மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)

துயிலெடையின் நிறைவுப் பாசுரமான இதனில், உள்ளும் புறத்துமாக நடைபெறும் உரையாடல் முழு வீச்சடைகிறது.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 15

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்!

பாடியவர் - பவ்யா ஹரி
 

விளக்கம்:  

துயிலெடையின் நிறைவுப் பாசுரமான இதனில், உள்ளும் புறத்துமாக நடைபெறும் உரையாடல் முழு வீச்சடைகிறது. இப்பொழுது அழைக்கப்பெறுபவள், எல்லோரிலும் இளையவள் போலும்! இதையே சொல்லி அழைக்கிறார்கள். 

புறத்திருப்பவர்கள்: "சின்னஞ்சிறிய கிளி போன்றவளே! இன்னமும் துயில்கிறாயோ?' 

உள்ளிருப்பவள்: சிலீரென்றுஅழைக்காதீர்கள். இதோ வந்துவிட்டேன். 
புறம்: வாயாடாதே. உன் வாய் வார்த்தை எங்களுக்குத் தெரியும். 

உள்: நானா (வாயாடி)? நீங்கள்தான் வாய் வல்லவர்கள். சரி சரி. நானே இருந்துவிட்டுப் போகிறேன். 

புறம்: கிடக்கட்டும்.. சீக்கிரம் வா. வேறென்ன அதிசயம் கண்டாய்?
உள்: எல்லோரும் வந்துவிட்டார்களா? 

புறம்: வந்துவிட்டார்கள். வெளியில் வந்து எண்ணிக் கொள். வலிய யானையான குவலயா பீடத்தை அழித்தவனும், பகைவர்களின் பகைமையை அழிப்பவனுமான கண்ணனைப் பாடலாம், வா. 

பாசுரச் சிறப்பு:

திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. "திருப்பாவையாகிறது இப்பாட்டிறே' என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு.  ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 


பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்:

இப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திக்கு ஏற்பட்ட இறையனுபவத்தையும் இத்தகைய அனுபவத்தை அருளிய இறைவனாரின் பெருமையையும் கூறுகிற பாடல். 

பெண் அடைந்த நிலை: ஒவ்வொரு பொழுது, "எம்பெருமான், எம்பெருமான்' என்று சிவனாரின் பெருமைகளை வாய் ஓயாமல் பேசுவாள். உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்ததால், கண்களில் இன்பக் கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பாள். கீழே விழுந்து வணங்கியபடியே கிடப்பாள். சிறு தெய்வங்களைப் பணியமாட்டாள். இவ்வாறு பித்தாகும்படி இவளை இந்நிலைக்குத் தள்ளியவர் யார்?

இந்நிலைக்குக் காரணமானவர்: பேரரசனான வித்தகன். 

ஆட்கொள்ளும் வித்தகனான சிவனின் திருவடிகளை வாயாரப் பாடி, பூக்கள் நிரம்பிய பொய்கையில் நீராடுவோம். 

பாடல் சிறப்பு: இறையனுபவச் செறிவை விவரிக்கும் பாடல். இருப்பினும், இப்படிப்பட்ட அனுபவமும் செறிவும், கடவுள் அருளால் மட்டுமே கிடைக்கும். ஒருத்திக்கு இப்படிப்பட்ட அருள் கிட்டுமானால், நோன்பியற்றி வழிபட்டால், நமக்கும் இவ்வனுபவத்தை அருள்வார் என்னும் நம்பிக்கையை இப்பெண்கள் வெளிப்படுத்துகின்றனர். அனுக்கிரகம் என்னும் அருளல் தொழிலைக் குறிக்கும் பாடல்.  

-டாக்டர் சுதா சேஷய்யன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.