மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்
மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், மகப்பேறு கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைத் தலமாக  விளங்குகிறது திருச்சி அருகேயுள்ள உத்தமர்கோயில்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், மகப்பேறு கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைத் தலமாக  விளங்குகிறது திருச்சி அருகேயுள்ள உத்தமர்கோயில்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை மேற்கொள்ளும் மும்மூர்த்திகளும், கதம்ப மகரிஷியின் கடுந்தவத்தின் காரணமாக தத்தம்தேவியருடன் காட்சியளித்தது இந்த உத்தமர்கோயிலில்தான்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்திருக்கோயில் திருச்சியிலிருந்து சேலம்  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஒன்றாம் எண் சுங்கச்சாவடியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதாலும்,  கதம்ப மரங்கள் அதிகமிருந்தமையாலும் இந்த ஊர் கதம்பனூர் என வழங்கப்பெற்றது என்று கூறுவர்.

சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய 29-ஆவது திருவிளையாடலான பிச்சாண்டார் திருக்கோலம் பூண்டது இங்குதான். அதாவது சிவபெருமான், பிச்சாடனராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்றது இத்திருக்கோயிலில்தான்.

கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால், திருமங்கையாழ்வார் இத்திருக்கோயில் இறைவனைக் கரம்பனூர் உத்தமன் என மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இத்தலத்துக்கு வந்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டிக்  கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

இந்தியாவில் வேறு எந்த திருக்கோயில்களுக்கும் இல்லாத சிறப்பு உத்தமர்கோயிலுக்கு உண்டு. இங்கு முத்தொழில் மேற்கொள்ளும் இறைவன் - இறைவிகள் சேர்ந்து காட்சியளிப்பதும் தனிச்சிறப்பது. இங்கு அருள்மிகு புருஷோத்தம பெருமாள் - பூரணவல்லித் தாயாருடனும் பிச்சாண்டேசுவரர் -  சௌந்தரநாயகியுடனும், பிரம்மா - சரஸ்வதியுடனும் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

சக்கீர்த்தி வர்த்தனன் என்ற அரசன், மகப்பேறு இல்லாத குறையை நீக்கத் தவம் புரிந்து, குழந்தையைப் பெற்றதும் இக்கோயிலில்தான்.

சப்த குருக்கள்

உலகிலேயே  ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் திருக்கோயில் இதுதான்.

சிவகுரு - தட்சிணாமூர்த்தி, விஷ்ணுகுரு - வரதராஜர், குரு - பிரம்மா,  சக்திகுரு - சௌந்தர்ய பார்வதி, ஞானகுரு - சுப்ரமணியர், தேவகுரு - வியாழன், அசுரகுரு  - சுக்கராச்சாரியார் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடங்களிலிருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது 7 குருக்களுக்கும் விசேஷ  அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. எனவே இத்திருக்கோயில் சப்தகுரு திருக்கோயிலாக அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரைத் தனது கணவர் என்று நினைத்துப் பணிவிடை செய்தார். இதைக் கண்ட சிவபெருமான், குழப்பம் வராமல் இருக்க,  பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியதுடன், பிரம்மாவின் அந்தக் கபாலமும் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது.

சிவபெருமான் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தைப் பிரிக்க  முடியவில்லை. அவருக்குப் படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும்  கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவிட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியால் வாடிய சிவபெருமான், அதனை பிச்சைப் பாத்திரமாக எடுத்துக் கொண்டு, பிச்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல திருக்கோயில்களுக்குச் சென்றார்.

அவர் இத்திருக்கோயிலுக்கு வந்தபோது பெருமாள், சிவபெருமானின் பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மகாலட்சுமியிடம் கூறினார்.  அவரும் கபாலத்தில் பிச்சையிடவே, அது பூரணமாக நிரம்பி சிவபெருமானின்  பசியைப் போக்கியது.  இதனால் இங்குள்ள தாயார் பூரணவல்லித் தாயார் என்ற பெயரும் பெற்றார். மகாவிஷ்ணு பள்ளிகொண்ட திருக்கோலத்தில் சிவபெருமானுக்கு இங்கு காட்சியளித்தார்.

பிரம்மா சன்னதி

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லை என்ற மனக்குறை  இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்திருக்கோயிலில் பெருமாளை வணங்கித் தவம் செய்து வந்தார்.

அவரின் பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு கதம்ப மரத்தின் வடிவில் நின்றுகொண்டார். இதையறிந்த பிரம்மா, கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வணங்கினார்.  அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு பிரம்மாவுக்கு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா, நீ பெற்ற சாபத்தால் உனக்குக் கோயில்கள் இல்லாவிட்டாலும், இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கி வழிபட்டார். பிற்காலத்தில் பிரம்மாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது.

பிரம்மாவுக்கு இடதுபுறத்தில் ஞானசரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியப்படி காட்சியளிக்கிறார். கைகளில் வீணை இல்லாதபடி, ஓலைச்சுவடி, ஜபமாலையுடன் ஞானசரஸ்வதி காட்சி தருவது சிறப்புக்குரியது.

பிரம்மாவுக்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவுக்கு விசேஷ பூஜைகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

விஷ்ணு (புருஷோத்தம பெருமாள்)  கிழக்குப் பார்த்தவாறு பள்ளிகொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் காட்சியளிக்கின்றனர். பூரணவல்லித் தாயார்  தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். இந்த சன்னதிக்கு அருகிலேயே மகாலட்சுமி சன்னதியும் உள்ளது.

பெருமாள் சன்னதிக்கு நேர் பின்புறத்தில் பிச்சாண்டேசுவரர் மேற்குப்  பார்த்தபடி லிங்க வடிவத்தில்  காட்சி தருகிறார். இவர் பிச்சாடனாராக கோஷ்டத்திலும் உற்சவராகவும் இருக்கிறார்.

ஒரே திருக்கோயிலில் மும்மூர்த்திகளையும் தரிசிப்பது என்பது  அபூர்வமானதாகும். கார்த்திகைத் தீபத் திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, ஒன்றாக உலா வருவது இத்திருக்கோயிலுக்கான தனிச்சிறப்பாகும்.

சகலவித வேண்டுதல்களை நிறைவேற்றும் திருக்கோயில்

படைப்புக் கடவுளான பிரம்மா விமானத்துடன் தனி சன்னதியில் தெற்குமுகமாக குருபகவான் ஸ்தானத்தில் அமர்ந்து, பக்தர்களின் சகலவித வேண்டுதல்களையும் நிறைவேற்றி, குறைகளை நிவர்த்தி செய்து காட்சியளித்து வருகிறார். குரு வாரமாகிய வியாழக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சன்னதியில் அர்ச்சனை செய்து, வழிபாடுகளை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை பாக்கியம்

மகப்பேறு வேண்டுவோர்  இத்திருக்கோயிலில் ராமபிரானின் தந்தை தசரத மகாராஜா பூஜித்த தசரத லிங்கத்தை 48 வாரங்கள் வழிபட்டு அர்ச்சனை செய்தால், மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இத்திருக்கோயில் சிறந்த பிரார்த்தனை மற்றும் பரிகார தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்கிவருகிறது.

ஜெய ஆஞ்சனேயர்

இத்திருக்கோயிலில் வியாசர் காலத்தில் ஆஞ்சனேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது, இடதுகாலை முன்வைத்து வலது காலைப் பின்வைத்து சர்வகாரியத்தையும் ஜெயம் செய்வதால்,  இங்குள்ள ஆஞ்சனேயர் ஜெய ஆஞ்சனேயர் எனப் பெயர் பெற்று விளங்கும் தனிச்சிறப்புக்குரியவர்.

திருவிழாக்கள்

தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும்  கொள்ளிடத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.  பெருமாளுக்கு சித்திரை மாதத்தில் 11 நாள்கள் பிரம்மோற்சவமும், சிவபெருமானுக்கு வைகாசி மாதத்தில் 11 நாள்கள் பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.

வைகுந்த ஏகாதசி, முத்தங்கி சேவை, திருவாதிரை, பங்குனி உத்திர  பவித்ரோத்சவம், ஜேஷ்டாபிஷேகம்,  ஹனுமந் ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி உற்சவங்கள் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஹோமங்கள்

இத்திருக்கோயில் குருபகவான், கல்விக்கடவுள் சரஸ்வதி திருக்கோயிலாக விளங்குவதால் குருப்பெயர்ச்சி காலத்தில் பரிகார ஹோமங்களும், முழு ஆண்டுத் தேர்வுக்கு சிறப்பு ஹோமங்களும்  நடைபெறுகின்றன.  இக்கோயிலில் சனி பகவான் குரு, காலபைரவர், பிச்சாண்டேசுவரரின் நேரடி பார்வையிலும், மகாலிங்கத்துக்கும், மகாகணபதிக்கும் நடுவில் கிழக்குத் திசையில்  அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இதனால் இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விசேஷமானதாகும். இக்காலத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

நேர்த்திக் கடன் நிறைவேற்றம்

இத்திருக்கோயிலில் பிரார்த்தனை செய்து, தங்களது வேண்டுதல் நிறைவேறியோர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, நிவேதனம் படைத்துத் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

தல விருட்சம்

கதலி மரம் இத்திருக்கோயிலின் தல விருட்சமாகும்.  பல வாழைகளைக் கொண்டது கதம்பவனம். அதனால் இத்திருக்கோயிலில் கதலிமரம் தலவிருட்சமாக உள்ளது.  தீர்த்தம் கதம்பத் தீர்த்தமாகும்.

நடைதிறப்பு

வியாழக்கிழமை:

காலை 6  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

மற்ற நாள்கள்:

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை காலங்கள்

 
விஸ்வரூபம் - வியாழக்கிழமைகளில் காலை 6, 
                                மற்ற நாள்களில் காலை 7
காலசாந்தி - வியாழக்கிழமைகளில் காலை 6.15, 
                             மற்ற நாள்களில் காலை 8.30
உச்சிக்காலம் - வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2,
                                    மற்ற நாள்களில் நண்பகல் 12
சாயரட்சை - வியாழக்கிழமைகளில் மாலை 6.30,
                              மற்ற நாள்களில் மாலை 6.30
அர்த்தசாமம் - வியாழக்கிழமைகளில் இரவு 9,
                                  மற்ற நாள்களில் இரவு 8.15.

போக்குவரத்து வசதி

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்து வருவோர் நெ.1 டோல்கேட்டில் இறங்கி நகரப் பேருந்தில் செல்லலாம். 

மதுரை  உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலிருந்தும் வருவோர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர்ப் பேருந்து மூலமாக டோல்கேட் வந்து கோயிலுக்குச் செல்லலாம். 

மத்திய மாவட்டங்களிலிருந்து வருவோர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயில் வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலமாகவும் வரலாம்.  

பயணிகள் ரயிலில் வருவோர் உத்தமர் கோயில் ரயில் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.

விமானத்தில் வருவோர், திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலைவழி கோயிலை அடையலாம்.

தொடர்பு முகவரி

 அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில்,
பிச்சாண்டார்கோயில் (உத்தமர் கோயில்),
மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.
தொடர்பு எண்கள்: 0431- 2591486, 2591405.

படங்கள் : எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்