தெய்வ தரிசனம்... பித்ரு தோஷம் போக்கும் திருத்திலதைப்பதி மதிமுக்தீஸ்வரர்!

பித்ரு நிவர்த்தி தலமாக இத்தலம் விளங்குகிறது.
 Mathimuktheeswarar
மதிமுக்தீஸ்வரர்
Published on
Updated on
4 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருத்திலதைப்பதி. இதற்கு திலதர்ப்பணபுரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இன்றைய நாளில் இத்தலம் செதலபதி என்று அழைக்கப்படுகிறது.

இறைவன் பெயர்: மதிமுக்தீஸ்வரர்
இறைவி பெயர்: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று பாடினார்.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம். பூந்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆதிவிநாயகர் கோயில் என்று இக்கோயிலை அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
செதலபதி,
பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்.
திருவாரூர் மாவட்டம் – 609 503.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்றுகொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும்படி கட்டளையிட்டு, நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார்.

பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்துக்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயணியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்துகொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட, அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.

நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்யவேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக்கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது, பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக்கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் ராமன், லக்ஷ்மணன் இருவரும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். ராமன் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமன் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்துவைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் லிங்கங்களாக மாறின.

கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையிலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், ராம லக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாகக் காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு, கோயிலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்துக்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். ராமனாக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிராகாரத்தில் நவகிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்றுவிதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்குப் பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் ராமன். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சம்பந்தர் இத்தலத்தை மதிமுத்தம் என்றே குறிப்பிடுகிறார். ஆகையால், ஊரின் பெயர் திலதைப்பதி என்றும் கோவிலின் பெயர் மதிமுத்தம் என்றும் அந்நாளில் வழங்கியிருக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் பதிகம்

1. பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும் மதிமுத்தமே.

2. தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலை மதிமுத்தமே.

3. அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.

4. கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர்தன் இடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.

5. புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலருந் திலதை மதிமுத்தமே.

6. விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்தருள் பேணி நின்ற மதிமுத்தமே.

7. ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்த மதிமுத்தமே.

8. கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதை மதிமுத்தமே.

9. படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

10. புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

11. மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com