மனைவியை விளிக்கிறார்கள். "மாமி, உன் மகளை எழுப்பமாட்டாயா? அவளென்ன ஊமையா(எங்களுக்கு மறுமொழி கூறவில்லை)? செவிடா (எங்கள் ஒலி கேட்கவில்லையோ)? சோம்பேறியா? உறக்கம் என்னும் மந்திரத்தின் வசப்பட்டாளா? கண்ணன் திருநாமங்கள் பலவற்றைப் பாடுகிறோம். கீழினும் கீழான எம்மோடு கலந்து பழக வந்திருப்பதால், "மாமாயன்' என்கிறோம்; லட்சுமி நாயகன் என்பதால் "மாதவன்' (மா=லட்சுமி) என்கிறோம்; பரமபத நாதன் என்பதால் "வைகுந்தன்' என்கிறோம்; பற்பல பெயர்கள் கூறியும் அவள் எழவில்லையே' என்று அங்கலாய்க்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:  "இதோ, இதோ' என்று சொன்னாலும், சோம்பலிலும் சுய மயக்கத்திலும் ஆழ்ந்து செயல்படாமல் இருக்கும் தன்மையை இப்பாசுரம் காட்டுகிறது. "மாமான் மகள்' என்றும் "மாமி' என்றும் கூறுவது, ஒருவகையானஉறவுத் தொடர்பைக் காட்டுவதாகும்; எம்பெருமான் அடியார்கள் யாவரும் உறவினர்களே என்பதாம். ஸ்வாபதேசத்தில், திருமழிசையாழ்வாரை இப்பாசுரம் போற்றுகிறது. 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். 

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்

விளக்கம்

உள்ளே இருப்பவர்களும் புறத்தே நிற்பவர்களும் ஒன்றிணைந்து இறைவனைப் போற்றுவதாக அமைகிற பாடல் இது. "முன்னருள்ள பழைய பொருட்களிலெல்லாம் மிகப் பழைமையான பொருளே! இனி வரவிருக்கும் புதுமைகளுக்கெல்லாம் புதியதான தன்மை கொண்டவனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன்னுடைய ஆழ்ந்த அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய அடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவருக்கே பாங்காக அடிமை செய்வோம்; அப்படிப்பட்டவரே எங்களின் கணவர்களாக ஆகும்படி அருள்வாயாக. அவர்கள் இடும் கட்டளைகளை உகப்போடு செயல்படுத்துவோம். எங்கள் பெருமானே, இவ்வகையில் எமக்கு நீ அருள்வாயேயானால், எந்தக் குறையும் இல்லாதவர் ஆவோம்' என்றே வழிபடுகிறார்கள். 

பாடல் சிறப்பு

பழைமையைக் குறிப்பிடும்போது "பொருள்' என்கிறார்கள். சிந்தனையானது, செறிவடைந்து, கருத்தாக்கம் பெற்று, பின்னர் பொருளாக உருப்பெறும்போது வடிவம் கொள்கிறது. பொருளாகும் நிலையில், சிந்தனையானது பழசாகிவிடுகிறது. ஆனால், சிந்தனை செறிவடைந்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு சிந்தனை தொடங்கிவிடக்கூடும். முதல் சிந்தனைக்கு இரண்டாவது சிந்தனை புதியது. புதுமைக்கு வடிவமோ திட்பமோ குறிப்பிட்டால், அது பழசு. ஆகவேதான், புதுமைக்குப் பெற்றி (தன்மை) என்கிறார்கள். சிவபக்தைகளான தங்களுக்குச் சிவனடியார்களே கணவர்களாக வேண்டும் என்று கேட்பது, சிவத்தொண்டில் வாழ்வைச் செலவிட வேண்டும் என்னும் ஆசையிலாம். காரைக்கால் அம்மையின் கதையை நினைவுகூரலாம். அகத்திலுள்ள நில (பிருத்வி) வடிவான வாமை என்னும் சக்தி எழுப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com