உடல் குறைபாட்டைப் போக்கும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில்

ஊனம், பக்கவாதம் போன்ற குறைபாடு உடையவர்கள் இத்திருக்கோயிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்திற்குப் பரிகாரம் செய்து வழிபடக் குணம்  நிச்சயம்.
பிரேமாம்பிகை அம்மன் உடனுறை அங்குரேசுவரர் சுவாமி
பிரேமாம்பிகை அம்மன் உடனுறை அங்குரேசுவரர் சுவாமி

உடல் குறைபாட்டைப் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடியில் அமைந்துள்ள பிரேமாம்பிகை அம்மன் உடனுறை அங்குரேசுவரர் சுவாமி திருக்கோயில்.

நவக்கிரக நாயகர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சனி பகவானின் குறையைப் போக்கியதும் விமலன் என்ற மாடு மேய்க்கும் சிறுவனின் பிறவி உடல் குறைபாட்டைப் போக்கியதும் இத்திருத்தலத்தில்தான்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இங்கு சிறப்பு வாய்ந்த விமல லிங்கம் உள்ளது.

இத்திருக்கோயிலின் எதிர்த்திசையில் மயானமும் அமைந்திருப்பது தனிச் சிறப்புக்குரியது. இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசித் தீர்த்தம் என்ற பெயர் உண்டு. இதனால் காசிக்கு இணையான தலமாக ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில் போற்றப்படுகிறது. மேலும் நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

தல புராணம்

நவக்கிரக நாயகர்களில் ஆயுள்காரராகப் போற்றப்படுவர் சனி பகவான். இவர் சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஒரு சந்தர்ப்பத்தில் எமமூர்த்தியின் தண்டத்தால் சனி பகவான் கால் ஊனம் அடைந்தார். இந்த ஊனத்தைப் போக்க பல திருக்கோயில்களில் வழிபட்டார். புனிதத் தீர்த்தங்களில் சனி பகவான் நீராடினார். கடைசியாக ஆதிகுடி திருக்கோயிலை அடைந்தார். இக்கோயிலில் பல யுகங்கள் தவம் புரிந்து, இங்கு எழுந்தருளிய அங்குரேசுவரரின் அருளைப் பெற்றார் சனி பகவான். அதன் விளைவாக அவரது குறை நீங்கியதாக அங்குரேசுவரர் திருக்கோயில் தல புராணம் எடுத்துரைக்கிறது.

தல வரலாற்றுச் சிறப்புகள்

முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில், பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இக்கோயிலுக்கும் தல வரலாற்றுச் சிறப்பு உண்டு. பழங்காலத்தில் இந்த கோயில் அமைந்துள்ள இடம் புதர்களும், புல்வெளிகளும் நிறைந்து காணப்பட்டன. ஆதிகுடி என்ற இந்த ஊரில் விமலன் என்ற பெயருடைய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிறவிலேயே ஒரு கை, கால் ஊனமுற்றவனாக இருந்தான். அவன் தினசரி மாடுகளை புல் வெளிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று, மாலையில்  வீடு திரும்புவது வழக்கம்.

விமலலிங்கம் சன்னதி
விமலலிங்கம் சன்னதி

ஒரு நாள் அவன் ஓட்டிச் சென்ற மாடுகளின் கூட்டத்திலிருந்து பசு ஒன்று தனியாகப் பிரிந்து, ஓரிடத்தில் தானாக நின்று பாலைச் சொரிந்தது. இதைக் கண்ட விமலன், தன் கையிலிருந்த அங்குரத்தால் (மண்வெட்டி) அந்த இடத்தை ச் செதுக்கினான்.

அப்போது அவன் செதுக்கிய இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டு வெளியானது. ரத்தத்தைக் கண்டதும் விமலன் அச்சமடைந்தான். செய்வதறியாது திகைத்து நின்றான். ஊருக்குள் ஓடி, மக்களிடம் தான் கண்ட காட்சியைக் கூறினான். ஊர் மக்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். பிறவி ஊனம் உள்ளவனாக இருந்த அவன்  ஊனம் நீங்கி, முழு நலத்துடன் தங்கள் முன்பு நிற்பதைக் கண்டு வியந்தனர். அப்போது விமலனின் உடல் குறைபாடு முழுமையாக நீங்கியிருந்தது. விமலன் கூறிய இடத்தில் சென்று, தோண்டிப் பார்த்தபோது அங்கு ஓர் அழகிய சிவலிங்கம் தென்பட்டது. அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சோழ மன்னரால் அந்த இடத்தில் திருக்கோயில் கட்டப்பட்டது. அந்த கோயில்தான் அங்குரேசுவரர் கோயிலாகும்.

சுவாமி சன்னதி கருவறை விமானம்
சுவாமி சன்னதி கருவறை விமானம்

இறைவன் அங்குரேசுவரர்

தெற்கு நோக்கி அமைந்துள்ள ஆதிகுடி திருக்கோயிலில் இறைவன், பல்வேறு சிறப்புகளைக் கொண்டவராகத் திகழ்கிறார். கோயிலின் மகாமண்டபத்தின் இடதுபுறத்தில் இறைவன் அங்குரேசுவரரின் சன்னதி அமைந்துள்ளது. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோயில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது. கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மாடு மேய்க்கும் சிறுவனின் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தைக் குணமாக்கிய இத்திருக்கோயில் இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி, அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.

சுவாமி சன்னதி முன் எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்
சுவாமி சன்னதி முன் எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்

இறைவி பிரேமாம்பிகை

இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தில் நுழைந்தால், எதிரில் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் பிரேமாம்பிகை அம்மன் காட்சியளித்து வருகிறார். தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் சாந்த சொரூபியாக அம்மன் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்துக்குள் நுழைந்தால் ஒரே நேரத்தில் இறைவன், இறைவியை வழிபடலாம்.

அம்மன் சன்னதி
அம்மன் சன்னதி

சிறப்பு வாய்ந்த விமல லிங்கம்

இக்கோயிலின் பிரகாரத் தெற்கில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயிலில் விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற  நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இத்திருக்கோயிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

விமல லிங்கம்
விமல லிங்கம்

அனைத்து நலன்களும் கிட்ட...

இந்த விமல லிங்கத்துக்குத் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற எட்டு வகை மூலிகைத் தைலக் காப்பிட்டு, புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பிறகு  வெண்கலப் பானையில் பால் பொங்கல் செய்து, முழு நீள வாழை இலையில் வைத்து, அன்னதானமாக அளிக்க வேண்டும். மேலும் வெண்கலப் பானையையும் தானமாக அளித்தால் அனைத்துப் பலன்களும் கிட்டும். அனைத்துவிதமான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது பலனடைந்த பக்தர்களின் கூற்றாக உள்ளது.

கோயில் அமைப்பு

கோயிலின் முகப்பைத் தாண்டியதும் பிரகாரமும், நடுவில் நந்தியெம்பெருமானின் திருமேனியும் அமைந்துள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் அம்மன் சன்னதியும், இடதுபுறத்தில் அங்குரேசுவரர் சுவாமி சன்னதியும் அமைந்துள்ளன. இறைவனின் அர்த்த மண்டப நுழைவுவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறத்தில் முருகப்பெருமானும் வீற்றிருந்து, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றனர்.

இத்திருக்கோயில் இறைவன் திருக்கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகா விஷ்ணுவும், வடக்கில் துர்க்கை அம்மனும் எழுந்தருளியுள்ளனர். பிரகாரத்தின் தெற்கில் விமல லிங்கம் சன்னதியும், கிழக்குத் திருச்சுற்றில் மகாகணபதி, வள்ளி-தெய்வசேனா சமேத சண்முகநாதர், மகாலட்சுமி ஆகியோரும், வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

அங்குரேசுவரர் சன்னதி விமானம் மற்றும் விமானங்கள் - பிரகாரம்
அங்குரேசுவரர் சன்னதி விமானம் மற்றும் விமானங்கள் - பிரகாரம்

திருவிழாக்கள்

ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். இதுபோல, ஆடி வெள்ளியில் விளக்கு பூஜையும் வெகு விமரிசையாக நடத்தப்படும். மாத பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள், நவராத்திரிப் பெருவிழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி தனுர் மாத பூஜை, தைப்பொங்கல், சித்திரை மாதப் பிறப்பு போன்ற நாள்களில் இறைவன் அங்குரேசுவரருக்கும், இறைவி பிரேமாம்பிகை அம்மனுக்கும்  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கோயிலின் தல விருட்சமாக வன்னிமரம் அமைந்துள்ளது. மேலும் நீத்தார் கடன் செய்ய உகந்த இடமாகவும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலம் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.

எப்படிச் செல்வது?

தென் மாவட்டங்களிலிருந்தும், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை வழியாக லால்குடி வந்து, லால்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆதிகுடி அமைந்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பழைய பால்பண்ணை, திருச்சி-சென்னை புறவழிச்சாலை, நெ.1.டோல்கேட், மாந்துறை, லால்குடிவழியாக கோயிலைச் சென்றடையலாம்.

சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற வடமாவட்டங்களிலிருந்து வருபவர்களும், கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்  நெ.1 டோல்கேட் வந்து, தாளக்குடி, வாளாடி, மாந்துறை, லால்குடி, மணக்கால் வழியாக அன்பில் தடத்தில் கோயிலைச் சென்றடையலாம்.

ரயில், விமானங்கள் மூலம் கோயிலுக்கு வர விரும்புபவர்களுக்கு அந்தந்த இடங்களிலிருந்து ஆட்டோ, கார், வேன் போன்ற வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு: ஆதிகுடி அங்குரேசுவரர் சுவாமி திருக்கோயிலுக்கு வருபவர்கள் கோயிலின் அர்ச்சகரான சிவகுமார் குருக்களை 97884-02327, 75503-98684  ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு பிரேமாம்பிகை அம்மன் அங்குரேசுவரர் சுவாமி திருக்கோயில்,
ஆதிகுடி,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com