கண் நோய், கண் திருஷ்டி நீங்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 780-வது தலமாh இருப்பது திருபயற்றூர்.
கண் நோய், கண் திருஷ்டி நீங்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்
Published on
Updated on
4 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 780-வது தலமாh இருப்பது திருபயற்றூர். இத்தலம் தற்போது திருப்பயத்தங்குடி என்று வழங்கப்படுகிறது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர்

இறைவி பெயர்: காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை

எப்படிப் போவது

திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது

ஆலய முகவரி

அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோவில்
திருப்பயத்தங்குடி, திருப்பயத்தங்குடி அஞ்சல்
வழி கங்களாஞ்சேரி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் - 610 101.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல் மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய, கடல்துறை நோக்கி இத்தலத்தின் வழியே செல்லும்போது, சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக் கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும் வழக்கம் இருந்தது. ஆனால், பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. வணிகர் இத்தலத்தின் பெருமானை அடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார்.

சிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டபடி, மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்தபோது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். மகிழந்த வணிகர், நாகப்பட்டினம் நோக்கி பயணத்தைத் துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறு மூட்டைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பிவிட்டனர். சுங்கச்சாவடி கடந்தபின், பயறு மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டைகளாக மாறிவிட்டன. வணிகர் மிக்க லாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால், இத்தலம் திருப்பயற்றூர் எனவும், இறைவன் திருப்பயற்றுநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகிறது.

*

திருப்பயற்றூரில் வாழ்ந்துவந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் மிகவும் அவதிப்பட்டான். அவன் இத்தலத்து தீர்த்தமான கருணா தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டு தனது கண் நோய் நீங்கப்பெற்றான். குணமடைந்த அவன் இத்தலத்து ஆலயத்துக்கு திலம் அளித்த விவரம் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. கல்வெட்டின்படி, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாக உள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால், யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகிறது.

கோவில் அமைப்பு 

இவ்வாலயம் கிழக்கு நோக்கி நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறம் சுதையால் ஆன சிற்பங்கள் நம்மை கவர்கின்றன. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி சந்நிதி தரிசிக்கத்தக்கது. 

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாள்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாக உள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் 
நோக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே. 

உவந்திட்டடு அங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் கனலெரியாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலும் திருப்பயற்றூரனாரே.     

நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள்
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னை
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சுத்
திங்களுக்கு அருளிச் செய்தார் திருப்பயற்றூரனாரே.     

பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல
தீர்த்தமும் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே.     

மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்
ஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூரனாரே. 

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய்ச் சோமன் ஆகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்தனாகிப்
பேயறாக் காட்டிலாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுநம் திருப்பயற்றூரனாரே.     

ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்
காவியங் கண்ணளாகிக் கடல்வண்ணமாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே.     

தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணியுள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனுமாகி
எந்தை யெம்பிரானே என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையுஞ் சிவமும் ஆவார் திருப்பயற்றூரனாரே. 

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார் மனத்தினுள் போகமாகிச்
சினங்களைக் களைவர் போலும் திருப்பயற்றூரனாரே. 

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com