தெய்வ தரிசனம்... எம பயம், பாவங்கள் நீக்கும் திருக்கடையூர் பிரம்மபுரீஸ்வரர்!

காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 48-வது தலமாக விளங்குகிறது. திருக்கடவூர்.
பிரம்மபுரீஸ்வரர் திருக்கடையூர்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கடையூர்
Published on
Updated on
3 min read

காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 48-வது தலமாக இருக்கும் திருக்கடவூர் (திருக்கடையூர்) மயானம் என்ற இத்தலம், செய்த பாவங்களும் வினைகளும் நீங்கும் தலம் என்று தேவாரத்தில் போற்றப்பட்டுள்ளது. மேலும், எமவாதனையை நீக்கும் தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.

    இறைவன் பெயர்: பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்

    இறைவி பெயர்: நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை

நுழைவாயில்
நுழைவாயில்

எப்படிப் போவது?

மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. 

மூலவர் பிரம்மபுரீஸ்வரர்
மூலவர் பிரம்மபுரீஸ்வரர்

ஆலய முகவரி

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருமெய்ஞானம்,
திருக்கடையூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 311.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு
 
திரு சிவகுமார், செயல் அலுவலர், கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், கைபேசி: 8098274712
 

அம்பாள் நிமலகுசாம்பிகை
அம்பாள் நிமலகுசாம்பிகை

சைவ சமயத்தில் ஐந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர்  மயானம். மயானம் என்பது பிரம்மதேவரை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில், பிரம்மாவை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு சிவபெருமானால் பிரம்மா எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயிர் வழங்கவேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி, இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து, படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா, சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே, இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

கருவறை விமானம்
கருவறை விமானம்


அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற 44 தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும். மேற்கு பார்த்த 55 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன், ஒரு பெரிய வெளிப் பிராகாரம் காணலாம். நேர் எதிரே உள்ள மூன்று நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. மூன்று நிலை கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிராகாரத்துடன் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக்குறடு அணிந்தும்  காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். சிங்காரவேலரை வழிபட்டுவர அனைத்துவித சத்ரு தொல்லைகளும் நீங்கி, நம்முடைய அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும்.

வில்லேந்திய சிங்கார வேலன்
வில்லேந்திய சிங்கார வேலன்

ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார்.  வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில், கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள். ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்துக்கு அருகில் உள்ள கிணறு காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டுதான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிரம்ம தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்

என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள்பெற்ற மார்க்கண்டேயர், சிவபூஜை செய்வதற்காக, கங்கையை இக்கிணற்றில் சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்துவந்தாலும், அமிர்தகடேஸ்வருக்கு அபிஷேகம் கிடையாது. இந்தப் புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன ஆகிவிடும் என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன், கடவூர் மயானம் இறைவன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தபோது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. 

அம்பாள் சன்னதி
அம்பாள் சன்னதி

இத்தல காசி தீர்த்தத்தில் மார்க்கண்டேயருக்காக இறைவன் அருளால் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்தப் புண்ணிய நாளில் அமிர்தகடேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி  நடைபெறும். அச்சமயம் மட்டுமே பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். இந்நாளில் இங்கு பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவது காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது. 
 

இறைவன் கருவறை விமானம்
இறைவன் கருவறை விமானம்

இத்தலத்துக்குரிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவார பதிகப் பாடல்களிலும், இத்தல ஆலய கலவெட்டுகளிலும், இத்தல இறைவன் பெரிய பெருமானடிகள் என்று குறிப்பிடப்படுகிறார். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கொன்றை மரமும் வில்வ மரமும் விளங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com