தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் கேதுவுக்கு உரிய தலமாக கீழப்பெரும்பள்ளம் போற்றப்படுகிறது.
இறைவன் பெயர்: நாகநாதஸ்வாமி இறைவி பெயர்: சௌந்தர்யநாயகி |
எப்படிப் போவது?
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து பிரியும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் சுமார் 2 கி.மீ.. பயணித்தால் கோவிலை அடையலாம். தர்மகுளம் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் நிறைய உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், |
கேதுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. கேது, பிறப்பில் ஒரு அசுரன். விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாகப் பிறந்து வளர்ந்துவந்தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அமிர்தம் வெளிப்பட்டது. அதை மகாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்குப் பரிமாறிக்கொண்டு இருந்தவேளையில், தானும் அமிர்தம் பருக வேண்டும் என்று நினைத்த அசுரனாகிய கேது, உருவத்தை மாற்றிக்கொண்டு தேவர்கள் வரிசையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து, மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டுவிட்டான். உண்மை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சொல்ல, மஹாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும், அமிர்தம் உண்ட மகிமையால் அவன் உடல் பகுதியில் உயிர் இருந்தது. கேதுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க, இறைவன் அவனை உடல் மற்றும் ஐந்து நாகத்தலையுடன் செந்நிறமாக கேதுவாக மாற்றி அருள் செய்தார். அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். ஆக, நவக்கிரகங்களில் ஒன்றான கேது வழிபட்ட தலங்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்று.
தல வரலாறு
அமிர்தம் பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி எனும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். வலி பொறுக்காத வாசுகி நஞ்சைக் கக்கியது. அந்த நஞ்சை உண்டு, இறைவன் நீலகண்டர் என்று பெயர்பெற்றார். அமுதம் கிடைக்காத கோபத்தில், வாசுகி நாகத்தை அசுரர்கள் தாக்கி வீசி எறிந்தார்கள். பூம்புகார் அருகில் இருந்த மூங்கில் காட்டில் வந்து விழுந்த வாசுகி நாகம், சிவபெருமான் நஞ்சு உண்ண தான் காரணமாகிவிட்டோமே என்று வருந்தியது. சிவனை நோக்கி தவம் செய்தது. சிவபெருமான் காட்சி தந்தார். தான் செய்த பாவத்தை மன்னித்து அருளும்படியும், தான் தவம் செய்த இந்த மூங்கில் காட்டிலேயே கோவில்கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டும் என்றும் வாசுகி நாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, மூங்கில் காடான இத்தலத்தில் கோவில் கொண்டு, நாகநாதர் என்ற பெயருடன் இறைவன் காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு
ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில், ரிஷபாரூடராக சிவபெருமான் சுதை வடிவில் காட்சி தருகிறார். முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பெரிய நந்தியைக் காணலாம். இறைவன் நாகநாதஸ்வாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார். இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. பிராகாரத்தில் சனீஸ்வரரும், இரண்டு சூரியர்களும் காட்சி தருகின்றனர்.
ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும். மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்துவிட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச்செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம்.
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து செல்கின்றனர். ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
கீழப்பெரும்பள்ளம் செல்லுங்கள். கேது தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.
Picture courtesy : www.shivatemples.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.