கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஏழு சிவஸ்தலங்கள் வரிசையில், 2-வது தலம் திருச்செங்கோடு. கணவன் – மனைவி இருவரும் மனமொத்து மகிழ்ச்சியுடன் வாழவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் வழிபட வேண்டிய தலங்களில் இந்தத் திருச்செங்கோடு, முக்கியமான ஒரு தலமாகும்.
எப்படிப் போவது?
ஈரோட்டில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருச்செங்கோடு உள்ளது. சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டுக்கு நேரடி பஸ் போக்குவரத்து இருக்கிறது.
ஆலய முகவரி |
இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
சிவஸ்தலங்கள் அனைத்திலும் மூலவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன்தான் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில், அர்த்தநாரீஸ்வரராக ஒரு பாதி ஆண் உருவம் - அதற்குண்டான அலங்காரம், மறு பாதி பெண் உருவம் - அதற்குண்டான அலங்காரம் என்று, முழு வடிவமும் சுமார் 6 அடி உயரம் உள்ளவராகக் காட்சி தருகிறார்.
இறைவி கேதார கௌரி விரதம் இருந்து சிவனைப் பூஜித்து, இறைவனின் திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்று, என்றும் இறைவனை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் பெற்றாள். இத்தலத்தில் இறைவன், இறைவி எப்போதும் சேர்ந்து தரிசனம் தருவதால், பிரிந்து வாழும் தம்பதியர் கூடி வாழவும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்படவும் தரிசிக்க வேண்டிய தலமாக திருச்செங்கோடு விளங்குகிறது.
கோவில் அமைப்பு
தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம்தான் இப்போது திருச்செங்கொடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல சுமார் 1250 படிக்கட்டுகள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலமாகவும் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன.
குன்றின் உச்சிக்குக் சென்றவுடன், வடதிசையில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிராகாரத்தை அடையலாம். திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. திருச்செங்கோடு, விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம்.
அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக, பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால், வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிப்பர்.
மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று, இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.
இந்தக் கோவிலில் வடக்குப் பிராகாரத்தில் உள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில், இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்பு உள்ள மண்டபத்தின் தூண்களில் காணப்படும் சிற்பங்கள், மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.
சிவனின் இடதுபாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்துக்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்துப் பூஜிப்பர். இந்தப் பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கும்.
படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன், மஹாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்ணு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது இவருக்குத் தனியே கொடியேற்றி, 10-ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு நான்கு கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.
அர்த்தநாரீஸ்வரர், சதயம் நட்சத்திரத்துக்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்கி வரலாம்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிராகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கல் தூண்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல் சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன. நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடு மிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கல் தூண் சிற்பங்கள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் என்றால் அது மிகை இல்லை.
இத்தலத்துக்கான திருஞானசம்பந்தர் பதிகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாற் ஒரு பாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
அலைமலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம்
மலைமகள் கூறு உயான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாற் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கோல மலர்ப் பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே.
வார் உறு கொங்கைநல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளிச்
சீர் உறும் அந்தணர்வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து பணைத்தோளி ஓர் பாகம் ஆகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.
ஓங்கிய மூவிலை நல் சூலம் ஒரு கையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கு அணிந்து
கோங்கு அணவும் பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினையாய பற்றறுமே.
நீடு அலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடல் உடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினை ஆய தேயுமே.
மத்தநல் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளியாய வாதிபிரான்
கொம்பு அணவும் பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினையாய நாசமே.
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்செங்குன்றூ ஏத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.

இந்தப் பதிகத்தைப் பாடியவர் குமாரவயலூர் திருஞ்ஞான பாலச்சந்தர்

courtesy : www.shivatemples.com

அடுத்த வாரம் சந்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.