செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் வைத்தீஸ்வரன் கோவில்

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோவில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
Updated on
3 min read

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோவில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

இறைவன் பெயர்: வைத்தியநாதர்

இறைவி பெயர்: தையல்நாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் எழுதிய இரண்டு பதிகங்கள், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம்தான் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. நவக்கிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்,
வைத்தீஸ்வரன்கோவில்,
வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 117.

இவ்வாலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம், காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்புபெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான், இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

செவ்வாய், இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட செங்குஷ்டநோய் வியாதி நீங்கப்பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் இத்தலத்தில் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இத்தலத்துக்கு வருகை தருகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைபடும். அது மட்டுமின்றி, பல்வேறு வகையான இடையூறுகளும் செவ்வாய் தோஷத்தினால் விளைவதுண்டு.

செவ்வாய்க்கு அதிபதியான முருகன் இத்தலத்தில் .இறைவியின் சந்நிதிக்கு அருகில் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். செவ்வாய்கிழமைகளில் இத்தலம் வந்து அங்காரகன் எனப்படும் செவ்வாய் சந்நிதியில் பிரார்த்தனை செய்து, செவ்வாய் தோஷ பரிகாரங்களைச் செய்து முருகப்பெருமானையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.

கோவில் அமைப்பு

நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால். அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடதுபுறம் சித்தாமிர்த குளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். அருணகிரியார் இத்தலத்து முருகனை திருப்புகழில் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று இத்தலத்திலுள்ள முத்துக்குமாரசுவாமிக்கு விசேஷ பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியவை நடைபெறும். அர்த்தசாம பூஜையில், முத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே இறைவனுக்கு வழிபாடு நடைபெறும்.

கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடம் உள்ளது. ராவணனுடன் சடாயு போர்புரிந்து மாண்ட ஊர் இது எனவும், அந்த சடாயுவுக்கு ராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக்கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிராகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்கால் அம்மையாரும் உள்ளனர். ரிக், யஜுர், சாம, அதவர்ண ஆகிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாக உள்ளன.

வைத்தீஸ்வரன்கோவில் சென்று வைத்தியநாதர், தையல்நாயகி, செவ்வாய் மற்றும் முத்துக்குமாரசுவாமியை தரிசனம் செய்து வாழிவில் வளம் பெறுங்கள்.

இத்தலத்தைப் பற்றிய திருப்புகழ் பாடலைப் பாடியவர் திருத்தணி சுவாமிநாதன்

இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலைப் பாடியவர் திருத்தணி சுவாமிநாதன்

Picture courtesy : www.shivatemples.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com