கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்குவளை அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில்.
திருக்குவளை கோளிலிநாதர் திருக்கோயில் (சுவாமி - அம்பாள் (உற்சவர்))
திருக்குவளை கோளிலிநாதர் திருக்கோயில் (சுவாமி - அம்பாள் (உற்சவர்))

ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும் ஜோதியாகவும், திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனுமான இறைவன் சிவபெருமான், பிரம்மனுக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலமாக, நவகோள்களின் தோஷம் போக்கிய தலமாக, சுந்தரர் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கப் பூதகணங்களை அனுப்பி அருளிய தலமாக, சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்குவளை அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில்.

கோயில் கோபுரம்
கோயில் கோபுரம்

படைப்புத் தொழில் வேண்டி பிரம்மன், சந்திர நதியின் வெண்மணலை எடுத்து சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி, பக்தி நெறியுடன் பல நாள்கள் வழிபட்டு, சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்டு, படைப்புத் தொழில் கைவரப் பெற்ற தலம் இந்தத் தலம். இதனால், இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு பிரமபுரீசுவரர் என்ற திருநாமமும், கோள்களின் குற்றம் நீக்கியருளியதால் அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருநாமமும் விளங்குகின்றன.

இத்தலத்தின் மூல மூர்த்தி அருள்மிகு பிரமபுரீசுவரர், பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை  சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 8 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

மூலவருக்குக் குவளை சாற்றப்பட்டிருப்பதால், இத்தலத்துக்குத் திருக்குவளை எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பண்டைக்கால கல்வெட்டுகளில் இத்தலம் திருக்கோளிலி என்றே குறிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரமதபோவனம் என்ற பெயரும் இத்தலத்துக்குக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் எதிரே உள்ள தீர்த்தம், பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்பதால் அவரது பெயராலேயே பிரம்மதீர்த்தம் எனப்படுகிறது. தேற்றா மரம் தல விருட்சமாக உள்ளது.

தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது இத்தலம். சமயாசாரியர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு திருப்பதிகமும், அப்பர் சுவாமிகள் 2 திருப்பதிகங்களும் பாடியருளியுள்ளனர்.

பூதகணங்களை அருளிய தலம்

திருவாரூரில் சுந்தரரும் பரவை நாச்சியாரும் அடியார்களுக்கு நாள்தோறும் அன்னம்பாலித்து வந்த காலத்தில், திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர், சுந்தரருக்கு நியமமாக உணவுப் பண்டங்கள் அனுப்பி வந்தார். அப்போது, திடீரென பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நால்வர்
நால்வர்

அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டியுள்ளார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி, ஆருரானுக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்துள்ளார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். உள்ளம் மகிழ்ந்த அவர், உடனடியாக சுந்தரரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில், நெல்லைப் பெற்றுச் செல்ல சுந்தரர் குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர், அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து அருள்மிகு திருக்கோளிலி இறைவனை வேண்டி,


''நீள நினைந்தடி யேனுமை

  நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள்

  வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

  அட்டித் தரப்பணியே''

என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, கோளிலியம்பெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டுசென்று ஊர் முழுவதும் நிரப்பின என்பது இத்தல வரலாறு.

பீமனுக்கு தோஷ நிவர்த்தி

பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, வேத்திகிரகீயம் என்ற ஊரில் ஓர் அந்தணர் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்துள்ளனர். அப்போது, அந்த ஊரின் அருகே அமைந்த காட்டில் இருந்த பகாசுரன் என்ற அரக்கன், தினமும் வீட்டுக்கு ஒருவரைத் தனது உணவாகக் கொன்று, தின்று வாழ்ந்து வந்தான்.

குண்டையூர் கிழார்
குண்டையூர் கிழார்

ஒரு நாள், பாண்டவர்கள் தங்கியிருந்த அந்தணர் வீட்டுமுறை வந்தது. அப்போது, பீமன் ஒரு வண்டி நிறைய உணவுப் பண்டங்களுடன் பகாசுரனைச் சந்திக்கச் சென்றான். பகாசுரனுக்காகக் கொண்டு சென்ற உணவுப் பண்டங்கள் அனைத்தையும் பீமன் உண்டுவிட்டதை அறிந்து ஆத்திரமடைந்த பகாசுரன், பீமனுடன் சண்டையிட்டான். இந்தச் சண்டையில் பகாசுரனை பீமன் கொன்றான்.  

பகாசுரனைக் கொன்ற கொலைப் பழி பீமனை தோஷமாக பற்றியது. இதையடுத்து, பீமன் திருக்கோளிலி வந்திருந்து, அருள்மிகு கோளிலியம்பெருமானை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றான் என்பது ஐதீகம். இதன்படி, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலங்களுள் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. பாண்டவர்களின் சிலை புடைப்புச் சிற்பமாக இக்கோயிலில் உள்ளது.

விடங்கர் தலம்

வலாசுரனுக்கும், இந்திரனுக்கும் போர் ஏற்பட்டபோது, இந்திரனின் வெற்றிக்குத் துணையாக நின்றவன் திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்ரவர்த்தி. இந்த வெற்றிக்காக முசுகுந்தனுக்குப் பரிசளிக்க விரும்பினான் இந்திரன். அப்போது, இந்திரன் வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியான தியாகராஜப் பெருமானைப் பரிசாக தருமாறு முசுகுந்தன் கேட்டான்.

சுந்தரமூர்த்தி நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார்

தனது ஆத்மார்த்த மூர்த்தியைப் பிரிய மனம் இல்லாத இந்திரன், அதே ஒத்த உருவத்தில் மேலும் 6 திருவுருவங்களைப் படைத்து, 7 மூர்த்திகளையும் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் காண்பித்து, இவற்றிலிருந்து ஒன்றைப் பெற்றுக் கொள் என்றான். தியாகேசப் பெருமானின் திருவருளால், இந்திரன் ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபட்டு வந்த தியாகராஜ மூர்த்தியை முசுகுந்தன் எடுத்தான். இதையடுத்து, 7 தியாகராஜப் பெருமான் திருவுருவங்களையும் முசுகுந்தனிடமே அளித்து அனுப்பிவைத்தான் இந்திரன்.

திருவாரூர் திரும்பிய முசுகுந்தன், இந்திரன் வழிபட்ட தியாகேசப் பெருமானை திருவாரூரிலும், மற்ற 6 தியாகேசப் பெருமான் திருவுருவங்களை திருக்கோளிலி, திருநள்ளாறு, திருநாகை, திருக்காரவாயில், திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகிய இடங்களிலும் நிர்மாணித்தான் என்பது புராணம்.

நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள்

இதன்படி, முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகேசப் பெருமான் மூர்த்தம் நிர்மாணிக்கப்பட்ட சப்த விடங்கர் தலங்களில், அவனி விடங்கர் தலமாக விளங்குகிறது இத்தலம். இங்கு, மூலவருக்குத் தென்பால் தனி சன்னிதி கொண்டு காட்சியளிக்கும் அருள்மிகு தியாகராஜருக்கு அவனி விடங்க தியாகேசர் என்ற திருப்பெயர் விளங்குகிறது. இத்தலத்தில் தியாகராஜர் புறப்பாடு பிரம நடனத்துடன் நடைபெறுகிறது.

நவக்கிரக தோஷ நிவர்த்தி

நவக்கிரகங்களின் தோஷம் போக்கும் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற திருத்தலங்கள் பல தமிழகத்தில் உண்டு. ஆனால், நவ கோள்களும் (நவக்கிரகங்கள்) தங்களின் தோஷம் நீங்க வழிபாடாற்றிய தலமாக விளங்கும் சிறப்புப் பெற்றது இத்தலம். தன்னை வழிபட்ட நவ கோள்களின் தோஷத்தைப் போக்கியருளியதால் இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருப்பெயர் விளங்குகிறது.

நெல் மகோற்சவத்தில் பூதகணங்களாக வேடமணிந்து வந்தவர்கள்
நெல் மகோற்சவத்தில் பூதகணங்களாக வேடமணிந்து வந்தவர்கள்

இங்கு, நவக்கிரகங்கள் 9-ம் வக்கிரமின்றி, தென்திசை நோக்கி உள்ளன. இதனால், அருள்மிகு கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் ஆன்மிகச் சிறப்பு.  இதனையே, ''கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்'' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.

பூரட்டாதி நட்சத்திர தலம்

இத்தலத்தில் பிரம்மன், சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்ட நாள், வெண்மணலால் அமைத்து பூஜித்து வந்த சிவலிங்கத் திருமேனிக்கு (பிரமபுரீசுவரருக்கு) குவளை சாற்றி வழிபாடாற்றிய நாள் பூரட்டாதி நட்சத்திர தினம் என்பதால், இத்தலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பரிகாரத் தலமாகக் குறிப்பிடுகிறது.

சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி,  வெண்மலர் மாலைகளால் அலங்கரித்து, தயிர் சாத நிவேதனத்துடன் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனப்படுகிறது.
 
ஆலய அமைப்பு

பிரம்மன், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், சுந்தரர், முசுகுந்தன் எனப் பலரும் பூஜித்து அருள்பெற்ற இக்கோயில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருக்குவளையின் மையப்பகுதியில், கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களைக் கொண்டதாக அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு அருகிலேயே, கோயிலின் பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபமும், கொடிமரமும் உள்ளன. இரண்டாவது கோபுர வாசலைக் கடந்து உள்பிரகாரத்துக்குச் சென்றதும் நேர் எதிரே மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் தென்புறம் அருள்மிகு அவனிவிடங்க தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் வடபுறம்,  அம்பாள் அருள்மிகு வண்டமர்பூங்குழலாள் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார்.

கோயில் உள்பிரகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், அருள்மிகு தியாக விநாயகர் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். இதனையடுத்து, விசுவநாதர், விசாலாட்சி,  இந்திரபுரீசுவரர், சந்திரலிங்கம் சன்னதிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து,  முருகப்பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராக அருள்மிகு சுந்தரவடிவேலன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார்.

அடுத்ததாக, சொக்கலிங்கம், அண்ணாமலையார், சமயக்குரவர்கள் நால்வர் சன்னதிகளும் உள்ளன. இதையடுத்து, சுந்தரருக்கு நெல் மலை அளித்ததாகக் குறிப்பிடப்படும் குண்டையூர் கிழாருக்குத் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அடுத்தாக, ஶ்ரீ மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.

பகாசுரன்
பகாசுரன்

இவை தவிர, அகத்தியர் பூஜித்த சிவலிங்கத் திருமேனி, அவரின் பெயராலேயே அகத்தியலிங்கம் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியாக உள்ளது. கிழக்குப் பிரகாரத்தின் ஈசான்ய திசையில் நவகிரகங்கள் தனிமண்டபத்தில் தெற்கு நோக்கி, வக்கிரமின்றி வரிசையாகக் காட்சியளிக்கின்றன.

அடுத்ததாக, ஶ்ரீ நடராஜர் சன்னதியும், பைரவர், சந்திரன், சூரியர் சன்னிதிகளும் உள்ளன. இவை தவிர, சுந்தரர் - பரவைநாச்சியார், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மன், உமாமகேசுவரர், பஞ்சபாண்டவர் உள்ளிட்ட மூர்த்தங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

திருவிழாக்கள்

இக்கோயிலில் வைகாசி பிரமோற்சவம் 21 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது. குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக 5 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது.

மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்தவர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாரூருக்குக் கொண்டுசெல்லும் நிகழ்ச்சியும் ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகின்றன.

காலப் பழமையான இக்கோயில் குறித்த குறிப்புகள் 19 கல்வெட்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகள், சடாவர்மன், சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலானோர் காலத்தவை எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலுக்கு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள், நிலம் வழங்கிய குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஊரில் திருஞானசம்பந்தருக்குத் திருமடம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

நிர்வாகம்

இத்திருக்கோயில் தருமையாதீன அருளாட்சிக்குள்பட்டது. தருமையாதீன 25-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1964 ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்றும், 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியன்றும் குடமுழுக்கு நடைபெற்றது.  

தருமையாதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, இக்கோயிலில் நாள்தோறும் ஆறு கால வழிபாடு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட திருக்குவளைக்கு, நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ரயிலில் பயணிப்பவர்கள் திருவாரூரில் இறங்கி அங்கிருந்து 26 கி.மீ. தொலைவு சாலை வழி பயணித்து திருக்குவளையை அடையலாம்.

அருகில் உள்ள விமான நிலையம், திருச்சி. அயல்நாடுகளிலிருந்து வருவோர் திருச்சி விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து  தஞ்சை, திருவாரூர் வழி 127 கி.மீ. பயணித்துத் திருக்குவளையை வந்தடையலாம்.

கோயிலுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்பேரில் பரிகார பூஜைகள் செய்விக்கப்பட்டு, பிரசாதங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

பரிகார பூஜைகள் மேற்கொள்ள விரும்புவோர் 94864 46358, 94434 76435 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com