மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10)

வெளியில் நிற்கும் தோழிகள் அழைக்க, உள்ளிருப்பவள் விடைகூடத் தரவில்லை.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10)
Published on
Updated on
2 min read

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்:  

வெளியில் நிற்கும் தோழிகள் அழைக்க, உள்ளிருப்பவள் விடைகூடத் தரவில்லை. "என்னம்மா, நோன்பு நோற்றுச் சுவர்க்கத்திற்குள் புகுந்து கிடக்கிறாயோ?' என்று பரிகசிக்கிறார்கள். "வாசல்தான் திறக்கவில்லை, விடை தருவதற்கு வாயைத் திறக்கக் கூடாதோ? வாசனை கமழும் துளசி மாலையைத் தன்னுடைய திருமுடியில் சூடியவனான நாராயணன், நாம் துதிக்க, நமக்கு அருள் தருவான். அறத்தின் நாயகனான எம்பெருமான், இராமனாக அவதரித்தபொழுது, இயமன் வாயில் தள்ளப்பட்ட கும்பகர்ணன், தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குத் தந்துவிட்டுப் போய் விட்டானோ? பேருறக்கம் கொண்டவளே, அரிய அணிமணி போன்றவளே, தெளிந்து வந்து கதவைத் திற' என்று ஆதுரத்தோடு அழைக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

"அருங்கலம்' என்னும் சொல், நல்ல பாத்திரம் என்னும் பொருளில், இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கவர்கள் என்பதைக் குறிக்கும். உறக்கத்தாலும் சோம்பலாலும் தகுதியைத் தொலைத்துவிடக் கூடாது என்னும் படிப்பினையை நினைவு படுத்துகிற பாசுரம். "இதுதான் நீ நோன்பியற்றும் அழகா?' என்று கிண்டல் பேசுவதாகப் பொருளுரைத்தாலும், சு+வர்க்கம் என்று பிரித்து, "நல்ல கூட்டமான இந்தக் கூட்டத்திற்குள் சேர்ந்துவிடு' என்று அழைப்பதாகவும் விரிக்கலாம். ஸ்வாபதேசத்தில், இப்பாசுரமானது பேயாழ்வாரைச் சுட்டுகிறது. 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன்றன் கோயிற்பி ணாப்பிள்ளைகாள்!

ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆர்அயலார்?

ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 


பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - சுந்தர் ஓதுவார்

விளக்கம்:  

பாடிக்கொண்டே நீராடச் சென்றவர்கள், பொய்கையை அடைந்துவிட்டனர் போலும்! இறைவன் பெருமையை மேலும் பாடுகின்றனர். இறைவனின் திருவடியோ, அதல பாதாளம் என்னும் கீழுக்குக் கீழே உள்ள அனைத்தையும் கடந்து கீழே சென்றுள்ளது. திருமுடியோ, பொருள், வன்பொருள், நுண்பொருள் என யாவற்றையும் கடந்து மேலே சென்றுள்ளது. ஆக, அடியும் முடியும் (மனித, மன, சொல்) எல்லைகளுக்கு அப்பாற்பட்டன. அன்னை பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டவன். எனவே, ஒற்றைத் திருமேனியிலும், ஒரே திருமேனி இல்லாதவன். திருமேனி பலவாக, அதாவது, அனைத்துப் பொருள்களிலும் வடிவுகளிலும் உள்ளவன். வேதத்தின் விழுப்பொருள்ஆனவன். தேவர்களும் மனிதர்களும் (பிறரும்) எவ்வளவு துதித்தாலும் முழுமையாகத் துதிக்க முடியாத பெருமையன். இருப்பினும், உயிர்களிடம் கொண்ட கருணையால் தோழனாகிநிற்பவன். தொண்டர் உள்ளத்தில் வாழ்பவன். சிவன் திருக்கோயிலின் குற்றமற்ற பிணாப்பிள்ளைகளே! அவனுடைய ஊரும் பேரும் என்ன? உற்றவரும் அயலாரும் யார்? அவனைப் பாடும் வழி என்ன? }பிணாப்பிள்ளைகளைப் பார்த்து, வந்த பெண்கள் வினவுவதாக உள்ள பாசுரம் இது. 

பாடல் சிறப்பு: 

நீராடச் செல்லும் பெண்கள், தனித்தனி இல்லங்களிலே இருந்து வந்தவர்கள். திருக்கோயில் வளாகங்களில், கன்னி மாடங்களில் வசித்துக்கொண்டு, கோயில் பணியையே தங்களின் முழு நேரப்பணியாகச் செய்பவர்களே பிணாப்பிள்ளைகள் (சுந்தரரின் மனைவியரான பரவையும் சங்கிலியும் திருமயிலை அங்கண் பூம்பாவையும் கன்னி மாடத்தில் இருந்தவர்கள்). அன்றன்று காலை வரும் தங்களைக் காட்டிலும், பிணாப்பிள்ளைகளுக்கு வழிபாடும் வணக்கமும் முழுமையாகத் தெரியும் என்பதால், அவர்களிடம் வினவுகின்றனர். மூத்தோரிடமும் ஆசான்களிடமும் இளையோர் உபதேசம் பெறுகின்றனர் எனக் கொள்ளலாம். இறைவன் அடியும் முடியும் எல்லை கடந்தவை; எதிர் எதிர்த் தன்மைகளை இறைவனிடம் காணலாம். 

- டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com