"இவ்வருடம் பங்குனி மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரம் கூடிய நாளில் (18.3.2016) அன்று திருமழபாடியில் நந்தி கல்யாணம் நடைபெற உள்ளது. திருமணம் ஆகாத ஆண், பெண் தங்களது திருமணம் விரைவில் கூடிவர திருமழபாடி தலம் சென்று இத்திருமண வைபவத்தைக் கண்டு பலன் அடையலாம்." |
காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில், 54-வது தலமாக திருமழபாடி விளங்குகிறது. இத்தலத்தில்தான், நந்திதேவருக்குத் திருமணம் நடைபெற்றது. "நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம்" என்பது வழக்கு. பங்குனி மாதம் பூச நட்சத்திரத் திருநாளில் இங்கு நடைபெறும் நந்தி கல்யாணத்தைக் கண்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும் என்பது ஐதீகம். அவ்வகையில், திருமழபாடி ஒரு சிறந்த திருமண பிரார்த்தனைத் தலம்
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 2-ம், திருஞானசம்பந்தர் பதிகம் 3-ம், சுந்தரர் பதிகம் ஒன்றும் என 6 பதிகங்கள் இருக்கின்றன. தேவாரம் பாடிய மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் திருமழபாடி தலமும் ஒன்றாகும்.
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம், திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்தத் திருத்தலத்துக்குச் செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாகப் பேருந்து வசதி உள்ளது. அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம்.
ஆலய முகவரி |
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்குப் பெயர் வச்சிரதம்பேஸ்வரர். அம்மனின் பெயர் அழகம்மை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை, புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக்கொண்டிருந்ததாகவும், அதனை மீட்டு எடுத்துச்செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அதனால், இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால், இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில், "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ, "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கிறார்
இந்த ஊருக்குப் பெயர் மழபாடி என்று வந்ததற்குக் காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம், ஏழு நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம்.
கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சி அளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர். சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். கொள்ளிட நதி, இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாஹினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம்
இந்தக் கோவிலின் தல விருட்சம் பனை மரம். மேலும், இங்கு உள்ள குளத்துக்கு மருத்துவக் குணம் இருப்பதால், இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் தலத்துக்கு எவரேனும் நேர்த்திக் கடன் இருந்தால், அதை இந்தக் கோவிலில் நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
நந்தி கல்யாணம்
இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்தி தேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி, வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம், திருமழபாடி திருத்தலத்தில் சிவபெருமான் முன்னிலையில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம்தோறும் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் நந்தி கல்யாணத்தைக் கண்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும் என்பது ஐதீகம். "நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம்" என்பது இத்தலத்தின் சொல் வழக்கு. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு நடைபெறும் திருமண உற்சவத்தில், இந்த ஊரைச் சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொள்வார்கள். இதனை தொடர்ந்து, சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாடவைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர், சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர், அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழபாடி ஆலயத்துக்கு வந்த சுந்தரர், "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.
அந்தப் பதிகம் இதோ!
1. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
2. கீளார் கோவணமும் திருநீறு மெய்பூசி உன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்று கொள் நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே.
3. எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம் மாயப்பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
4. பண்டே நின்னடியேன் அடியார் அடி யார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசு அறுத்தேன்
வண்டார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
5.கண்ணாய் ஏழு உலகும் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
6. நாளார் வந்து அணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்று கொள் நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
7. சந்து ஆரும் குழையாய் சடைமேற்பிறை தாங்கி நல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே
மைந்தார் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
8. வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இடமிகு செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
9. நெறியே நின்மலனே நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
10. ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்து இருப்பாரே.
இந்த தலத்துக்கான பதிகத்தைப் பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

courtesy : www.shivatemples.com

அடுத்த வாரம் சந்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.