Enable Javscript for better performance
சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்- Dinamani

சுடச்சுட

  சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

  By என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி  |   Published on : 28th June 2021 12:59 PM  |   அ+அ அ-   |    |  

  sani_bhagavan

   


  திருநள்ளாறு என்றாலே ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் தலம், தோஷங்கள் விலகும் என்ற எண்ணத்துடன், திருநள்ளாறு சென்றாலே சனி பகவான் பற்றிக் கொள்வார் என்றிருக்கும் எண்ணம் சிறிதும் ஏற்புடையதல்ல.

  நளச் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனிதோஷம் விலகச் செய்ததோடு, இந்தக் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்பதிலிருந்து சனி பகவான் குறித்த அச்சம் விலகுகிறது, விலக வேண்டும், விலகும்.

  அனைத்துக்கும் மூலமான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் மூலவராக இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். பாடல் பெற்ற தலம் என்பதோடு மூலவரையும் அம்பிகையையும்  தரிசித்து சனி பகவானைத் தரிசிக்கும்போது தோஷம் விலகி வாழ்வு ஒளிபெறுகிறது என்பது ஆன்றோர் வாக்கு. 

  தர்பாரண்யேஸ்வரர் கோயில் ஏழுநிலை ராஜகோபுரம்.

  நளனின் வீழ்ச்சியும் வாழ்வும்

  நிடத நாட்டின் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நளன் என்னும் அரசன், விதர்ப நாட்டின் மன்னரின் மகளான தமயந்தியை சுயம்வரத்தால் மணந்துகொண்டார். கலிபுரு என்பவர் தமயந்தி தமக்குக் கிட்டாத வருத்தத்தில் நளன் மீது கோபமும் அழுக்காறும் கொண்டு அவரைப் பழிவாங்க முற்பட்டார். 12 ஆண்டுகள் வரை பழி தீர்க்க காத்திருந்த அவர், ஒரு நாள் இறை வழிபாட்டுக்காகத் தமது பாதங்களை நீரால் நளன் தூய்மை செய்யும்போது, புறங்காலில் (பின்கால்) தண்ணீரின்றி இருந்துவிட்டது. நளன் செய்த குற்றத்துக்கு உரிய காரணமாகக் கூறி கலிபுருவாகிய சனி பகவான் அவரை பிடித்துக்கொண்டார். அப்போது முதல் நளனை அவர் ஆட்டிப் படைக்கத் தொடங்கினார்.

  பல்வேறு நிலையில் நளன் தமது நிலையை இழந்து, நகரங்களை இழந்து மனைவியோடு நாட்டைவிட்டு வெளியேறினார். குழந்தைகள் இருவர் நல்ல முறையில் வாழ நினைத்து மாமன் வீட்டின் பராமரிப்பில் விட்டுவிட்டு மனைவியோடு கானகம் சென்றார். கானகத்தில் மனைவியை அவரிடமிருந்து சனி வேறுபடுத்திவிட்டார்.

  தங்கக் காக வாகனத்தில் உற்சவரான சனீஸ்வர பகவான்.

  கணவரைக் காணாமல் கதி கலங்கிய தமயந்தியை, சுவாகுகன் என்ற மன்னன் காப்பாற்றி அவளது தந்தையான வீமசேனன் நாட்டுக்கு அனுப்பிவைத்தான். கானகத்தில் நளனைக் கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்டி அழகற்றவனாக்கியது. குள்ளமான வடிவம், கரிய மேனி, விகாரமான தோற்றம் ஏற்பட்டது. வாகுகன் என்ற பெயருடன் இருதுபன்னன் என்னும் அரசனுக்கு தேர்ப் பாகனாக அவன் ஊழியம் செய்தான்.

  இதையும் படிக்கலாம்: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  தமது கணவரை மீண்டும் அடைய விரும்பித் தந்தையிடம் பேசி மீண்டும் ஒரு சுயம்வரத்துக்கு தமயந்தி ஏற்பாடு செய்தார். 2-ஆம் சுயம்வரத்துக்கு அரசன் இருதுபன்னன் தேரில் சென்றடைந்தான். தேரைச் செலுத்தியவனோ உருமாறியிருந்த நளன்.

  நளன் தான் உருமாறி வந்திருப்பதைத் தமது உள்ளுணர்வால் உணர்ந்தாள் தமயந்தி. தந்தையிடம் இதற்கான உண்மையைக் கண்டறியக் கூறினாள். வாகுகனிடம் உண்மையை உரைக்கக் கூறியதன்பேரில், உண்மை வெளிப்படும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த வாகுகன் உருவிலிருந்த நளன், முன்பு தன்னைத் தீண்டி உருமாறச் செய்த கார்க்கோடகன் பாம்பு கொடுத்த, இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த அரவுரி (பாம்புத் தோல்) ஆடையை எடுத்து உடனே உடுத்திக்கொண்டான். உடனடியாக வாகுகன் மறைய, கவின்மிகு உருவத்தில் நளன் தோன்றினான்.

  எனினும் அவன் மனதில் நிம்மதி இல்லை. அவர் முன் தோன்றிய நாரதர், திருத்தலப் பயணம் சென்றுவந்தால் பிடித்த சனி விலகிவிடும், மன அமைதி கிட்டும் என்றார்.

  அண்மையில் கருங்கல் மண்டபமாக அமைக்கப்பட்ட சனீஸ்வர பகவான்  சன்னதி.

  மனைவி, மக்களுடன் புண்ணிய பயணம் மேற்கொண்டான் நளன். எத்தனையோ திருத்தலங்களுக்குச் சென்றும் நிம்மதி கிடைக்கவில்லை. அப்போது பரத்துவாச முனிவரை வணங்கியபோது, ஞானத்தால் அவர், திருநள்ளாறு சென்று தீர்த்தத்தில் நீராடி, தர்பாரண்யேஸ்வரரை வழிபடுமாறு யோசனை கூறினார். அவ்வாறு திருநள்ளாறு வந்து, தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரர் தலத்தை அடையும்போது, இனியும் நளனைப் பிடித்திருப்பதால் பயனில்லை என எண்ணி விலக சனி முடிவெடுத்தார். தர்பாரண்யேஸ்வரரை வணங்கியபோது நளனுக்கும் அவரது மனைவி, மக்களுக்கும் இறைவன் கருணை காட்டினார். கருவறை வரை செல்ல முடியாத சனி பகவான் கோயிலின் பக்க மாடத்தில் நின்றார் (இப்போதைய சனி பகவான் சன்னதி).

  அப்போது இறைவன், இனி என்னை வணங்கி அருள் பெறுவோர், உன்னையும் (சனி பகவான்) துதிப்பார்கள். இதே மாடத்திலிருந்து அருள் புரிவாயாக என சனி பகவானுக்குத் திருவாய் மலர்ந்தார். நளனும் இழந்த ஆட்சிப் பொறுப்பை மீண்டும் அடைந்து அரசாட்சி புரிந்தான்.

  கோயிலில் உள்ள 63 நாயன்மார்கள் 

  அப்போது முதல் சனி தோஷம் ஏற்பட்டவர்கள் தர்பாரண்யேஸ்வரரையும் அம்பிகையையும் வணங்கி சனீஸ்வர பகவானை வழிபடும்போது தீர்வு கிடைக்கும் (தோஷம் விலகும்) என நம்பிக்கையோடு வந்து பயனடைகிறார்கள். 

  இதையும் படிக்கலாம்: சர்வதோஷ நிவர்த்தி தலமான திருவாரூர் தியாகராஜர் கோயில்

  பாடல் பெற்ற தலம்

  தேவாரம் பாடிய மூவரும் தர்பாரண்யேஸ்வரரைப் பற்றிப் பாடியுள்ளனர். திருஞான சம்பந்தர் நான்கு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகமும் பாடியுள்ளார்.

  விடங்கர் தலம்

  திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் முசுகுந்த சக்ரவர்த்தி. வலாசுரனுக்கும், இந்திரனுக்கும் போர் ஏற்பட்டபோது, இந்திரனின் வெற்றிக்குத் துணையாக நின்றவர் என்ற பெருமையால், இந்த வெற்றிக்காக முசுகுந்தனுக்குப் பரிசளிக்க விரும்பினார் இந்திரன். இந்திரன் வழிபட்டுவந்த சோமாஸ்கந்த மூர்த்தியான தியாகராஜப் பெருமானைப் பரிசாகத் தருமாறு முசுகுந்தன் கேட்டான்.

  தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத  தர்பாரண்யேஸ்வரர் (உற்சவர்).

  தனது ஆத்மார்த்த மூர்த்தியைப் பிரிய மனம் இல்லாத இந்திரன், அதே ஒத்த உருவத்தில் மேலும் 6 திருவுருவங்களைப் படைத்து, 7 மூர்த்திகளையும் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் காட்டி, இதிலிருந்து ஒன்றைப் பெற்றுக் கொள் என்றார். தியாகேசப் பெருமானின் திருவருளால், இந்திரன் ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபட்டு வந்த தியாகராஜ மூர்த்தியை முசுகுந்தன் எடுத்தான். இதையடுத்து, 7 தியாகராஜப் பெருமான் திருவுருவங்களையும் முசுகுந்தனிடமே அளித்து அனுப்பிவைத்தான் இந்திரன்.

  திருவாரூர் திரும்பிய முசுகுந்தன், இந்திரன் வழிபட்ட தியாகேசப் பெருமானை திருவாரூரிலும், மற்ற 6 தியாகேசப் பெருமான் திருவுருவங்களை திருக்கோளிலி, திருநள்ளாறு, திருநாகை, திருக்காரவாயில், திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகிய இடங்களிலும் நிர்மாணித்தான் என்பது புராணம்.

   பிரமோற்சவ நடனக் கோலத்தில்  செண்பக தியாகராஜ சுவாமி.

  இதன்படி, முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகேசப் பெருமான் மூர்த்தம் நிர்மாணிக்கப்பட்ட சப்த விடங்கர் தலங்களில் ஒன்றான திருநள்ளாற்றில் மூலவருக்குத் தென்புறத்தில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ செண்பக தியாகராஜர் என்ற திருப்பெயர் பெற்று விளங்குகிறது. இத்தலத்தில் தியாகராஜர் நடனம் உன்மத்த நடனமாகும்.   

  அனுக்கிரக மூர்த்தி சனி பகவான்

  இந்தக் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அபய முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். நாள்தோறும் 5 கால வழிபாடாக அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. வேறெந்தக் கோயிலிலும் சனி பகவானுக்கு இல்லாத சிறப்பு இங்கு உண்டு. இந்த சன்னதியில் வழங்கப்படும் பிரசாதங்கள் பவித்திரமானவை. இக்கோயில் பிரசாதங்களை வீட்டுக்குக் கொண்டு செல்வதிலோ, உட்கொள்வதிலோ எந்தக் குறைபாடும் ஏற்படுவதில்லை. 

  ஜாதகம், கோட்சார ரீதியில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி பகவானின் சுற்றில் இருப்போர்,  ஜாதக ரீதியாக சனி தசை நடைபெறும் காலங்களிலும் திருநள்ளாறு கோயிலில் அவரவர் வசதிக்கேற்றவாறு பூஜைகளை மேற்கொள்கின்றனர்.

   உன்மத்த நடனமாக செண்பக தியாகராஜசுவாமி.

  நளன் தீர்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுதல், நீராடிய பின் உடுத்தியிருந்த ஆடைகளை கரையில் உள்ள கூண்டில் விட்டுச் செல்லுதல், நளன் தீர்த்தக் குளம் அருகே உள்ள நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து, வாயிலில் தேங்காய் உடைத்தல், தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரபகவானுக்கு தேங்காய் பழங்களுடன், கருப்பு வஸ்திரம் வைத்து, அர்ச்சனை செய்தல், எள் மற்றும் வடை மாலை சாற்றுதல், அபிஷேகம், திலதீபம் ஏற்றுதல், நவகிரக சாந்தி ஹோமம் செய்தல் போன்ற கோயிலில் நடைமுறையில் உள்ள வழிபாடுகளை செய்கின்றனர்.  (இவை விசேஷ காலங்கள், கரோனா போன்ற பேரிடர் காலங்களில் மாறுதலுக்குட்பட்டது).

  இவற்றையே பக்தர்கள் தமக்கான சனி தோஷ நிவர்த்திக்கான வழிபாடாக செய்கின்றனர்.

  செண்பக தியாகராஜர் புறப்பாடு

  ஆண்டில் ஒரு முறையாக கோயில் பிரமோற்சவத்தின்போது ஸ்ரீ செண்பக தியாகராஜர் முதல் நாள் இரவு வசந்த மண்டபத்துக்கு ஆட்டத்துடன் எழுந்தருளுவதும், மறுநாள் பகலில் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு வலது, இடது புறமாக ஆடியவாறு (உன்மத்த நடனம்) எழுந்தருளுவதும் சிறப்பாகும்.

  தங்கக் காக வாகனப் புறப்பாடு  

  சனீஸ்வர பகவானுக்குரிய வாகனமான காகம், இக்கோயிலில் தங்கத்தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி நாளின்போது தங்கக் காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை எழுந்தருளச் செய்து, மண்டபத்தில் பக்தர்கள் தரிசிக்க வைக்கப்படும். பிரமோற்சவத்தின் ஒரு நாள், தங்கக் காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் பிரார்த்தனையின் பேரில், முக்கிய நாள்களில் கோயிலில் கட்டண முறையில் பிரகாரப் புறப்பாடு செய்யப்படுகிறது. 

  நளன் தீர்த்தக் குளம்

  ஆலய அமைப்பு 

  காரைக்கால் நகரிலிருந்து 5 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோயில். காரைக்கால் நகரின் மேற்கே இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஏழுநிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களைக் கொண்டதாக அழகுற அமைந்துள்ளது. 

  ராஜகோபுரத்தைக் கடந்ததும் இடது புறத்தில் கெய்த்தான் மண்டபமும், 2-ஆவது கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் விநாயகரும், வலது புறத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சன்னதியும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதியும் அமைந்துள்ளன.

  பிரம்ம தீர்த்தக் குளம்

  2-ஆவது கோபுரத்திலிருந்து நேராகச் செல்லும்போது கொடி மரமும், நேராக மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரும், இடதுபுறமாக செண்பக தியாராஜ சுவாமியும், உள்பிரகாரத்தில் 63 நாயன்மார்களும், ஆதிகணபதி, சொர்ண கணபதி சன்னதி, ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதி மற்றும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சன்னதி ஆகியன அமைந்திருக்கின்றன.

  திருநள்ளாறு தீர்த்தங்களின் சிறப்பு 

  திருநள்ளாற்றில் நளன் தீர்த்தக் குளம், சரஸ்வதி தீர்த்தக் குளம், பிரம்ம தீர்த்தக் குளம், எமன் தீர்த்தக் குளம் எனத் தீர்த்தங்கள் பயன்பாட்டில்  உள்ளன.

  எமன் தீர்த்தக் குளம்

  ஆலயத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது புகழ்பெற்ற நளன் தீர்த்தக் குளம். இக்குளத்தில் நீராடி ஈசனையும் அம்பிகையையும் சனீஸ்வர பகவானையும் வழிபட்டால் எல்லா துன்பமும் நீங்கி, இன்பம் பெறுவர் என்பது நம்பிக்கை.

  திருக்கோயிலுக்கு மேற்கே பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நீராடுவோருக்கு பிரம்ம பதம் கிட்டும் என்பது ஞானியர் வாக்கு. கோயிலுக்குத் தென்புறத்தில் சரஸ்வதி தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடி ஈசனை வழிபட்டால் பேச இயலாதோரும் பேசும் ஆற்றலைப் பெறுவர் என்பது நம்பிக்கை.

  சரஸ்வதி தீர்த்தக் குளம்

  கோயில் ராஜகோபுரம் அருகே சரஸ்வதி தீர்த்தக் குளத்துக்கு எதிர்புறத்தில் எமன் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. மரண பயம் (எம பயம்) போக்கும் விதமாக உள்ளதாகவும், இக்குளத்தில் நீராடி ஈசனை வழிபடும்போது எமபயம் விலகும்  என்பதும் நம்பிக்கை.

  இதையும் படிக்கலாம்: பதவி, ஊதிய உயர்வு பெற குரு பரிகாரத் தலம் திட்டை கோயில்

  திருவிழாக்கள்

  இக்கோயிலில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றம், தேரோட்டம், செண்பக தியாகராஜர் புறப்பாடு, தங்கக் காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் புறப்பாடு, தெப்பம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது. தவிர கந்த சஷ்டி உற்சவம், ஆருத்ரா உற்சவம் ஆகியவை முக்கியமானவை. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிக முக்கியமான ஒன்றாகும். சனி பகவானால் பாதிப்பை எதிர்கொள்வோர், தர்பாரண்யேசுவரர், பிராணாம்பிகை, சனீஸ்வர பகவானைத் தரிசித்து அனுக்கிரகம் பெறுவதற்கான வழிபாடாக சனிப் பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது.

  கோயிலில் உள்ள எண்கால் கருங்கல் மண்டபம்

  நிர்வாகம் 

  புதுச்சேரி அரசின் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) தலைமையில் நிர்வாகம் நடைபெறுகிறது. கோயில் தினமும் காலை 5 முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமையில் காலை முதல் இரவு வரை வழிபாடு செய்ய முடியும்.

  பூஜைகள், ஹோமம் உள்ளிட்ட அனைத்து விவரங்கள், பதிவுகளுக்கு 04368-236530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  பூஜைகள் குறித்துப் பதிவு செய்யும்போது, பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

  சனிப் பெயர்ச்சி விழா

  வரும் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகும் வழிபாடு இக்கோயிலில் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களுக்கான சனி பகவானின் நிலையால் ஏற்படும் சிரமம் நீங்கவும், வாழ்வு வளம்பெறவும் வழிபாடு செய்யும் வகையில் சனிப்பெயர்ச்சி நாளிலும் பின்பு வரும் சனிக்கிழமைகளிலும் கோயிலுக்கு வருவார்கள்.

  கோயிலின் தல விருட்சமான தர்ப்பை புல்

  சனி பகவானுக்கு மந்தன் என்ற ஒரு பெயரும் உண்டு. வாழ்வில் மந்த நிலையை மாற்றி மகோன்னத நிலையைத் தரும் மந்தனாக திருநள்ளாறு சனி பகவான் விளங்குகிறார். சனி தோஷம் நீக்கும் திருநள்ளாற்று நாயகனை வழிபடுவோம். நளச் சக்கரவர்த்தி இழந்ததை மீட்டதுபோல இழந்ததை மீட்கத் திருநள்ளாற்றுச் சனி வழிபாடு என்பது பக்தர்களின் வழக்குச் சொல்லாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp