ராஜ கோபுரம்
ராஜ கோபுரம்

தெய்வ தரிசனம்... சகல பாவங்கள் போக்கும் திருவாய்மூர் வாய்மூர்நாதர்!

சகல பாவத்தையும் போக்கவல்லது இக்கோயிலில் உள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தம்.
Published on

இறைவன் பெயர்: வாய்மூர்நாதர்

இறைவி பெயர்: பாலினும் நன்மொழியம்மை

எப்படிப் போவது?

திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி, எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்து மூலமாகவும் செல்லலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில்

திருவாய்மூர், திருவாய்மூர் அஞ்சல்

வழி திருக்குவளை S.O.

நாகப்பட்டினம் வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.

இவ்வாலயம், தினமும் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலயத்தின் பெருமைகள்

கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தம் சகல பாவத்தையும் போக்கவல்லது. பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கும்போது, இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இத்தலத்தில் உள்ள நடுமண்டபத்தில், நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.

கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி
கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி

இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார். அதன்படி, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.

இரண்டாவது வாயில்
இரண்டாவது வாயில்

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்னாபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செயுது வழிபட்டால், தோஷங்களின் காரணமாக தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலைகளால் அவர்ச்சனை செய்தால், வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமைகளில் பைரவரை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவரை வழிபடுவதன் மூலம், இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்,

கோவில் அமைப்பு

இத்தலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடனும் ஒரு பிராகாரத்துடனும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயிலின் முன்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றாவதாகக் கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமல நடனம்.

வேதாரண்யேஸ்வரர் சன்னதி
வேதாரண்யேஸ்வரர் சன்னதி

தியாகராஜர் சந்நிதி மூலவர் வாய்மூர்நாதர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. மூலவர் வாய்மூர்நாதர் சந்நிதிக்கு இடதுபுறம் திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் வாய்மூர்நாதர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

சூரியன் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப்பெற்றுள்ளார் என்று தலப்புராணம் கூறுகிறது. ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்டதாகப் கருதப்படும் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

ஒரே வரிசையில் நவக்கிரகங்கள்
ஒரே வரிசையில் நவக்கிரகங்கள்

திருநாவுக்கரசர், மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது, தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும், ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும்போது, இறைவன் அவர் கனவில் தோன்றி, அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் அங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார்.

எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு

அங்கே வந்தடை யாளம் அருளினார்

தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்

அங்கே வாவென்று போனார் அது என்கொலோ.

அங்கே திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர், அவரைத் தேடிக்கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன், திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்க 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும், ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த சம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார்.

இறைவன் கருவறை விமானம்
இறைவன் கருவறை விமானம்

சம்பந்தர் தான் கண்டுகளித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. அப்பரும் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில்,

பாட வடியார் பரவக் கண்டேன்

பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்

ஆடல் முழவம் அதிரக் கண்டேன்

அங்கை அனல் கண்டேன் கங்கை யானைக்

கோட லரவர் சடையிற் கண்டேன்

கொக்கி விதழ்கண்டேன் கொன்றை கண்டேன்

வாடல் தலையொன்று கையிற் கண்டேன்

வாய்மூர் அடிகளை நான் கண்டவாரே.

என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி வாய்மூர்நாதரை வணங்கினார். அப்பர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் அம்மையப்பனாக இறைவன் காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர். இவ்வளவு சிறப்புபெற்ற திருவாய்மூர் தலத்தை நீங்களும் ஒரு முறை சென்று தரிசியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com