குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

வேதாரண்ய இறைவனை வழிபட்டால் திருமணத் தடை விலகும், குழந்தைப் பேறு, கல்வியில் சிறந்த ஞானம், செல்வச் செழிப்பு, பிணியற்ற வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளுடன் எழுந்தருளும் சந்திரசேகரசுவாமி
அம்பாளுடன் எழுந்தருளும் சந்திரசேகரசுவாமி

தோஷங்கள் பலவற்றுக்கு நிவர்த்தி பரிகாரங்கள் செய்யும் தலமாகத்  திகழ்கிறது, நாகப்பட்டினம் மாவட்டம், திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் அமைந்துள்ள திருமறைக்காடர் (வேதாரண்யேசுவரர்) கோயில்.

யாழைப்பழித் தன்னமொழி

மங்கைஒரு பாகன்

பேழைச்சடை முடிமேற்பிறை

வைத்தான் இடம்பேணில்

தாழைப்பொழில் ஊடேசென்று

பூழைதலை நுழைந்த

வாழைக்கனி கூழைக்குரங்கு

உண்ணும் மறைக்காடே.

என சுந்தரரால் பாடப்பட்ட இந்த தலம் புராண காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்றது.

வேதாரண்யேசுவரர் கோயில் மேலக் கோபுரம்
வேதாரண்யேசுவரர் கோயில் மேலக் கோபுரம்

இங்குள்ள மரகத லிங்கம் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கோயில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுப் பதிவுகளோடு காணப்படுகிறது. இக்கோயிலின் நிர்வாகத்தில் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை வரணி ஆதினத்தின் பங்களிப்பு இருந்துள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளார். இறைவன் திருமறைக்காடர் (வேதாரண்யேசுவரர்) எனவும் இறைவி வேதநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இவ்வூர் முன்பு திருமறைக்காடு எனவும் கோயில் திருமறைக்காடர் என்றும் தமிழில் அழைக்கப்பட்டது. வேத காலத்துக்குப் பிறகு வேதாரண்யம் (வேத ஆரண்யம்) என்றும் கோயில் வேதாரண்யேசுவரர் கோவில் எனவும் அழைக்கலாயிற்று.

நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள்

இந்தக் கோயிலின் கருவறையில் பரமசிவன் - பார்வதி இருவரும் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாகக் கூறப்படுவதும் மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது.

அகத்திய முனிவருக்கு திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இது  திகழ்கிறது. இங்குள்ள தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்துக்கு காலை, மாலை என இருவேளையும் பூஜைகள் நடைபெறும்.

வீணையில்லா சரஸ்வதி
வீணையில்லா சரஸ்வதி

தல விருட்சமாக வன்னி மற்றும் புன்னை மரங்கள் திகழ்கின்றன. இவற்றில் வன்னி மரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.

கோயிலில் தனித்தனி விக்ரகமாக அமைந்த நவக்கிரகங்கள் யாவும் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஏதுவாக ஒரே திசையில் அமைந்துள்ளன. குழந்தைப் பேறு பெறவும், கடன் தொல்லை நீங்கவும் இங்குள்ள கால பைரவரை நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

யாழைப் பழித்த மொழியம்மை சன்னதி
யாழைப் பழித்த மொழியம்மை சன்னதி

கோவிலில் ஒரு மாத காலம் நடைபெறும் மாசி மகத் திருவிழா சிறப்புப் பெற்றது. மாசிமக நாளில் சுவாமி, சன்னதிக் கடலுக்குத் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் விழா நடைபெறும். 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனத்தில் வீதிவுலாவும் சிறப்பானது. அம்மனுக்குப் பத்து நாள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவும் பெரிய அளவில் நடைபெறும்.

வேதங்கள் நான்கும் வழிபட்டு மூடிச் சென்ற கோவிலின் பிரதான கதவினை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது.

தமிழ் மொழியின் வலிமையைப் பறைசாற்றும் இந்த நிகழ்வு, திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தேரோட்டத்துக்குச் சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத்தேர்களும் பழுதாகிச் சிதைந்து போனதால், 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேரோட்டம் தடைப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக அரசு அளித்த நிதியுடன், கோயில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய மரத்தேர் செய்யப்பட்டு, கடந்த 2017 ஆண்டு மாசிமகப் பெருவிழாவின்போது மீண்டும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சுவாமி, அம்பாள், விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் உண்டு.

கால பைரவர்
கால பைரவர்

பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபடுவோருக்குப் பாவங்கள் விலகும். நாக தோஷம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி
அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி

இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தங்கள் பாவங்களைப் பக்தர்கள் போக்கிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மஹத்தி போன்ற தோஷங்களும் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு அருகே கோடியக்கரையிலுள்ள ஆதி சேது என்னும் கடல் தீர்த்தத்தில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்குச் சமம்.

பார்வதி-பரமசிவன் திருமணக் கோலம்
பார்வதி-பரமசிவன் திருமணக் கோலம்

இந்தத் தீர்த்தங்களில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை, மகாளய அமாவாசை நாள்களில் ஆதி சேது முழுக்குத் துறையிலும், வேதாரண்யேசுவரர் கோயில் சன்னதிக் கடலிலும் புனித நீராடுவது நல்லதென நம்பப்படுகிறது.

கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகையிலும் நீராடி திருமணக் கோலத்தில் காணும் இறைவியை வழிபட்டால் திருமணத் தடை விலகும். குழந்தைப் பேறு, கல்வியில் சிறந்த ஞானம், செல்வச் செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள வன்னி மரத்தில் தொட்டில் கட்டியும், திருமண வரம் வேண்டுவோர், சுவாமிக்கு கல்யாண மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

வன்னி மரம் - நாகதோஷம், திருமணத் தடைக்கு பரிகாரம் செய்யும் இடம்
வன்னி மரம் - நாகதோஷம், திருமணத் தடைக்கு பரிகாரம் செய்யும் இடம்

புகழ் பெற்ற பரிகார தோஷ நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோஷங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனக்காப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளன.

வேதநாயகி கோயிலின் அம்பாள் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தைவிட இனிமையாக இருந்ததால் யாழைப் பழித்த மொழியாள் என்ற பெயர் வந்ததாகவும், இதன் காரணமாக இங்குள்ள சரஸ்வதி, வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

தெற்குப் பார்த்த துர்க்கை
தெற்குப் பார்த்த துர்க்கை

தெற்கு பார்த்த துர்க்கை

இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

தியாகராஜர்

இத்தலம் சப்த விடத்தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்ச நடனம் எனப்படும். 63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர், ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

தல விருட்சம் புன்னை மரம்
தல விருட்சம் புன்னை மரம்

இங்கு 73 பேரும் நாயன்மார்களாகவே அழைக்கப்படுகின்றனர். புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சந்திரசேகர சுவாமி
வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சந்திரசேகர சுவாமி

தல வரலாறு

ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் மனித உருக்கொண்டு இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகிலுள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனை வழிபாடுகள் செய்ததாகவும் இதுவே அந்த கிராமங்களுக்குப் பெயர்க் காரணமாகவும் கூறப்படுகிறது.

வேதாரண்யத்துக்குச் செல்ல: 

வேதாரண்யத்துக்கு, நாகை, (வேளாங்கண்ணி) திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 

ரயிலில் வருவோர் திருவாரூர் மற்றும் நாகை அல்லது வேளாங்கண்ணியில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாக பயணித்து வேதாரண்யம் அடையலாம்.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் திருச்சி விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து சாலை வழியாக தஞ்சை, திருத்துறைப்பூண்டி வழியாகவும், திருவாரூர், நாகை வழியாகவும் வேதாரண்யத்தை வந்தடையலாம். 

வேதாரண்யத்தில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.அருகேயுள்ள வேளாங்கண்ணியில் அதிக எண்ணிக்கையில் தங்கும் விடுதிகள் உள்ளது.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு- 614 810. நாகப்பட்டினம் மாவட்டம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com