தோஷம் போக்கும் வல்லம் ஏகௌரியம்மன் திருக்கோயில்

இத்தலத்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து  தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வல்லம் ஏகௌரியம்மன்
வல்லம் ஏகௌரியம்மன்

தஞ்சாவூர் நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அப்போது, முற்காலச் சோழர்களால் அமைக்கப்பட்ட கோயில்தான் வல்லம்  ஏகௌரியம்மன் கோயில்.

சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்துக் காளியாகவும் விளங்கியவள்தான் இந்த  ஏகௌரியம்மன்.

வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகால்சோழ மன்னனால் கரிகாற் சோழ மாகாளி என்றும், பராந்தக சோழனால் வல்லத்துப் பட்டாரகி என்றும், ராஜராஜ சோழனால் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தவள்.

சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூடப் போர்க்களம் செல்லும்போதும் இந்தத் தேவியிடம் அருள்வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம் எனப்படுகிறது.

வல்லம் ஏகௌரியம்மன் கோயில்
வல்லம் ஏகௌரியம்மன் கோயில்

காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்தத் தேவி ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தத்துடன் இன்னொரு முகமும்  அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது.

கோயில் நுழைவு வாயில்
கோயில் நுழைவு வாயில்

1987 ஆம் ஆண்டில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள எசாலம் என்ற ஊரில் கிடைத்த செப்பேட்டுத் தொகுதியில் முதலாம் ராஜேந்திர சோழனின் அரச இலச்சினை (முத்திரை) பொறிக்கப்பட்டுள்ளது. அதில் முற்காலச் சோழ மன்னர்களின் வம்சா வழிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வல்லப சோழ மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது. அதில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கரிகால்சோழ மன்னன் காலத்தில் வல்லம் ஏகௌரியம்மன்  கரிகால் சோழ மாகாளி என அழைக்கப்பட்ட விவரம் கூறப்பட்டுள்ளது. அதுபோல, முதலாம் ராஜராஜ சோழனின் ஆறாவது ஆண்டு (கி.பி. 991) கல்வெட்டில்  அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது.

பாண்டிய மன்னனுக்குக் குலசேகர தேவர் தனது 13 ஆவது ஆட்சி ஆண்டில் வல்லத்துப் பிடாரியான கரிகால் சோழ மாகாளிக்கு (ஏகெளரி) ஒரு வேலி நிலம்

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

தானம்  செய்தது குறிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1535 ஆம் ஆண்டில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் மிகச் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகெளரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர். இவ்வாறு புராணப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும்  கொண்டது வல்லம் ஏகௌரியம்மன் கோயில்.

புராணக் கூற்று

தஞ்சன் என்ற ஒரு அரக்கன், சிவனை நினைத்துக் கடுந்தவம் புரிந்தான். தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் எனக் கேட்டார்.  பெண்களைத் தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றார் தஞ்சாசுரன். அதைக் கேட்ட சிவனார் சிரித்தார். அப்படியானால் உன்னை  பெண் ஒருத்தி வென்றால் பரவாயில்லையா எனக் கேட்டார். அதற்குத் தஞ்சன் ஆண்களை வெல்ல பெண்களால் முடியாது. அதனால்தான் அப்படியொரு வரம்  கேட்டேன் என்றான்.

கோயில் வளாகம்
கோயில் வளாகம்

பெண்மையைக் கேவலமாக நினைத்த தஞ்சனுக்குத் தன்னுள் பாதியாக இருந்த பார்வதி தேவி மூலம் பாடம் புகட்ட எண்ணினார் இறைவன். அப்படியே ஆகட்டும்,  உன்னை ஒரு பெண்ணைத் தவிர யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார். அந்த வரமே சாபமாகப்போவது அப்போது அசுரனுக்குத் தெரியாது.

கோயில் வளாகம்
கோயில் வளாகம்

எனவே, வரைமுறை இன்றி மனிதர்களையும், தேவர்களையும் இம்சிக்கத் தொடங்கினான். தேவர்கள் அழுதபடி சிவனைச் சரண் அடைந்தனர். அவர்களுக்கு  ஆறுதல் கூறிய சிவன், பெண்மையே சக்தி என அறியாத பேதை அரக்கன் அவன். அவன் அழியும் நேரம் வந்துவிட்டது. கவலைப்படாதீர்கள் என்றார். பார்வதி  தேவியை அழைத்து அசுரனை அழிக்க ஆணையிட்டார்.

கோயில் வளாகம்
கோயில் வளாகம்

அசுரனின் அக்கிரமங்களை அறிந்த தேவியின் முகத்தில் உக்கிரம் ஏற, எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை நோக்கிப் புறப்பட்டாள் தேவி. இதையடுத்து,  அசுரனுக்கும், தேவிக்கும் கடும் போர் மூண்டது. இதில், அசுரனை வதம் செய்தார் தேவி. உயிர் பிரியும் நேரத்தில் அசுரன், தேவியைப் பணிந்து பெண்மையை  இழிவாகப் பேசிய என்னை மன்னிக்க வேண்டும் என்றும், இந்தப் பகுதி என் பெயரால் தஞ்சாபுரி என வழங்க வேண்டும் எனவும் வேண்டினான். அப்படியே வரம்  தந்தேன் என்றாள் தேவி.

கோயில் வளாகம்
கோயில் வளாகம்

பகைவருக்கும் அருளும் பார்வதியே காளியாக வந்தது, அசுர வதம் முடிந்த பின்னும் அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அப்போது, மாங்காளி வனம் என  அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்து திரிந்தாள். அதனால், நீர் நிலைகள் வறண்டன. வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான்,  ஏகெளரி சாந்தம் கொள் என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது. அப்போது, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அங்கேயே  எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளின்படி, அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறார்.  அம்மன் அசுரனை வதம் செய்தது ஆடி கடைசி வெள்ளிக்கிழமை. எனவே, அன்றைய நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனைச்  சாந்தப்படுத்துகின்றனர்.

சன்னதி முகப்பு
சன்னதி முகப்பு

எலுமிச்சைப் பழமும் மஞ்சள் கிழங்கும்

தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை  உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்குப் புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர்.  அதிலிருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நாள்தோறும் அம்மன் நம்  கூடவே இருந்து காப்பாற்றுகிறாள் என்பதும் ஐதீகம்.

எனவே, கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதேபோல, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதன் சாற்றைக் கோயிலிலேயே சாப்பிட்டுச்  செல்ல, விரைவில் குழந்தை பிறப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில்  மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

எருமைக் கன்று காணிக்கை

தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்ட கணவருக்காக வேண்டிக்கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிடமிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்  கடனாக எருமைக் கன்றைக் காணிக்கையளித்து வழிபடுகின்றனர். மேலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளாடை உடுத்தி, விரதம் இருந்து பால்குடம்  எடுத்து வந்து தீ மிதிக்கின்றனர்.

அசுரனை அம்மன் வெற்றி கொண்டது ஒரு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது ஐதீகம். அன்றைய நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம்  ஏந்தியும், அலகு, செடில் குத்தியும் வந்து தீக்குண்டம் இறங்கி ஏகெளரியம்மனை வழிபடுவது வழக்கம்.

கோயில் திருக்குளம்
கோயில் திருக்குளம்

சிறப்பு ஹோமம்

மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம். இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர்.  ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கிரகக் கோளாறுகளால் துன்பம் அடைபவர்களும் இந்த அற்புத ஹோமங்களில் பங்கு கொண்டு  பலன் பெறுகின்றனர்.

ராகு, கேது தோஷம் நீங்க

கருவறையில் ஏகெளரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு,  கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து  தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில் நடை திறக்கும் நேரம்

காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பெளர்ணமி நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை

போக்குவரத்து வசதி

தஞ்சாவூரிலிருந்து தஞ்சாவூர் - திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லம் என்ற பேரூரிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில்  ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கோயில். இக்கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய பேருந்து  நிலையத்திலிருந்து வல்லம் செல்லும் பேருந்தில் ஏறி, வல்லம் பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆலக்குடி நோக்கிச் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.

ரயிலில் வருபவர்கள் ஆலக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி 3 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான  நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக திருச்சி - தஞ்சாவூர் சாலையில் வல்லத்துக்கு முன்புள்ள ஆலக்குடி பிரிவு சாலையில் திரும்பி, இக்கோயிலுக்குச்  செல்லலாம்.

முகவரி

அருள்மிகு ஏகெளரியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில்

வல்லம் (அஞ்சல்)

தஞ்சாவூர் மாவட்டம் - 613 403

தொடர்பு எண்: 7373622817

படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com