தெய்வ தரிசனம்... பணத் தட்டுப்பாடு நீக்கும் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர்!

பணத் தட்டுப்பாட்டை நீக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
Masilamaneeswarar
மாசிலாமணீஸ்வரர்
Published on
Updated on
4 min read

காவிரி தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 36-வது தலமாக உள்ள தலம் திருவாவடுதுறை. திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை வேண்டி, எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழி பெற்ற தலம்.

இறைவன் பெயர்: மாசிலாமணி ஈஸ்வரர், கோமுக்தீஸ்வரர்

இறைவி பெயர்: அதுலகுசநாயகி, ஒப்பிலாமுலையம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்தும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் சுந்தரர் பதிகம் இரண்டும் என 8 பதிகங்கள் இருக்கின்றன.

எப்படிப் போவது?

மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் கிளைப் பாதையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில்,

திருவாவடுதுறை,

திருவாவடுதுறை அஞ்சல்,

நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 803.

இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் இத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவருடைய தந்தையான சிவபாத இருதயர், தான் செய்ய வேண்டிய வேள்விகளுக்கு உரிய காலம் வந்ததால், அதற்கு வேண்டிய பொன்னும் பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர், யாகத்துக்குப் பொருள் வேண்டி இத்தல இறைவனை நோக்கி, “இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்து இறைவனை சம்பந்தர் வணங்க, இறைவன் திருவருளால் ஒரு சிவபூதம் தோன்றி, பலிபீடத்தின் மீது ஆயிரம் பசும்பொன் கொண்ட கிழி ஒன்றை வைத்து, "எடுக்க எடுக்கக் குறையாத இந்த உலவாக்கிழி இறைவன் உமக்கு அருள் செய்து கொடுத்தது" என்று கூறி மறைந்தது.

சம்பந்தர், இறைவன் திருவருளை நினைத்து அவரை பணிந்து வணங்கி, அந்தப் பொற்கிழியை தனது தந்தையாரிடம் கொடுத்து, "இப்பொருள் தங்களுடைய வேள்விக்கு மட்டுமின்றி, சீர்காழியில் வாழும் வேதியர் அனைவருக்கும் வேள்வி, யாகம் செய்ய வேண்டிய பொருளைக் கொடுக்கும்" என்று கூறி, தந்தைக்கு விடையளித்து மேலும் சில காலம் திருவாவடுதுறையில் தங்கி இருந்தார்.

எடுக்கக் குறையாத உலவாக்கிழி பெற சம்பந்தர் பாடி அருளிய திருப்பதிகத்தை இறை நம்பிக்கையுடன் பாராயணம் செய்பவர்களுக்கு, இன்றைய நாளிலும் அதற்குரிய பலனைத் தந்துகொண்டிருக்கிறது. பொற்கிழி வைக்கப்பட்ட இந்தப் பலிபீடம், வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது.

தலத்தின் சிறப்பு

சிவனும் மகாவிஷ்ணுவும், பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர, பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.

பார்வதி, மகாவிஷ்ணுவுக்கு சாதகமான பதிலைக் கூறியதால், பார்வதியை பூமியில் பசுவாகப் பிறக்கும்படி சிவபெருமான் சாபம் இடுகிறார். இப்படி பசுவாகப் பிறந்த பார்வதி, பூவுலகில் பல இடங்களில் இறைவனைப் பூஜித்தாள். இத்தலத்துக்கு வந்து தம்மை வழிபட்டு வந்தால் சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள், பசுவின் வடிவில் இங்கு வந்து சிவனை வேண்டித் தவம் இருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு விமோசனம் கொடுத்தார். “கோ” என்றால் பசு. பசுவுக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இத்தல இறைவன் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர், போகரின் சீடர். இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம், அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், நரசிங்கன் என்ற மன்னன் தனது படை வீரர்களை அனுப்பி அவரைத் தாக்க முயன்றான். திருமாளிகைத்தேவர், கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து மன்னடின் படை வீரர்களை விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை. இன்றும் இவ்வாலயத்தின் மதில்களில் நந்திகள் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு சிவபெருமான் மகப்பேறு அருளி, இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம். புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருசமயம், சிவன் அவனது கனவில் தோன்றி, இத்தலத்துக்கு வந்து தன்னை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி, முசுகுந்தன் இங்கு வந்து சிவனை வணங்கிப் புத்திரப்பேறு பெற்றான். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரநாதர் எனும் சிவயோகி, கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்துகிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுதுகொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர், தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு, இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டுக்குத் திரும்பாததால், அவனது மனைவி அங்கு வந்து, சுந்தரநாதரைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே, மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களைப் பாடினார். இவைதான் திருமூலரின் திருமந்திரமாகத் தொகுக்கப்பட்டன. இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் திருமூலருக்கு சந்நிதி இருக்கிறது.

சுவாமி சந்நிதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில், இத்தலத்தின் உற்சவமூர்த்தியான அணைத்தெழுந்த நாயகர் இருக்கிறார். இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் விளங்குகிறது. கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும், பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை. அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும். பலிபீடத்தை நான்குபுறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களைப் பெயர்க்க, அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இவருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. திருவிடைமருதூர் தலத்துக்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால், இங்கு நந்தியிடம் வேண்டிக்கொள்வது விசேஷம்.

சிவன் இத்தலத்தில், போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். தருமதேவதை, இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில்தான். திருமூலர், திருமாளிகைத்தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில்தான். இவ்வளவு சிறப்புபெற்ற திருவாவடுதுறை தலத்தை அவசியம் சென்று தரிசியுங்கள்.

திருஞானசம்பந்தர் பொருள் வேண்டி பாடி அருளிய திருப்பதிகம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. (1)

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்

புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. (10)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com