
காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 75-வது தலமாக திருப்புகலூர் உள்ளது.
இறைவன் பெயர்: அக்னீஸ்வரர்
இறைவி பெயர்: கருந்தாழ் குழலி
எப்படிப் போவது?
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது. பிரதான சாலையில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலை அடையலாம். இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்,
திருப்புகலூர், திருப்புகலூர் அஞ்சல்,
நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 704.
இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
ஒரு சமயம், அவ்வாறு பங்குனி விழாவின்போது தனது மனைவி பரவையார் செலவுக்குப் பொன் பெற விரும்பி, சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது, தான் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக்கண்டு வியப்படைந்து திருப்பதிகம் பாடி வணங்கினார்.
இத்தகைய அற்புதம் நிகழ்ந்ததால், புதியதாக வீடு கட்டுபவர்கள் குடும்பத்துடன் இத்தலம் வந்து இறைவன், இறைவியை வழிபட்டு கோவிலுக்கு உரிய காணிக்கையை செலுத்த வேண்டும். கோவில் சார்பாக பூஜையில் வைத்து மூன்று செங்கல்களை பிரசாதமாகக் கொடுப்பார்கள். இந்த செங்கல்களை எடுத்துவந்து ஒரு நல்ல நாளில் முதல் கல்லாக வைத்து கட்டட வேலையைத் தொடங்கினால், எந்தவிதத் தடையும் இன்றி வேலை விரைவில் நல்லபடியாக முடியும்.
கோவில் விவரம்
மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். நான்கு புறமும் அகழியால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது. மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாக, சுமார் 90 அடி உயரத்தில் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நாம் முதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர், ஆலிங்கன கல்யாணசுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.
மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோன்மணிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிராகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள், இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப்போல் இல்லாமல் ட என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சந்நிதியில் உள்ளனர்.
தலத்தின் சிறப்பம்சம்
இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால், இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும்போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக்கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.
பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆனால், திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும்போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக, தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
திருநாவுக்கரசர் தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திரத் தலமாக விளங்குகிறது. இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது. சித்திரை சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர், சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக நடத்தப்படுகிறது.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
என்று தொடங்கும் பதிகம் பாடிக்கொண்டே அப்பர் இறைவனுடன் ஒரு சித்திரைச் சதய நாளில் இரண்டறக் கலந்துவிட்ட சிவஸ்தலம் திருப்புகலூர்.
63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாருடைய அவதார தலமாகவும் திருப்புகலூர் விளங்குகிறது. முருக நாயனாருக்கு இத்தலத்தில் சந்நிதி உள்ளது. இத்தலத்திருந்த முருக நாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலத்தைப் பற்றிய சுந்தரர் எழுதிய தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணவர்கள்
Picture courtesy : www.shivatemples.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.