விஷக்கடிக்கு பரிகாரத் தலம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 66-வது தலமாக இருப்பது அரிசிற்கரைபுத்தூர்.
விஷக்கடிக்கு பரிகாரத் தலம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்
Published on
Updated on
3 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 66-வது தலமாக இருப்பது அரிசிற்கரைபுத்தூர். இத்தலம் இந்நாளில் அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திலுள்ள முருகர் சந்நிதி, விஷக்கடிக்கு ஒரு மிகச் சிறந்த பரிகார சந்நிதியாக விளங்குகிறது.

இத்தலத்துக்கு செருவிலிபுத்தூர் என்ற பெயரும் உண்டு. இங்கு வாழ்ந்து வந்த 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயானாருக்கு நித்தம் ஒரு படிக்காசு அளித்து அவர் வறுமையைப் போக்கி இத்தல இறைவன் அருள் செய்ததால், இலகு வழிபாடு செய்வதன் மூலம் நமது வறுமையையும் போக்கி இறைவன் நமக்கும் அருள் செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்துக்கு, தேவார மூவர் பாடிய பதிகங்கள் உள்ளன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இறைவன் பெயர்: சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர்

இறைவி பெயர்: அழகாம்பிகை

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே, பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே கோயில் உள்ளது. 

ஆலய முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
அழகாபுத்தூர், கிருஷ்ணபுரம்,
சாக்கோட்டை S.O.,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 612 401.

இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயம், அரிசிலாற்றின் தென்கரையில் மேற்குப் பார்த்த மூன்று நிலைகளுடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான முற்றவெளி உள்ளது. நேரே கருவறை முன் மண்டபத்துக்கு எதிரில் கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். 

முற்றவெளியின் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும், இடதுபுறம் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிரு கரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில், வலது புறமுள்ள ஆறு கரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடது புறமுள்ள ஆறு கரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்துகொண்டால், விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாக உள்ளது.

வெளிப் பிராகார வலம் வரும்போது, கிழக்குச் சுற்றில் கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோரின் சுதைசிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், முன்மண்டபத்தில் இடதுபுறம் நெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று, புகழ்த்துணை நாயனாருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

மூலவர், சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். நாள்தோறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மூவராலும் பாடப்பெற்ற பெருமை உடைய இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தங்களாக அமிர்த புஷ்கரணி மற்றும் அரிசலாறும் திகழ்கின்றன. 

புகழ்த்துணை நாயனார் 

அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைபுத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவவேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர், சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினமும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்டபோதிலும், தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை.

முதுமையின் துயரம் போதாதென்று, ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரணத்தினால், புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக்கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவறவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும், ஆலயப் பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை.

ஒருநாள், அரிசிலாற்றுக்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக்கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால், சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டுவிட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். 

மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்குப் பொற்காசு தருகிறேன். அதனால் உன் துனபங்கள் தீரும் என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார், சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது.

அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால், இறைவனுக்கு படிக்காசு அளித்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது. புகழ்துணை நாயனார் கை தவறி விழுந்த குடம் பட்ட தழும்பு இறைவனின் திருமுடியில் இருக்கக் காணலாம்.

சுந்தரர் தனது பதிகத்தின் 6-வது பாடலில், புகழ்த்துணையாருக்கு இறைவன் படிக்காசு அளித்து அருள் செய்ததை குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அகத்தடிமை செய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந்து ஆட்டுகின்றான்
மிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்
முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தம் படியும்
வரும் என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து உகந்தீர்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.

சுந்தரர், தனது பதிகத்தின் முடிவில் தனது பதிகத்தை மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும் சிறப்புமிக்க தேவர் கூட்டத்துள் கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி மு.இரமேஷ்குமார் ஓதுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com