காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 192-வது தலமாக திருவெண்ணியூர் விளங்குகிறது. சர்க்கரை வியாதியை நீக்கவும், அதைக் கட்டுப்படுத்தவும் மக்கள் வழிபடும் தலம் என்ற பெருமையை உடைய திருவெண்ணியூர் என்ற இத்தலம், இன்றைய நாளில் கோயில் வெண்ணி என்று அழைக்கப்படுகிறது.
இறைவன் பெயர்: வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர், கரும்பேஸ்வரர் இறைவி பெயர்: அழகியநாயகி, செளந்தரநாயகி |
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது?
தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. பூஜைப் பொருட்கள் ஆலயத்தின் அருகில் கிடைப்பது அரிது. அதனால், அவற்றை வழியிலேயே வாங்கிக்கொண்டு செல்வது நல்லது.
ஆலய முகவரி அருள்மிகு வெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில், |
இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சங்க காலத்தில் இத்தலம் வெண்ணிப்பரந்தலை என்று அழைக்கப்பட்டது. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெண்ணிப்பரந்தலையில் நடைபெற்ற போரைப் பற்றி தமிழக சரித்திரம் படித்தவர்கள் நன்கு அறிவார்கள். தன்னை எதிர்த்த சேர, சோழ மற்றும் 11 குறுநில மன்னர்களை எதிர்த்து கரிகால் சோழன் இந்த வெண்ணியில்தான் போரிட்டு பெரும் வெற்றி கண்டான். இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, கரும்பேஸ்வர் ஆலயத்துக்குக் கரிகால் சோழன் பல திருப்பணிகள் செய்தான்.
சர்க்கரை நோய் குணமடைய வழிபட வேண்டிய தலம்
கரும்பில் இருந்துதான் சர்க்கரை எடுக்கப்படுகிறது. நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்தச் சர்க்கரை நோய் இன்று நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம்.
கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள் செளந்தரநாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயிலிருந்து விரைவில்குணம் பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெண்ணிக் கரும்பேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, சர்க்கரையும் ரவையும் கலந்து பிரகாரத்தில் வரும் எறும்புகளுக்கு உணவாகத் தூவுகிறார்கள். பின்பு பிராகாரம் வலம்வந்து வெண்ணிக் கரும்பேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வாறு செய்துவந்தால், தங்கள் சர்க்கரை நோய் படிப்படியாகக் குறைவதாக நம்புகின்றனர்.
கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் கரும்பேஸ்வரர் சுயம்புலிங்க உருவில் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி கரும்புக்கழிகளை ஒன்று சேர்த்துக் கட்டியதுபோல் காணப்படுவது சிறப்பாகும்.
கோவில் அமைப்பு
கிழக்கு திசையில் மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், கிழக்குப் பிராகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, காலபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கரும்பேஸ்வரர் கருவறைச் சுற்றுச் சுவரில் கோஷ்ட தெய்வங்களாக நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் செளந்தரநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்துக்கு வெளியே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக நந்தியாவட்டை உள்ளது.
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் இரண்டும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை), திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும், இப்பதிகத்தை தொடர்ந்து ஓதுபவர்கள் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர் என்றும் பலவாறு குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசரும் தனது பதிகத்தில் இதனையே குறிப்பிடுகிறார். 5-ம் திருமுறையில் உள்ள அவரின் பதிகத்தில், இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்குபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார்.
திருஞானசம்பந்தர் பதிகம் - (2-ம் திருமுறை) 14-வது பதிகம்
சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.
மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை
ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே.
முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே.
காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.
மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே.
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினைக் கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.
குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.
மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.
இத்தலத்துக்கான திருஞானசம்பந்தரின் பதிகத்தைப் பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

இத்தலத்துக்கான திருநாவுக்கரசரின் பதிகத்தைப் பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

Picture courtesy : www.shivatemples.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.