மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். "நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு' என்று விண்ணப்பிக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், "தூயோமாய் வந்தோம்' என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - பொன் முத்துக்குமரன்

விளக்கம்:

பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான "ஆழி மழைக்கண்ணா' என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது.

"எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவதுபோல், மேகத்தின் மின்னலும் மிளிர்ந்து மறைகிறது. அடுத்து இடிக்கிற இடியோ, எங்கள் அம்மையின் திருக்கால்களில் அணிந்திருக்கும் சிலம்புகளின் ஒலியாகும். இடிக்குப் பின் வானில் தோன்றுகிற வானவில், எங்கள் அம்மையின் திருப்புருவம் ஆகும்' என்று மேலும் இப்பெண்கள் விவரிக்கிறார்கள். மின்னல் மின்னி, இடியும் இடித்து, வானவில்லும் வளைந்து, பின்னர் மழை பொழிய வேண்டும். இப்போது மழையை வேண்டுகிறார்கள். மேகமும் மழையும் ஒன்றுக்கொன்று இணைந்து கலந்தவை; இவை போன்று, அம்மையும் ஐயனும் எப்போதும் ஒன்றுசேர்ந்தே இருப்பர். "அம்பிகையைப் பிரியாதவரான எங்கள் பெருமான், எந்தப் பாரபட்சமும் பாராமல் அருள் தருவார். அதுபோன்றே, இப்போது மழையே பொழிவாய்' என்று வேண்டுகிறார்கள். 

பாடல் சிறப்பு:

சங்கப் பாடல்களில், "தை நீராடல்' என்பதன் பயனாக மழை பேசப்படுகிறது. மார்கழி - தை நீராடலின் நீட்சியான பாவை நோன்பிலும் மழையை வேண்டுகின்றனர். மழையையும் அன்னையையும் ஒப்பிட்டுக் காட்டுவது உயர் அன்பின் வெளிப்பாடு. மழையானது, உலக உயிர்களைப் பாதுகாத்து வளர்க்கும். அம்பிகை, உயிர்களையும் ஆன்மச் செறிவையும் பாதுகாத்து வளர்க்கிறாள். பாவை நோன்பு தொடங்கியபோது, இப்பெண்கள் ஒருவரையொருவர் எழுப்பி அழைத்தனர்.

அடுத்து, அவரவர் தனி வாழ்வை நேர்ப்படுத்தும் வகையில், சிவனடியார்களே கணவராக வரவேணும் என்று வேண்டினர். இந்த நிலைவரை, தன் வாழ்க்கை என்னும் தன்னலம் இழையோடியது. தொடர்ந்து, ஆன்மப் பக்குவம் பெற்று, பொய்கையையும் சூழலையும் அம்மையப்பனாகக் கண்டனர். இப்போதோ, செடி, கொடி, மேகம், மின்னல், இடி என்று அனைத்தையும் இறைவன் இறைவியாக நோக்கும் பக்குவம் மட்டுமின்றி, உலகம் நன்றாக இருப்பதற்கான மழையை, எல்லோர்க்கும் பொதுவாகப் பொழியும்படி வேண்டுகின்றனர். தன்னலம் மறைந்து பொதுநலம் முழுவதுமாய் நிறைந்துவிட்டது. நோன்பின் பொதுப்பயனைக் குறிக்கும் பாட்டு. 

- டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com